சென்னை:
செய்தி சேனல்களில் நிகழ்த்தப் படும் விவாதங்கள், அலசல்கள் குறித்து பல விதங்களில் அதிருப்தி நிலவுகின்றன. இந்நிலையில், அண்மையில் நியூஸ் 7 என்ற செய்தி சேனலில் நிகழ்த்தப் பட்ட யோகா குறித்த விவாதம் பெரும் புயலைக் கிளப்பியது.
அதில் பங்கேற்ற தி.க.வைச் சேர்ந்த எழுத்தாளர் மதிமாறன், யோகா 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்களின் திணிப்பு என்று கூறி, சாதிப் பெயர் சொல்லி அவதூறு கிளப்பினார். இதனைக் கண்டித்த பாஜக.,வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, சாதிப் பிரச்னையை கிளப்பும் ஒருவரை ஓர் ஊடக நெறியாளர் கண்டிக்காமல் அதை மேலும் மேலும் அனுமதிப்பது, குறிப்பிட்ட சாதி, மதத்தினரை அவமதிப்பது போலானது என்றார். இந்த வாக்குவாதம் வெகு நேரம் நீண்டதால், விவாதம் பாதியிலேயே முடித்து வைக்கப் பட்டது.
இந்நிலையில், யோகா – ஒரு மதத் திணிப்பு; ஹிந்தி – ஒரு மொழித் திணிப்பு என்றெல்லாம் கூறி நாட்டில் பிரிவினையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகள், திக.,போன்றவர்களுக்கு நடுநிலையாளர்களும் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த விஷயம் பேசப் பட்டது. தமிழ்ப் பாட நூல்களில் இனவெறியுடன் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரை, தமிழர்களையும் தமிழையும் இந்திய இறையாண்மையையும் இழித்தும் பழித்தும் பேசியதை எல்லாம் மறைத்து அவரை பெரியார் என்ற அளவில் பள்ளிப் பிள்ளைகளிடம் திணிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தங்கள் கட்சிக்காக, தங்கள் சொத்துக் குவிப்புகளுக்காக அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தவர்களை பொதுவான போராளிகள் போன்று சித்திரித்து, இவர்களை விட்டால் தமிழகத்தில் ஆளே இல்லை என்னும் அளவுக்கு பாட நூல்களில் திணித்து, அதை பெரும்பான்மை மக்களும் படிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது. யாரோ ஒரு சிலர் தங்கள் இயக்கங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய கடவுள் மறுப்புக் கொள்கைகளை பொதுவில் திணிக்கும் ஊடகங்களின் போக்கு மட்டும் திணிப்பில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக காட்சி ஊடகங்களின் ஆபத்தான போக்கு என முகநூல் பதிவுகளில் வலம் வரும் கருத்து…
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் யோகா தின ” கேள்வி நேரம் ” நிகழ்ச்சியில் தலைப்பை புறந்தள்ளி , புளுகு மூட்டை குப்பைகளை கிளறினர்.நிகழ்ச்சி இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆம்,ஒரு கட்டத்தில்…. ..Narayanan Thirupathy (BJP) விவாதத்தில் தொடர்ந்து எச்சரித்தும் கேட்காததால், தட்டிக்கேட்டு நிகழ்ச்சி தொடரமுடியாமல் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
யோகா குறித்த விவாத நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை அழைத்து பேசவைத்து, ஜாதிகளின் பேரால் திட்டமிட்ட வகையில் , இந்து ஒற்றுமை வேள்விக்கு குந்தகம் விளைவிக்க இருந்த , வீணர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.
தேசிய சிந்தனை கருத்தாளர்கள் ,விழிப்புடன் இருந்து பிரிவினை சக்திகளின் நச்சுரைகளுக்கு இனி கிஞ்சித்தும் இடந்தரலாகாது.
தமிழகம் வன்முறையாளர்களிடமும், நக்சலைட்டுகளிடமும் ,சிக்கி சீரழிய அனுமதிக்கக் கூடாது. துணிந்து நின்று எதிர்த்து செல்லவேண்டும். வில்லினை எடு வீரா……!
இந்நிலையில், தனது பேஸ்புக் பதிவுகளில் நாராயணன் திருப்பதி முன்வைத்துள்ள கருத்து…
வருந்துகிறேன்.
