ஏப்ரல் 23, 2021, 8:47 காலை வெள்ளிக்கிழமை
More

  இருமனம் இணையும் இல்லறம்!

  திருமணச் சடங்குகளை அக்னி முன்னிலையில் ஆரவாரமின்றி ஆன்மிக உணர்வுடன் செய்ய வேண்டும். நம் செயல்களில் நம்பிக்கை

  marriage3 e1559965866183
  marriage3 e1559965866183

  கட்டுரை: குச்சனூர் கோவிந்தராஜன்

  உலகம் தோன்றிய நாள் முதலாய் தோன்றிய கலாச்சாரங்களிலும், சடங்குகளிலும், முதன்மை பெற்ற தாய், மனிதவாழ்வின் உயர்விற்கான அர்த்தங்கள் உடையதாய், பொருட் செரிந்ததாய், விளங்குவது இந்து மதமும் அதன் சடங்குகளும்!

  கருவுற்றிருந்த காலம் முதல் அவன் காலமாகும் வரை வாழ்வினை வகைப்படுத்தி ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் அறிவு பூர்வமாய் ஆன்மீக கருத்துக்களையும் அறிவியல் சிந்தனைகளையும் கலந்து முக்கியமாக நாற்பது சடங்குகளை பின்பற்றக் கூறுகிறது இந்துமதம்.

  இந்து மதம் வரையறுத்த சடங்குகளை பாரதத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் பல்வேறு பெயர்களில் பின்பற்றினர் சிலவற்றை இன்றும் பின்பற்றுகின்றனர்! மந்திரங்களுடன் இணைந்த சடங்குகளை தொல்காப்பியர் கரணம் என்று கூறுவார்.

  மந்திரங்களுக்கு முக்கியமானது அதன் ஒலி அமைப்பும் உச்சரிப்பும்! இதனால் தான் தமிழகத்தின் கரணம் தப்பினால் மரணம் எனக் கூறுவதுண்டு.

  marriage-Sequence
  marriage-Sequence

  இந்து மதம் மனித வாழ்வில் பின்பற்ற வேண்டிய சடங்குகளை கூறியது போல் மனித வாழ்வின் பிறவிப் பயனை அடையும் வழி முறைகளையும் பின்பற்றுவதற்காக வாழ்வினை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம்,சந்நியாசம் எனும் இம்முறைப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ஒழுக்கம் உள்ளதாகவும் நிம்மதியும் இருப்பதுடன் இறைவன் அடியையும் நிச்சயம் பெற்றுத்தரும்.

  இந்நான்கு பிரிவிலும் மிக முக்கியமானதாய் உயர்வானதாய் போற்றப்படுவது கிரகஸ்தம். காரணம் மற்ற மூன்று வகையினரையும் காப்பாற்றும் பொறுப்பு கிரகஸ்த ஆசிரமத்திற்கு உண்டு . அதற்கு மட்டுமே உண்டு! ஏனெனில் வேதம் விதித்த தர்மப்படி வாழ வேண்டுமெனில் அவர்கள் இல்லறத்தான் சார்ந்தே இருக்க வேண்டும். இதை உணர்ந்த வள்ளுவப் பெருந்தகை உலகப் பொதுமறையில் இல்லறத்தான் கடமையைக் கூறுகிறார்.

  “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” ஒருவன் இல்லறத்திற்கு உள்நுழைய வேண்டுமாயின் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

  register-marriage
  register-marriage

  இத்திருமணத்தை சம்ஸ்கிருதம் விவாகம் என்கிறது. விவாகம் என்ற சொல்லிற்கு தாங்குவது, பதவி வகிப்பது எனப் பொருள். உலகைத் தாங்குவது இல்லறத்தான் தான். ஏனெனில் அவனுக்கு தான் பல செயல்களில் அதிகாரம் உண்டு என வேதம் கூறுகிறது.

  முக்கியத்துவம் வாய்ந்த இல்லறத்திற்குள் நுழையும் போது செய்யப்படும் சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்கள் பொருள் நிறைந்ததாகவும் காரணங்களை கொண்டதாயும் இருப்பதை அனைவரும் உணரவேண்டும்.

