
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில், தாய் மற்றும் அவரது மூன்று மகள்களின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், பெண்ணின் பெற்றோர், கணவர் வீட்டினர் கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
உயிரிழந்த ரூபி தேவி (28)யின் உடலில் காயங்கள் காணப்பட்டும், கணவரை இன்னும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவில்லை.
பங்கலிபாரா கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கடந்த புதன்கிழமை ரூபி தேவி மற்றும் அவரது மகள்கள் அமிர்தா (6), ரிதிகா (3), கஞ்சன் (2) ஆகியோரது உடல்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை, ரூபி தேவியின் கணவர் தீப் சௌதரி, தனது மாமனாரிடம், மனைவி, தனது மூன்று மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால், 10 கி.மீ. தொலைவில் இருக்கும் பெற்றோர் வீட்டுக்கு ரூபி தேவி வராததால், அக்கம் பக்கத்தில் தேடியபோது, அவர்கள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால், ரூபியை அவரது கணவர் குடும்பத்தார் துன்புறுத்தி வந்ததாகவும், இது கொலையாக இருக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.