
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையாததால் இந்த ஆண்டும் உரிய நாளில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
2011-&ஆம் ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்ததால் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து குறிப்பிட்டக் காலத்தில் தண்ணீர் திறக்கப்டவில்லை. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 10 பருவ சாகுபடி நடந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று பருவ சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு ஈடு செய்யவில்லை.
கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை பெய்து வந்தாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக மழை பெய்யவில்லை. இதனால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் கபினி அணை முற்றிலுமாக வறண்டு விட்டது. மீதமுள்ள கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 3 அணைகளிலும் சேர்த்து இன்றைய நிலவரப்படி மொத்தம் 4.46 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதேபோல், நான்கு அணைகளுக்கும் சேர்த்தே இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 932 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய அடுத்த ஒரு மாதத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன்பிறகு தண்ணீர் வந்தாலும் கூட நாற்று வளர்த்து நடவு நட்டு அறுவடை செய்வதற்குள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை பயிர்களை அழித்துவிடும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலாவது தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பில் நாற்று வளர்த்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்யவும் உழவர்கள் தயாராக இல்லை. காரணம் கடந்த காலங்களில் இப்படி செயல்பட்டதில் அவர்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
நடப்புக் குறுவைப் பருவம் சாகுபடி செய்யப்படாவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் ரூ.3000 கோடிக்கும் அதிகமாக உழவர்களுக்கு இழப்பு ஏற்படும். கடந்த ஐந்தாண்டுகளாக அடுத்தடுத்து விவசாயம் தோல்வியடைந்து விட்டதால் கடனாளியாகித் தவிக்கும் உழவர்கள் இன்னொருமுறை இத்தகைய ஆபத்தான முயற்சியில் ஈடுபடத் தயாராக இல்லை. எனவே, மீண்டும் மீண்டும் தமிழக அரசுக்கு பாட்டாளி முன்வைக்கும் கோரிக்கை உழவர்களைக் காப்பாற்றுங்கள் என்பது தான். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் பெரிய விவசாயிகள் வாங்கியப் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதைப் பார்க்கும் போது உழவர்களின் துயரங்களை உணர்ந்ததாக தெரியவில்லை.
உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை அவர்கள் இப்போது எதிர்கொண்டு வரும் துயரத்திலிருந்து காப்பாற்றா விட்டால், பின்னாளில் உணவின்றி நாம் தவிக்கும் போது நம்மைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள். இதை உணர்ந்து பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரியில் தடையின்றி தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்தல், உழவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரை: மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞரணித் தலைவர்