  விவாகத்தின் முறையையும் உயர்வையும் கொண்டு நான்கு வகை என வகுத்தாலும் இதன் சடங்குகளையும் திருமண முறையை கொண்டு கிராமம் தெய்வம் பிரஜாபதி எனும் நான்கு மட்டுமே மனு உயர்வாக குறிப்பிடுகிறார்.

  தற்காலத்தில் திருமணங்கள் இவற்றில் பெரும்பாலும் உட்படா விட்டாலும் அவற்றுக்குரிய மந்திரங்கள் மட்டும் சொல்லப் படுகிறது. எது எப்படி இருந்தாலும் திருமணம் என்பது அக்னி சாட்சியாக நடத்தப்பட வேண்டும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

  திருமணத்தில் பற்பல சடங்குகள் செய்யப்படுகின்றன அது எல்லாமே அர்த்தம் பொதிந்தவை என்றாலும் மிகச் சில சடங்குகளின் பொருளையாவது நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

  கரணம் – திருமணம் செய்து கொள்ளும் வரன் பெரியவர்களை அழைத்து பெண்ணின் பெற்றோரிடம் சென்று தனக்கு பெண் தருமாறு கேட்க சொல்லுதல். இதன்மூலம் பெண்ணை பற்றியும் அவர்கள் சூழல் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்

  நுகத்தடி வைத்தல் – திருமணங்களில் முக்கியமானதாக செய்யப்படும் சடங்குகளில் முதலில் வருவது நுகத்தடி வைத்தல்! தர்பத்தினால் நுகத்தடி போல் செய்து பெண்ணின் தலையில் வைத்து மந்திரங்கள் சொல்லப்படும் இச் சடங்கானது அப்பாவை என்னும் பெண்ணிற்கு இந்திரன் செய்த நற்செயலை நினைவு கூறவும், அப்பெண் எப்படி சகல தோஷங்களும் நோயும் நீங்கி சூரியப் பிரகாசம் பெற்றாளோ அதுபோல் இப்பெண்ணும் பெற வேண்டி செய்யப்படுகிறது.

  marriage-1
  marriage-1

  மங்கள ஸ்நானம் – மணப்பெண்ணிற்கு மந்திர ஸ்நானம் செய்வித்து ஐந்து மந்திரங்களில் ஜலத்தின் பெருமையையும் அதன் தன்மையையும் புகழ்ந்து இத்தகைய சிறப்புமிக்க ஜலம் உன்னை புனிதமாக்கி இல்லறத்திற்கு ஏற்படுவதாகச் செய்யட்டும் என்பதே இதன் பொருள் . இதையே ஆண்டாளும் தனது வாரணமாயிரம் பாடலில் பாடுகிறார்

  நாற்றிசை தீர்த்தங்கள் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி பூப்புனை கன்னி புனிதனோடு என்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

  கூரை புதுப்புடவை – பெண்ணிற்கு மந்திரங்கள் சொல்லித் தருவார். பின் புதுப் புடவை- கூரைப் புடைவை உடுத்தி வந்த பின்பு மந்திரங்கள் மூலம் பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி இந்திரனிடம் மணமகன் வேண்டுகிறார்.
  மேலும் தர்பையினால் செய்த கயிற்றால் பெண்ணின் இடுப்பைச் சுற்றி கட்டி விட்டு ஆசாஸாநா ஸௌமனசம் ப்ரஜாகும் ஸௌபாக்யம் த நூம்அக்நே நுவ்ரதா பூத் வா ஸந்நஷ்யே ஸூக்ருதாய கம் – எனும் மந்திரம் மூலம் ‘அக்னி தேவனே எப்போதும் நல்ல மனமும் உறுதியான நிலையும் பிள்ளைகள் செல்வங்கள் கணவருடன் இணைந்து விரதங்கள் அனுஷ்டிப்பதில் ஆர்வம் போன்ற ஆசைகள் கொண்டவளாய் இருக்கும் இப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் விவாஹ கர்மாவில் ஈடுபடுவதற்காகவும் இக் கயிற்றால் கட்டுகிறேன் என்று கூறி கட்டுகிறான். இதன் மூலம் தனக்கு மனைவியாக வரப் போகும் பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வரன் அக்னியிடம் வேண்டுகிறான்.

