
மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 2)
– வேதா டி. ஶ்ரீதரன் –
முன்னோட்டம் – 2
ஒன்றரை நூற்றாண்டுகளாக உயிருடன் இருக்கும் சிவப்பு கொரோனா
பெரிதும் பேசப்படும் நூல் மனு ஸ்ம்ருதி… சில மாதங்களுக்கு முன்பு வரை நான் மனு ஸ்மிருதி படித்ததில்லை. நமது நாட்டில் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் முதலியவற்றுடன் பெரிதும் தொடர்புபடுத்திப் பேசப்படும்
ஒருமுறை ‘தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டு விஷயங்களையும் பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. ஒரு புத்தகக் கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பதிப்பகத்தின் மனு ஸ்மிருதி வெளியீடுதான் இருந்தது. எனவே, அதை மட்டும்தான் வாங்க முடிந்தது.
மேலும், இந்த வெளியீட்டை நான் பல இடங்களில் பார்த்திருக் கிறேன். எனவே, இது ‘அதென்டிக்’ என்று இயல்பாகவே நம்பினேன். வீட்டுக்கு வந்ததும், அந்தப் புத்தகப் பிரதியைக் கையில் எடுத்து ‘சும்மா’ புரட்டிப் பார்த்தேன். ‘கெர்ப்பாதான முதலியவற்றையும் பிழைக்கும் வழியையும் கற்பிப்பவன் குரு’ என்ற வரி கண்ணில் பட்டது.
கெர்ப்பாதானமும், அதன் மூலம் பிழைக்கும் வழியும் சொல்லித் தருபவன் யார்? எனக்குத் தெரிந்தவரை இது நம்ம ஊர்ப் பகுத்தறிவுகள் சமாசாரம். அப்படியானால், ‘பெரியாரிஸ்டு’களின் தந்தைக்கும் தனயன்களுக்கும் ப்ராக்டிகல் இன்ஸ்ட்ரக்டரைப் போன்ற ஒருவருக்கு குரு அந்தஸ்து கொடுத்துப் பேசி இருக்கிறாரா, மனு? அடக் கண்றாவியே, இந்தப் புத்தகத்தையா சாஸ்திரம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள் என்ற சிந்தனையே மேலோங்கியது.
கூடவே, தெய்வத்தின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் குருவைக் குறிக்கும் பல்வேறு பதங்களைப் பற்றி மகாபெரியவா கூறியுள்ள விளக்கங்களின் தொகுப்புகள் சிலவற்றைப் படித்த நினைவுகளும் வந்தன.

அதேநேரத்தில், நமது மதத்தலைவர்களைப் பொறுத்த வரையிலோ, மனு ஸ்மிருதி என்பது ஒரு முக்கியமான சாஸ்திரப் பிரமாணம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, நம் மதப் பெரியவர்களுக்கு தர்மம் குறித்த சந்தேகங்கள் ஏற்படும்போது அந்த விஷயத்தில் மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட விஷயத்தில் அது தரும் விளக்கம்தான் தர்மத்துக்கான சரியான விளக்கம் என்று ஏற்றுக் கொள்வார்கள். சாஸ்திரங்களில் இந்த அளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த நூல் அது. அப்படிப்பட்ட மனு ஸ்மிருதியிலா குரு என்பவர் இவ்வளவு கேவலமான விதத்தில் சித்திரிக்கப் பட்டிருப்பார் என்ற கேள்வியும் எழுந்தது.
எனது இத்தனை ஆண்டு கால அனுபவமும் பதிப்பகம் சார்ந்ததே. எனவே, இயல்பாகவே, இது ஏதோ மொழிபெயர்ப்புக் கோளாறாகத்தான் இருக்க முடியும் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. மொழி பெயர்க்கப்பட்ட நூலின் மூலமோ ஸம்ஸ்கிருதம். எனவே, மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு வாய்ப்பு அதிகம். அதிலும் தற்காலத்தில், பெரும்பாலான நூல்கள் மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்படுவது இல்லை. ஆங்கில வடிவத்தில் இருந்துதான் மொழிபெயர்க்கப்படுகின்றன. எனவே, ஆங்கிலப் பதிப்பில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதன் மூலத்தை எடுத்துப் பார்த்து ஐயத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்புக் குறைவு.