ஒரு சில ஊடகங்களில் பணியாற்றும் நெறியாளர்கள் (?) தங்களது முகநூல் பக்கத்தில் பாஜகவையும், பிரதமரையும் படு கேவலமாக விமர்சித்து பதிவிடுகிறார்கள் அல்லது அரசின் திட்டங்களுக்கு எதிரானவர்களாக, பாஜக வுக்கு எதிரானவர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களின் நெறியாள்கையில் பாஜகவினர் விவாதம் செய்யும் போது அவர்களுக்கும் உரிய பதிலை கொடுக்க தான் வேண்டியிருக்கிறது. அவர்களின் என்ன ஓட்டங்கள் தான் முகநூலில் வெளி வருகிறது. அவர்களை நடுநிலையாளர்களாக ஏற்க முடியாது போகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊடக தர்மம் என்பதையும், கருத்து சுதந்திரத்தையும் ஒரு சேர அனுபவிக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். தங்களின் கடமையா? தங்களின் கொள்கையா? எது முக்கியம் என்பதை பகுத்தறிந்து செயல்படும் பல ஊடகவியலாளர்கள் இருக்க தான் செய்கிறார்கள், என் முக நூல் நட்பிலும்.
இளைய தலைமுறையை, அனுபவமில்லாதவர்களை வழிநடத்தவேண்டிய அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இருக்கிறது . வழி நடத்துவார்களா?
(குறிப்பு : அவதூறான, அர்த்தமற்ற, ஆபாசமான விமர்சனங்களை தவிர்க்கவும். என் முகநூல் நட்பில் இருக்கும் ஒரு சிலருக்கான பொதுவான கோரிக்கை இது)
“கொஞ்ச காலமாகவே தொலைக் காட்சிகளில் பங்கேற்கும் பா.ஜ.க.வினர் – அதிலும் பார்ப்பனர்களின் பேச்சுத் தொனி அத்துமீறித்தான் சென்று கொண் டிருக்கிறது. நேயர்களும் இதனைக் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” : விடுதலை நாளிதழில்.
ரொம்ப காலமாகவே தொலைக் காட்சிகளில் பங்கேற்கிற முற்போக்குகள், தி க வினர் அதிலும் இடது சாரியினரின் பேச்சு தொனி அத்துமீறித்தான் சென்று கொண்டிருந்தது. நேயர்களுக்கு இதனைக் கவனித்து கொண்டுதானிருந்தார்கள்.
சரக்கு இல்லாத வெறுமையான நிலை யில், சத்தம் கொடுக்கிறார்கள் – அடுத்த வர்களைப் பேசவிடாமல் காட்டுக் கூச்சல் போடுவது என்பதெல்லாம் கடைந்தெடுத்த கோழைத்தனம்தானே! : விடுதலை நாளிதழில்.
எது கோழைத்தனம்? வயதான முதியவரின் பூணூலை அறுத்து அவரை காயப்படுத்துவது வீரமா? அல்லது சொந்த மனைவியை தாசி என்று சொல்லி அவர் பின்னால் காலிகளை அனுப்பியது கோழைத்தனமா?
கோழை கூத்தாடிகள் கோழைத்தனத்தை பற்றி பேசுவதா?
ஹிந்து கலாச்சாரத்தை கெடுத்தே தீருவோம் என்று கச்சைக்கட்டி அலையும் சிலர், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது, ஹிந்து மத எதிர்பாளர்களாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்.
கம்யூனிச (நக்சலைட்) தீவிரவாத, பிரிவினைவாத தாலிபான்களுக்கு விலைபோன தமிழக எதிர்க்கட்சிகள்- சான்று இதோ …
அன்புடையீர் வணக்கம்,
பா.ஜா.க ஊடக பங்கேற்பாளர் திரு. நாராயணன் அவர்களின் அத்துமீறல்களை கண்டித்து அனைத்து கட்சி ஊடகபங்கேற்பாளர்களின் கூட்டம் இன்று மாலை23 | 06/17 மாலை3.15 மணிக்கு கீழ்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது தாங்கள் அவசியம் கலந்து கொண்டு உங்கள் கண்டனத்தை பதிவு செய்ய அழைக்கிறோம்
இந்நிலையில், இது குறித்து நடிகரும் பாஜக.,வைச் சேர்ந்தவருமான எஸ்.வி. சேகர், தாம் இந்த நிகழ்ச்சியை அடுத்து என்ன நடவடிக்கை எடுத்தேன் என்று வாட்ஸ் அப் வாயிலாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில், நாராயணன் பேசிய பேச்சை அடுத்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் கூட்டம் போட்டு, நாராயணன் விவாதங்களில் கலந்து கொண்டால் தங்கள் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்று மிரட்டுவதையும், அதில் திமுக.,வைச் சேர்ந்தவர் பங்கேற்பதும், பிராமண எதிர்ப்பை திமுக., கைக்கொண்டிருப்பது, திமுக.,வின் கொள்கையா என்றும் மு.க.ஸ்டாலினிடம் பேசியதும், அதற்கு உடனே ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததையும் பாராட்டியுள்ளார். மேலும், நியூஸ் 7 சேனல் உரிமையாளர் வைகுண்டராஜனிடம் பேசி, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.