  பெண்ணின் பெருமை – பெண் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவள் தெய்வாம்சம் கொண்டவள் என்பதை வரன் மூலமாக வேதம் வலியுறுத்துகிறது.

  ஸோம: பிரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருதியோ அக்னிஷ்டேபதி துரீயஸ்தே மனுஷ்யஜா: என்னும் மந்திரமும் மேலும் சில மந்திரங்களும் மணப்பெண்ணை முதலில் சோமன் சந்திரன் அடைந்தான். இரண்டாவதாகக் கந்தர்வன் அடைந்தான். மூன்றாவதாக அக்னி அடைந்தான். நான்காவதாக மனித ஜாதியில் நீ அடைந்து இருக்கிறாய் என்பதன் பொருள்… தேவர்கள் பலம், இளமை ,அழகு போன்றவற்றை கொடுத்து அவளுடன் இருக்கிறார்கள். எனவே அவள் தெய்வ அம்சம் கொண்டவள் என்பதாகும்.

  marriage1 e1559965767536
  marriage1 e1559965767536

  பிறகு தற்போதைய நடைமுறையில் இருக்கும் மாங்கல்யதாரணம் எனும் சடங்கு நடைபெறுகிறது அப்போது சொல்லப்படும் ஸ்லோகமும் கூட பெண்ணின் நீண்ட ஆயுளையயே வேண்டுகிறது.

  உண்மையில் மாங்கல்ய தாரணத்திற்குப் பின்பே வேதம் சொல்லும் திருமணச் சடங்கு நடைபெறுகிறது. பாணிக்கிரகணம் எனும் சடங்கே விவாகத்தின் முக்கிய சடங்காகும். முன்பாக பெண்ணின் கரத்தினை ஆண் மந்திரம் சொல்லிப் பற்றும் சடங்காகும்.

  இதை ஆண்டாளும் இப்படிச் சொல்கிறார். “வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக் காய்ச்சின மாகளிற்றன்னான் என் கைபற்றி தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்”

  பாணிக்ரகணத்தின் போது ஆறு மந்திரங்கள் சொல்லப் படுகின்றன. முதல் இரண்டு மந்திரங்கள் பெண்ணின் சிறப்புகளையும் மூன்றாவது சந்ததி அபிவிருத்திக்காக தேவர்களின் அனுமதி வேண்டியும், நான்காவது சிறப்புமிக்க கிரகஸ்தாச்ரமத்தை வகிக்க உன்னை பிடிக்கிறேன் என்றும், ஐந்தாவது மந்திரத்தில் சரஸ்வதியே நீ அன்னம் முதலிய சகல நன்மைகளும் கிடைக்க ஆசீர்வதித்து எங்கள் கை பிடித்தல் கர்மாவை ஏற்க வேண்டுமென்றும், ஆறாம் மந்திரம் மூலம் எல்லா திசைகளிலும் இடைவிடாது நிறைந்த வரும் அக்னியின் நண்பரும் கையில் தங்கத்தை வைத்துக் கொண்டு வேண்டுபவருக்கு தருபவருமான வாயு பகவானை வணங்குகிறேன் என்றும் சொல்லப்படுகிறது .

  சப்தபதி திருமணச் சடங்குகளில் முக்கியமானதும் உயரிய சிந்தனையின் தொகுப்பாயும் தம்பதியரின் உறவு மேன்மையையும் சொல்வதாக உள்ளது. இச்சடங்கில் வரும் மந்திரங்கள் மணமகன் பெண்ணின் வலது காலைப் பிடித்து வரிசையாக ஏழு அடிகள் வைப்பார் அப்போது ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்
  1 ஏகபிஷே விஷ்ணு ஸ்த்வா(அ)ந்வேது – மகாவிஷ்ணு உனக்கு அன்னம் கிடைக்க அருள் புரியட்டும்.
  2 த்வே ஊர்ஜே விஷ்ணு விஷ்ணுவா (அ) ந்வேது –
  உனக்கு உடம்பில் பலத்தை தரட்டும்
  3. தத்ரீணி வ்ரதாய விஷ்ணு ஸ்த்வா(அ)ந்வேது – எல்லா விரதங்களையும் செய்ய அருளட்டும்
  4. சத்வாரி மாயோபலாய விஷ்ணு ஸ்த்வா(அ)ந்வேது- உனக்கு எல்லா சுகங்களும் கிடைக்கட்டும்
  5. பஞ்ச பசுப்யே விஷ்ணு ஸ்த்வா(அ)ந்வேது- பசு முதலிய செல்வங்கள் கிடைக்கட்டும்.
  6. ஷட்ருதுப்ய விஷ்ணு ஸ்த்வா(அ)ந்வேது -எல்லாக் காலங்களும் பருவங்களும் உனக்கு நன்மை செய்யட்டும்.
  7. ஸப்த ஸப்தப்யோ ஹோத்ராப்யோ விஷ்ணு ஸ்த்வா(அ)ந்வேது – நீ பங்குகொள்ளும் ஹோமங்களும் யக்ஞங்களும் குறைவின்றி நிறைவேற அருளட்டும்.