இதைத் தொடர்ந்து, இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் பெயரைப் பார்த்தேன்: அலைகள் வெளியீட்டகம். உடனே என் மனதில் இயல்பாகவே எழுந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்: ”ஆதாயம் இல்லாமலா சாஸ்திரம் பக்கம் போகும், சிவப்பு?”
ஆக, இது வெறும் மொழிபெயர்ப்புப் பிழையாக மட்டும் இருக்க வாய்ப்பு இல்லை. சிவப்பு நெடியும் தூக்கலாக இருக்கும் என்ற உண்மையும் உறைத்தது. வேறு பதிப்பக வெளியீடுகளைத்தான் நான் பார்க்க வேண்டும் என்பது புரிந்தது.

இருந்தாலும், பழக்க தோஷம்! ஒரிஜினல் மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது, மொழிபெயர்ப்பாளர் அதை எவ்வாறு கையாண்டிருக்கிறார், சிவப்பு அதை எவ்வாறு வெளியிட்டிருக்கிறது முதலிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நப்பாசையும் தோன்றியது. இருக்கவே இருக்கு கூகுள்!
இந்த ‘கெர்ப்பாதானம் & பிழைப்புக்கு வழி’ விஷயத்தில் ஸம்ஸ்கிருத மூலப்பிரதி சொல்வது இதுதான்:
நிஷேகாதீநி கர்மாணி ய: கரோதி யதாவிதி
ஸம்பாவயதி ச அந்நேந ஸ விப்ரோஹோ குருஹு உச்யதே. (2.142)
இதற்கான நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால், சீமந்தம் (இதில் வரும் கர்ப்பாதானம் என்ற ஸம்ஸ்காரத்தைத்தான் மனு ஸ்மிருதி குறிக்கிறது. கர்ப்பாதானம் என்ற சொல் குறிக்கும் உடலுறவை அல்ல.) முதலான சம்ஸ்காரங்களைச் செய்து வைத்து உணவும் அளிக்கும் (அநேகமாக, சீமந்தத்துக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைக்கு இருக்குமோ, என்னவோ!) மனிதரை குரு என்று சொல்லி இருக்கிறது.
இந்த சுலோகத்துக்கு முந்தைய, பிந்தைய சுலோகங்களைப் பார்த்தால், இது குரு, ஆசார்ய, உபாத்தியாய முதலான நமது குருமார்களைக் குறிக்கும் பல்வேறு சாஸ்திரீயச் சொற்களுக்கான வரையறைகளில் ஒன்று என்பது புரிந்தது.
பொதுவாக, சீமந்தம் முதலான ஸம்ஸ்காரங்கள் செய்து வைப்பவர்களைப் புரோஹிதர்கள் என்றுதான் சொல்வதுண்டு. ஆனால், அந்த ஸம்ஸ்காரங்களுடன், உணவளிப்பது போன்ற வேறு ஏதோ சில உபரி கடைமைகளையும் நிறைவேற்றுபவராக இருந்தால், அவரை குரு என்று குறிப்பிடலாம் என்று மனு வரையறை செய்திருக்கிறார் என்பது மட்டும் ஓரளவு புரிந்தது. நிச்சயமாக, ‘பிழைக்கும் வழியைச் சொல்லித் தருபவர்’ என்று ஒரிஜினல் ஸம்ஸ்கிருத சுலோகத்தில் இல்லை என்பது மட்டும் முழுமையாகப் புரிந்தது.

இதற்கு மேல் கூகுளிடம் பேசினால் நாலைந்து நாட்கள் ஃபணால் ஆவதுதான் மிச்சம், தேடப்படும் விஷயம் முழுமையாகக் கிடைக்கப் போவதில்லை என்பது பல தடவை அனுபவ பாடமாதலால், ஏதாவது நடமாடும் டிக்.ஷனரிகள் அல்லது நடமாடும் பாஷ்யங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வதுதான் ஒரே வழி என்பது புரிந்தது.
