
“பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறோம். பகுத்தறிவின் அடிப்படையில் சமூகத்தை கட்டமைக்க பார்க்கின்றோம். கோவில் திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் செல்வது உண்மையிலேயே நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது. ‘நீ பார்வையாளராக இருக்காதே, பங்கேற்பாளராக இரு’ என்ற பழமொழி உண்டு” என்பதை பின்பற்ற வேண்டும்” – இவ்வாறெல்லாம் பேசியிருப்பவர் யாரோ ஒரு தெருவோர மதப் பிரசாரகரோ அல்லது நான்கு அறைக்குள் வீராவேசம் பேசும் ஏதோ ஓர் இயக்கத்தவரோ இல்லை; தமிழகத்தின் ஆளும் கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஓர் அமைச்சர், அதுவும் வெளியேற்றப்பட்டு மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்.
பெங்களூருவில் உள்ளூர் அணியான ஆர்சிபி அணி, ஐபிஎல் 2025 போட்டியின் கோப்பையைக் கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த பரிதாபச் சூழல் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் விளக்கம் தான் இது.
அவரது இந்தக் கருத்து பெரும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரம் இக்கருத்தை வெளிப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், ஊடகத்தினர் தனது கருத்தைப் புரிந்து கொண்டு மேலும் கிளறாமல் மலிவு அரசியல் செய்ய வேண்டாம் என்றும் சமூகத் தளப் பக்கத்தில் வேண்டுகோள் வைக்கிறார். கேட்டது ஒரு கேள்வி, சொன்னது ஒரு பதில், இதில் சம்பந்தப் பட்ட நபரின் மனத்தில் உறைந்துள்ள மத ரீதியான விஷம் வெளிப்பட்டிருக்கிறது. எனினும் இதை கேட்டு சகித்துக் கொண்டு, எல்லோரும் அமைதியாகிப் போய் விடவேண்டுமாம்! என்ன ஒரு கோரிக்கை!?
இவரது அர்சியல் கருத்துக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.,! அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், பகுத்தறிவு, வெங்காயம் என்று பதில் அளித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
இதை அடுத்து, பாஜக., மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில், “கோவிலுக்கு செல்வது அநாகரீகம், ஆனால், சர்ச்சுகளுக்கு செல்வது நாகரீகமா? இவர் சர்ச்சுகளுக்கு செல்வார், ஆனால் மக்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்வார். தைரியமிருந்தால் இனி யாரும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளுக்கு செல்லாதீர்கள், வேளாங்கன்னி திருவிழாவுக்கு செல்லாதீர்கள் என்று கூற முடியுமா? குருத்தோலை ஞாயிறு திருவிழாவுக்கு கிருஸ்துவர்கள் செல்ல வேண்டாம் என்று கூற துணிவு உண்டா? ஹிந்து விரோத எண்ணமும், கிருஸ்துவ மதவாதமும் ஒருங்கே கொண்டிருக்கும் இவரை அமைச்சராக்கியது தான் பிரச்சினையே! மனோ தங்கராஜ் ஒரு மதவாதி என்பதற்கு இந்த பேச்சே சாட்சி. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மதவாதி யார் என்று இப்போது தெரிந்து விட்டது. அமைச்சர் பதவியை விட்டு விலக்கி பார்வையாளர் யாரையாவது அமைச்சரவையில் பங்கேற்பாளராக்குவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மனோ தங்கராஜின் இந்தக் கருத்துக்கு சமூகத் தளங்களிலும் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அமைச்சரின் இந்தக் கருத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் புனிதமாகக் கருதப்படும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் உரிமைகளை மறைமுகமாக அவமதிக்கும் வகையில் இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, மக்களுக்கு மதச் சுதந்திரத்தை வழங்குகிறது, இதில் மத வழிபாடு மற்றும் மத நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் அடங்கும். அரசு அமைப்புகளின் கீழ் இயங்கும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் மக்கள் கூடுவது அவர்களின் அடிப்படை உரிமை.
அமைச்சரின் கருத்து, மக்களின் மத நம்பிக்கைகளை “நாகரீகமற்ற” செயலாகச் சித்திரிப்பதாகவும், அது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை மறைமுகமாகக் குறைத்து மதிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 51A(e) (பிறர் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற கடமை) ஆகியவற்றிற்கு முரண்.
இவரது பேச்சு நீதிமன்றம் சென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மதச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை (பிரிவு 19) ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான சமநிலை பரிசீலிக்கப்படக் கூடும்!
இதில் உயிரிழந்தவர்கள், இந்த அமைச்சரின் கூற்றுப்படி, வெறும் பார்வையாளராகவே இருந்திருந்தால் வீட்டில் அமர்ந்து கொண்டு டி.வி. பெட்டிகளில் மொபைல் போன்களில் பார்த்துவிட்டு சந்தோஷமாக இருந்திருப்பார்கள். ஆனால் இவர்களைப் போன்றோர் சொல்லும் பங்கேற்பாளனாக இரு என்ற சொல் பேச்சைக் கேட்டுத்தான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருக்க ஆசைப்பட்டு, நேரில் சென்று இந்தத் துன்பத்துக்குக் காரணமானார்கள். அதற்கான போதனைகளைச் செய்தது இவர்களைப் போன்ற பகுத்தறிவாளர்கள் தான் என்று சொல்லவே தோன்றுகிறது.
விடுமுறைகள் முடிந்து தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் மக்கள் இப்போது திமுக., அரசால் ஊருக்கு வெளியே திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிகிறார்கள். அவர்களுக்கு ஊர் திரும்புவதற்கு வசதி செய்து தரவேண்டியது மாநில அரசு. அதன் கையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகம். அந்தக் கடமையில் இருந்து அரசு தவறி, பேருந்துகள் இயங்காமல் மிகச் சில மணி நேரங்களில் கூட்டம் கூடுகிறது. கூடியது மக்கள் தவறல்ல! கூட்டம் சேர்த்தது அரசின் தவறு. அவர்களிடம் போய், நீங்கள் இப்படி ஒன்றுபோல் ஒரே நேரத்தில் கூட்டமாக வரக்கூடாது, இது பகுத்தறிவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பீர்களா என்ன?
மொத்தத்தில், இது ஓர் அநாகரிகக் கூட்டம்! பிறர் மனத்தைப் புண்படுத்தும் அரக்கத்தனமே தெரிகிறது! இவர்களுக்கு பகுத்தறிவு என்பது திருடனே மற்றனைப் பார்த்து திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு கூட்டத்தில் கலந்து தப்பிக்கும் சங்கேத வார்த்தை!





