
ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணம் செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடை உத்தரவு காரணமாக, பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
மேலும் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணம் சீருடை புத்தகங்களுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்தச் சொல்லி நிர்பந்திப்பதாகவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தி கட்டண வசூலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை எடுப்பதுடன் அதற்காக கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களையும் மாணவர்களையும் நிர்பந்திப்பது புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 2019-20 மற்றும் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கட்டணத்தை செலுத்த சொல்லி தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்ய கூடாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும் கல்விக்கட்டணம் செலுத்த சொல்லியும் ஆன்லைன் வகுப்புக்கான கட்டணம் செலுத்த சொல்லியும் நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.