நிற்க –
புரோஹிதர்க்கு மனு எவ்வாறு குரு அந்தஸ்தைக் கொடுத்தார் என்பதைத் தெரிந்து கொள்வதால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏனெனில், நான் இந்தப் புத்தகத்தை வாங்கியதே பெண்களையும் தீண்டாமையையும் பற்றி மனு என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும்தான்.
அதேநேரத்தில், நம் அனைவருக்கும் வாத்தியார் ஸ்வாமிகளாக இருப்பவர்களாகிய புரோஹிதர்கள் மனு ஸ்மிருதியில் எவ்வாறு நம்ம ஊர்க் கழகக் கண்மணிகளுக்கு ப்ராக்டிகல் இன்ஸ்ட்ரக்டர்களாக ஆனார்கள் என்பதை நான் மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், தற்போது தாய்மார்களைக் குறிவைத்துள்ள நைஷ்டிக பிரம்மசாரிகள், அடுத்த முறை, புரோஹிதர்களையும் குறிவைக்கலாம். அதிலும், இந்த சிவப்பு ஸ்மிருதி, கர்ப்பாதானம் செய்வதை மட்டுமல்லாமல், அதன் மூலம் ‘பிழைப்புக்கு வழி சொல்லித் தருபவன்’ என்றும் சேர்த்துச் சொல்லி இருக்கிறதே, எனவே, புரோஹிதர் விஷயத்தில் கோமாளிக் கூத்து கூடுதலாகவே நடக்க முடியும்.
மீண்டும் பழங்கதைக்கே வருவோம்.
எனது முயற்சியின் அடுத்த கட்டமாக, இந்த சுலோகத்தின் தமிழ் வடிவத்தில் மொழிபெயர்த்தவர் செய்த கைங்கர்யம் என்ன, பதிப்பகத்தின் கைங்கர்யம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை.
காரணம், அதுதான் சிவப்பு வைரஸின் தனித்தன்மை. இது, கருப்பு வைரஸ் அல்லது கருப்பு-சிவப்பு வைரஸைப் போன்றது அல்ல. இந்த இரண்டு வைரஸ்களும் கழுதைக் கனைப்பைப் போலக் காட்டுக் கத்தல் போட்டுத் தங்கள் இருப்பையும் ‘அறிவை’யும் ஏகமாக டமாரமடித்துக் கொள்ளும்.
ஆனால், சிவப்பு வைரஸ் என்பதோ கொரோனாவையும் விட நுண்ணியது. அது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தனது டிஎன்ஏவை மாற்றிக்கொள்ளும் ஞானம் படைத்தது. ஞானத்தின் பயனாக அதற்கு ஞான திருஷ்டியும் லபித்து விடும். நாலு சுவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு எந்தவித சாதனங்களின் உதவியும் இன்றி – அட, தொலைக்காட்சி, செய்தித்தாள் முதலிய ஊடகங்களின் உதவிகூட இல்லாமல் – இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் தனது ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு, அவற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் அறிவாற்றல் கொண்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு நிறங்களுக்குள்ளும் ஊடுருவி அவற்றையும் சிவப்பு மயமாக்கும் வல்லமை படைத்தது.
புராண அரக்கர்களை விட அதிக ஆற்றல் மிக்க வரங்களுடன் இந்த வைரஸ் திகழ்வதால் இதை ஸம்ஹாரம் பண்ண பகவானேதான் நேரில் வர வேண்டி இருக்கிறது. ஒரே ஒரு நூற்றாண்டுக்குள் ஏழெட்டு குருக்ஷேத்திர யுத்தம் நடந்த பின்னரும் இது இன்னும் முழுமையாக மறையவில்லை.
பகவானுக்கே சவால் விடும் வல்லமை கொண்ட இந்த சிவப்பு வைரஸ் விஷயத்தில் நம்மால் செய்ய முடிவது எதுவுமில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. இந்த இடைவெளியின் அளவு நமது வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து தெருவோரக் குப்பைத் தொட்டி வரை இருக்க வேண்டும். Yes, since it is a deadly virus, safety protocols are a must.
இந்த மினி தொடரின் அடுத்த இரண்டு பகுதிகளில் அலைகள் வெளியீட்டகத்தின் சிவப்பு ஸ்மிருதி குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.