
திருச்சியில் இருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சியை நோக்கித் திருப்பப் பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் வானில் 21 முறை வட்டமடித்துக் கொண்டிருந்ததாக அங்குள்ளவர்கள் கூறினர்.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், சக்கரங்கள் உள்நோக்கி இயங்கமுடியாதபடி ‘ஹைட்ராலிக் ஃபெய்லியர்’ ஏற்பட்டது. இதை அடுத்து விமானம் தரையிறங்க முடியாமல் போனது. இதனால் விமானத்தின் எரிபொருளைக் குறைக்கும் முயற்சியில் விமானப் பணியாளர்கள் இறங்கினர். நிறைவாக, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

Aircraft landed safely at 1444 UTC PAX 150
AXB 613, Trichy to Sharja, REG/VTAYB, POB/150, ATD/1213. After airborne, aircraft informed hydraulic failure. Aircraft still holding at 4000ft south of Trichy for fuel burning. Full emergency Declared at 1235UTC.
விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்த நிலையில், நடுவானில் வட்டமடித்த விமானத்தில் நடந்த பரபரப்பான நிமிடங்களை பயணிகள் விவரித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், நாங்கள் ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாகவே நினைத்தோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை.”
“விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதன் பிறகு தான் விமானம் தரையிறங்குவதில் பிரச்னை உள்ளது என்று கூறினர். மேலும், பதட்டம் அடையாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அறிவுறுத்தினர்.”
“சிறிது நேரத்திற்கு விமானத்தின் மின் விளக்குகள் பலமுறை அணைந்து, மீண்டும் எரிந்தன. பிறகு விமானம் தரையிறங்கியது,” என்று தெரிவித்தார்.
விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறங்கியதில் உறவினர்களும், மக்களும், ஊழியர்களும் ஆராவாரமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைத்து பயணிகளும் பத்திரமாக உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.