  இவ்வாறு ஒவ்வொரு அடிக்கும் சொல்லிய பின்பு தன்னைத் தொடர்ந்து ஏழு அடி வந்த பெண்ணைப் பார்த்து வரன் சொல்லும் இம்மந்திரத்தில் தான் இல்லற தர்மம் முழுவதும் சொல்லப்படுகிறது.

  ஏழு அடிகள் தொடர்ந்துவந்த நீ எனக்கு தோழியாவாய் உனக்கு நான் நண்பன் ஆவேன். நாம் இருவரும் பிரியாது இருப்போம். ஒரே விதமாய் சிந்திப்போம்! அதாவது அதாவது ஈருடல் ஓருயிர் நாம் எனது வாக்காக நீ இரு! நாம் இருவரும் சேர்ந்தே எல்லா சுகங்களையும் அனுபவிப்போம். நம் எண்ணங்கள் ஒன்றாக இருக்கட்டும்! நாம் செய்ய வேண்டிய மனித, தேவ, பித்ரு கடன்களை செவ்வனே செய்வோமாக! நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு உள்ளவர்களாக இருப்போம்! பிடித்தம் உள்ளவர்களாக வாழ்வோம்! அதற்கு நீ என்னுடன் வருவாயாக….

  – இவ்வாறு வேண்டப்படும் மந்திரம் தான் திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் எப்படி வாழவேண்டும் என்பதை அறிவுரையாகவும்
  திருமண நோக்கத்தினை கூறுவதாயும் அமைந்துள்ளது.

  நண்பர்கள் என்ற உயரிய உறவு தம்பதிகளுக்குள்ளும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பின்பற்றி வருவதை எண்ணி வாழ்ந்தால் உறவில் விரிசல் வருமா ? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  இதன் பிறகும் துருவ நட்சத்திரம் பார்த்தல், அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட பல சடங்குகள் தொடர்ந்து நடைபெறும். சந்ததி விருத்திக்காகவும் பிறக்கும் சிசு சிறப்பாக பிறக்கவும் சில மந்திரங்கள் சொல்லப்படுகிறது. அம் மந்திரங்களில் எனது வம்ச விருத்திக்காக பெண்ணை சேர்கிறேன் தேவர்களே! அதற்கு அனுமதி தாருங்கள் என்றும், அதன்பிறகு கர்ப்பத்தை தாங்கும் பெண் நல்ல எண்ணங்களுடன் இருக்கும்படியும் கருவானது முழுமையாக பத்து மாதம் கர்ப்ப வாசம் செய்து எந்தக் குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றும் மந்திரங்கள் மூலம் வரன் வேண்டுகிறான்.

  திருமணத்தின் போது செய்யப்படும் சடங்குகள் உடல்கள் இணைவதற்காக செய்யப்படாமல் உள்ளங்கள் இணையவும் தர்மங்கள் தொடரவும் சந்ததிகள் நன்கு அமையவும் பெண்ணின் பெருமை பேசுவனவாகவும் அமைந்துள்ளன.

  எனவே இந்துக்கள் அனைவரும் அவரவர் சம்பிரதாயப்படி அமைந்த திருமணச் சடங்குகளை அக்னி முன்னிலையில் ஆரவாரமின்றி ஆன்மிக உணர்வுடன் செய்ய வேண்டும். நம் செயல்களில் நம்பிக்கை கொண்டு செய்தால் நம் சந்ததியும் சமுதாயமும் நன்கு அமையும்!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-