அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்ததால், அந்த கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார். புதிய முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சி பதவியேற்றார். இந்த நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல் – மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் நிதிஷ் குமாருக்கும், மாஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஜிதன் ராம் மாஞ்சி அறிவித்ததால், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் மாஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய முதல்– மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்தும் மாஞ்சி நீக்கப்பட்டார். இதனிடையே பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார், தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தார். ஆனால் ஆளுநர் திரிபாதி அதை ஏற்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார். இதனால் நிதிஷ் குமார் தன்னை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களை தில்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். பீகாரில் குதிரை பேரம் நடப்பதை தடுக்க உடனே ஆளுனர் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் அதை கேட்டுக் கொண்டாரே தவிர எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் நிதிஷ் குமாரை புதிய முதல்வராக பேரவைத் தலைவர் ஏற்றது செல்லாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் அறிவித்தது. இவை எல்லாம் நிதிஷ்குமார் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஆளுநர் திரிபாதி தொடங்கினார். பீகார் சட்டசபை வரும் 20–ந்தேதி கூடும்போது, முதல்–மந்திரி மாஞ்சி தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பீகார் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓரிரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே பீகார் சட்டப் பேரவையில் நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டப் பேரவையில் தற்போது 233 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாஞ்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். இந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மாஞ்சிக்கு கிடைக்குமா? என்பது இதுவரை உறுதியாகவில்லை. ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் மொத்தம் உள்ள 111 எம்.எல்.ஏ.க்களில் மாஞ்சிக்கு 14 எம்.எல்.ஏ.க் கள் ஆதரவே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே 87 எம்.எல்.ஏ.க்களைத் தன் வசம் வைத்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி ஆதரவு கொடுத்தால்தான் மாஞ்சி முதலமைச்சர் பதவியில் நீடிக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால் பாரதீய ஜனதாக் கட்சி 20–ந்தேதி பலப்பரீட்சை நடக்கும் போதுதான் தன் முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது. ஒரு வேளை மாஞ்சியை பாரதீய ஜனதாக் கட்சி ஆதரித்தாலும் 117 எம்.எல்.ஏ.க்கள் பலத்தைப் பெற மேலும் சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும். தற்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும், காங்கிரசும் நிதிஷ்குமாருக்கே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளன. இருப்பினும் லாலு கட்சியில் ஒரு சாரார் மாஞ்சிக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் லாலு பிரசாத் யாதவிடம், நவம்பர் மாதம் தேர்தலை சந்திக்க வேண்டியதிருப்பதால் நிதிஷ் குமாருக்கு பதில் மாஞ்சியை ஆதரிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். எனவே 20–ந்தேதி பலப்பரீட்சை நடக்கும் போது லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருசாரார் மாஞ்சிக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. பொதுவாக சட்டப் பேரவையில் பலப் பரீட்சை நடத்தப்படும் போது ரகசிய வாக்கெடுப்பு முறையை கையாள்வர். சில சமயம் குரல் ஓட்டெடுப்பு. இவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதுண்டு. மாஞ்சி குரல் வாக்கு அல்லது ரகசிய வாக்களிப்பு முறை இரண்டில் ஏதாவது ஒன்றின் மூலம் நடத்தலாம் என்று ஆளுநர் திரிபாதி அறிவுறுத்தியுள்ளாராம். இந்த இரண்டில், ஜிதன் ராம் மாஞ்சி குரல் வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கலாம். தற்போதைய பீகார் அவைத் தலைவர் நிதிஷ்குமாரின் ஆதரவாளர். அவர் பலப் பரீட்சை நடத்தப் படும் நாள் அன்று எவ்வாறு நடந்து கொள்வார் என்பது தெரியாது. மிகுந்த எதிர்பார்ப்பு இப்போது அவர் மீது ஏற்பட்டுள்ளது உண்மை. எல்லாமே அரசியல் என்றான பின்னர், நாம் தார்மீக நெறிமுறைகளை எப்படி எவ்வாறு அனைவரிடமும் எதிர்பார்ப்பது? இவ்வாறு கருதக் காரணம் இல்லாமல் இல்லை… நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நின்று, மக்களால் முதல்வராக முதலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் முதல்வர் பதவியில் இருந்த