
கடந்த வருடம் காவல்துறை எஸ். ஐ., தேர்வுகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு ஒரு பட்டியல் வெளியாகி அதை உயர்நீதிமன்றம் கண்டித்தது. அதன் பின்னர் பட்டியல் திருத்தப்பட்டது. ஆனால், அதை நீதிமன்ற ஆணைக்குப் பின்னும் தாக்கல் செய்யமுடியாத அளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, ஏடிஜிபி கல்பனா நாயக் விசாரித்தார்.
இது தொடர்பாக அறிக்கைகளை தயார் செய்துவந்த அவரது அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் சென்ற ஜூலை மாதம், தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. மேலும் இறுதி தேர்வாளர்களின் பட்டியல் அவரது பார்வைக்குச் செல்லாமல் வெளியிடப்பட்டது. இது குறித்துப் பேசிய ஏடிஜிபி கல்பனா நாயக், தன்னைக் கொலை செய்ய நடந்த சதி தான் இது. தான் சில நிமிடங்கள் தாமதமானதால் தப்பித்தேன் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இரும்புக்கரம் எதற்குப் பயன்படுகிறது? என்று தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…
தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்; போலீஸ் உயர் அதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை. நீதியை நிலை நிறுத்த வேண்டிய முதல்வரின் இரும்புக்கரம், உண்மையை மறைப்பதற்குப் பயன்படுகிறது – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலைமையின் தீவிரம் உணர்ந்து ஸ்டாலின் மாடல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.
தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது , இந்த செயலுக்கு திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?
ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, திரு. ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி! என்று, அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
இத்தகைய பின்னணியில், அண்ணாமலை குறிப்பிட்டவாறு ஸ்டாலினின் இரும்புக் கரம் எதற்கு பயன்படுகிறது என்று சமூகத் தளங்களில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு, பலரும் பல விதங்களில் பதில் கூறி வருகின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டே வந்தால், ஸ்டாலின் குறிப்பிட்ட இரும்புக் கரம், ஓட்டை உடைசல் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் வாங்கித் தின்னத்தான் லாயக்கு என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
உண்மையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏடிஜிபி.,யிடம் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.
மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை அதிகாரத்தில் உள்ளவருக்கே இந்நிலை என்றால், எளியவர்களின் பாடு இந்த மாடல் ஆட்சியில் என்ன பாடு படும் என்று கேள்விகளை முன்வைக்கிறார்கள் பலரும்! அதுவே நம் கேள்வியும் கூட!