போது, பீகாருக்காக என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து செய்தாரோ… அவ்வாறன்றி, என்ன செய்யக் கூடாதோ அதையும் செய்துவிட்டார். அதற்கான முதல் காரணம் – அவர் மனத்தில் ஏற்பட்ட பொறாமை உணர்வு. மோடியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட பொறாமை உணர்வு. எப்போது ஒருவரின் மனத்தில் பொறாமை உணர்வு தலை தூக்குகிறதோ, அவர் தன் மீது நம்பிக்கை இல்லாதவர் என்றாகிவிடுகிறது. அவ்வாறு அவர் கொண்ட பொறாமை உணர்வில், பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த போது, 17 ஆண்டுகால நெடுநாள் கூட்டணியை விட்டுத் தான் கழன்று கொள்ள முதல் ஆளாக நின்றார் நிதிஷ் குமார். அவர் செய்த முதல் தவறு அது. ஆனால், அவரது தவறே மோடிக்கு பீகாரில் பெரும் ஆதரவையும் பெற்றுத் தந்தது என்று தோன்றுகிறது. மகாபாரதம் ஒரு காட்சியைக் காட்டும். போர்க் களத்தில் சக்கரவியூகத்துள் மாட்டிக் கொண்ட அபிமன்யு, சிறுவனான ஒரு வீரன். ஆனால், அவனைச் சுற்றி நின்ற மகா வீரர்கள், பெரும் போர்த் தந்திரம் கொண்டவர்கள், ஆதரவற்ற நிலையில் நின்றவனை கூட்டத்தோடு கூட்டமாக வலுவாக நின்று எதிர்த்து அதர்மமான முறையில் கொன்று தீர்த்தனர். இதுவே, அபிமன்யு மீது மேலும் பரிதாப உணர்வு வரக் காரணமாயிற்று. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளால் பெருவாரியாக ஒதுக்கப்பட்ட மோடியும், தற்போதைய தில்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வென்றதும், சாதாரண மக்களிடம் ஏற்பட்ட இந்தப் பரிதாப உணர்வினால்தான்! நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.ஜனதாக் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தானே முன்வந்து வலிய ராஜினாமா செய்தது, நிதிஷின் அடுத்த தவறு. அதன் பின்னரும், தன் பினாமியாக இருத்தும் வகையில், தன் ஆதரவாளர் ஜிதன் ராம் மாஞ்சியை பொம்மையாக நினைத்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்து, அவர் வாய் மூடி தன் புகழையே பாடிக் கொண்டிருப்பார் என்று நினைத்து செயல்பட்டது நிதிஷின் அடுத்த தவறு. ஒரு பொறுப்புக்கு வந்துவிட்டால், எந்த ஒரு சுயமரியாதை உள்ளவருமே, அந்தப் பொறுப்புக்கு ஏற்றபடி தனது திறமையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெளிக்காட்டவே முனைவார்கள். ஜிதன் ராம் மாஞ்சியும் அப்படித்தான் செய்தார். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, தான் ஒரு தலித் என்பதால்தான் தான் சென்று வந்தபின்னர் கோயிலைக் கழுவி விட்டார்கள் என்று முன்னர் நடந்த கதையைச் சொல்லி அனுதாபத்தைத் தேடிக் கொண்டார். அரசியல்தான் என்று வந்தபின்னர், தனக்கென ஒரு பாதையையும் தனக்கென ஒரு ஆதரவாளர் கூட்டத்தையும் அவர் வளர்த்துக் கொள்ள முற்பட்டதில் எந்தத் தவறும் இல்லைதான். சொல்லப் போனால், பீகார் அரசியல் தமிழக அரசியலை விட சுயமரியாதை மிக்க அரசியல் என்பதை வெளிக்காட்டிவிட்டது. ஆனால், தமிழகத்திலோ இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டும், சுயமரியாதை பற்றிப் பேசும் திராவிடக் கட்சிகள்தான், அதை முழுவதுமாக இழந்து, கட்சியின் ஒற்றை நபருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு முதுகு வளைந்து கூனிக் கிடப்பது. அந்த அளவில், ஜிதன் ராம் மாஞ்சியின் சுயமரியாதையும் முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே! இங்கே நிதிஷ் குமார் தனது சுயநல புத்தியையே காட்டிக் கொண்டிருக்கிறார். மாஞ்சியை நிதிஷ் முதல்வராக்கினார் என்றால், அவர் நிதிஷுக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டுமா என்ன? மாஞ்சி தனக்கென ஓர் ஆதரவு அடித்தளம் அமைத்துக் கொள்ளக்கூடாதா என்ன? சொல்லப் போனால், நாம் முன்னரே கூறியது போல், அடுக்கடுக்கான தவறுகளைப் புரிந்தவர் நிதிஷ் குமார். பாஜகவுடன் ஆதரவைத் துண்டித்தது, தோல்விக்குப் பொறுப்பேற்று தாமே ராஜினாமா செய்தது, தன்னை முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த பீகார் மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாமே அவரது ஆணவத்தையே காட்டுகிறது. அதை விட மோசமாக, பல்லாண்டுகள் தன் அரசியல் எதிரியாக களத்தில் இருந்த லாலு பிரசாத் யாதவுடன் கைகோத்து, களம் கண்டது. ஆனால், இதே நிதிஷ் குமார்தான், பீகார் மக்களால் நம்பிக்கை மிக்க மாமனிதராகத் தெரிந்தார். பீகாரில் இரண்டாவது முறையாக தொடர்ந்து மக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதே, அதுவும் மிகச் சிறந்த ஆதரவு சதவீதத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட போதே… அவரது செல்வாக்கு அப்போது வெளித் தெரிந்தது. ஆக, மற்ற எல்லாவற்றையும் விட இன்றைய பீகாரின் அரசியல் குழப்பத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது – ஜிதன் ராம் மாஞ்சியோ, பாஜகவோ, மோடியோ, ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சியினரோ.. ஏன் நிதிஷோ கூட அல்ல… ஒன்றே ஒன்றுதான்! அது – நிதிஷ் குமாருக்கு திடீரென முளைத்துவிட்ட அந்தப் பொறாமை குணமே!
பீகார் அரசியல் குழப்பம்: காரணம் யார்?
Published:

