
பூர்ண கும்பத்தை சுமக்கும் பிராமணர்களுக்கு…
பூர்ண கும்ப மரியாதை என்பது என்ன? அதை ஒருவர் நிராகரிக்க முடியுமா? அதைப் பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம்.
ஒரு கலசம். அதில் தண்ணீர் அல்லது அரிசியை நிரப்பி, மேலே மாவிலையை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்திருப்பார்கள். அந்த கலசத்திற்கு ஒரு வஸ்திரத்தையும், பூ மாலையையும் அணிவித்திருப்பார்கள். இதை கைகளில் சுமந்துகொண்டு யாரை வரவேற்க வேண்டுமோ அவரின் எதிரில் எடுத்துச் செல்வார்கள்.
பூர்ணகும்பம் என்ற மரியாதை செய்யும் முறை சைவ ஆகமங்களில் பார்க்க முடிகிறது. ‘காமிகாகமம்’ என்கின்ற ஆகமம் உண்டு. சைவர்களுக்கு உள்ள 28 ஆகமங்களில், இந்த காமிகாமம் முதலானது. அதில் ராஜரக்ஷா விதி, நீராஜன விதி என்றெல்லாம் உண்டு. அவை, ஒரு அரசர் கோவிலுக்கு வந்தால் அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறது. அப்படி ஒரு அரசன் கோவிலுக்கு வந்தால் அவர் கையில் அர்க்யம் அளிப்பதையும் வழக்கமாக கடைபிடித்தனர். காளிதாசரின் காவியங்களில் பூர்ண கும்பத்தோடு அரசரை வரவேற்கும் நிகழ்வுகளை நாம் பார்க்க முடிகிறது.
சைவத்தில் அஷ்ட மங்கல பொருட்கள் என்று எட்டு வகையான மங்கலப் பொருட்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள். பூர்ண கும்பம், ஸ்வஸ்திகம், வட்டக் கண்ணாடி, தீபம், குடை போன்ற எட்டுவித மங்கல பொருட்களை பட்டியலிடுகிறார்கள். இந்த பட்டியலில் உள்ள சில பொருட்கள் சில பிரிவினர்களிடையே வேறுபட்டாலும், பூர்ண கும்பம் என்பது அனைத்து உட்பிரிவினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
பூர்ண கும்ப மரியாதை என்பது இறைவனுக்கு உரியது. இறை மூர்த்தங்கள் திருவீதி உலா வரும்போது இறைவனை வரவேற்கும் விதமாக ஆங்காங்கே பூர்ண கும்ப மரியாதை செய்வார்கள். நாட்டை ஆளும் அரசனை ஆண்டவனின் பிரதிநிதியாக மக்கள் கருதியதால் அரசன் வரும்போதும் அதே மரியாதையைச் செய்தார்கள். சன்யாசிகள், மடாதிபதிகள் ஆகியோடும் நம்மை வழி நடத்திச் செல்பவர்கள் என்பதாலும் மகான்களை கடவுளின் அவதாரமாக நாம் கருதுவதாலும் அவர்களுக்கும் பூர்ண கும்ப மரியாதை செலுத்துவதை வழக்கமாக இருந்தது.
அரசனின் நிலையில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் அதனால், பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று நம்மைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால், இது சற்று நீட்சியடைந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் வண்டு முருகன்கள் வரை இந்த மரியாதை செலுத்தும் நிகழ்வு வெறும் சடங்காகப் போய்விட்டது. வாயிற்படியைத் தாண்டி வீட்டுக்குள் வரும் போது கீழே கிடக்கும் மிதியடியை போல பூர்ண கும்ப மரியாதை தன் தரத்தை சமீப காலமாக தாழ்த்திக் கொண்டுள்ளதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
யார் கெளரவிக்கப்படுகிறார்களோ அவர்கள் கொண்டுவரப்பட்ட பூர்ண கும்பத்தை தொடும் வழக்கம் பண்டைய காலங்களில் இல்லை. காரணம், அவர்கள் வரும் போது எதிரில் ‘மங்கலகரமான ஒரு பொருள் அவர் கண்ணில்பட வேண்டும்’, என்பதே பூர்ண கும்ப மரியாதையின் நோக்கம். கண்ணில்பட்டவுடன் கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறிவிடுகிறது. ஆனால், இன்று பூர்ண கும்பத்தை கைகளால் தொட்டால் மட்டுமே அந்த சடங்கு பூர்த்தியாவது போலவும், அப்படி தொட மறுத்தவர்கள் பூர்ண கும்பத்தை நிராகரித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
நேற்று குமரக்கோட்டம் முருகன் கோவில் சார்பில் திரு. கமலஹாசனுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கமலஹாசன் அதை ஏற்க மறுத்துவிட்டு, அவர்கள் அளித்த சால்வையை மட்டும் ஏற்றுக் கொண்டார்’, என்று செய்தி வந்தது.
கடந்த நவம்பர் 22ம் தேதி, திருச்சி கயிலாச நாதர் கோவில் சார்பில் கொடுக்கப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை திரு. உதய நிதி ஏற்க மறுத்துவிட்டார்’, என்ற செய்தியையும் படித்தோம்.
பூர்ண கும்பத்தை கையிலேந்தி வரும் பிராமணர்களே! எந்த அடிப்படையில் ஒருவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கிறீர்கள்? அதற்கு ஏதாவது அளவுகோல் வைத்திருக்கிறீர்களா? அப்படி ஏதும் இருந்தால் அதைச் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம்
பிராமணர்களே! தலையில் குடுமியோடு, பூணல் தெரியும் வகையில் சட்டையில்லாமல் தெருவில் ஒருவர் நடந்து சென்றால் அவரை சிவாச்சார்யார், சாஸ்திரிகள் என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரே அடையாளமாக ‘பிராமணர்’ என்று அறியப்படுகிறார்கள்.
உங்களின் செயல்பாடுகளை ஒரு கூட்டம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. உங்களை வைத்து நிறைய விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்கின்றான. உங்களை பொது எதிரியாக்கி ஆதாயம் தேட பல தலைமுறைகளாய் ஒரு கூட்டம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நடிகர் கமலஹாசன் புதிய இணைப்பு. இதை உணருங்கள்.
உங்களின் செயல்பாடுகளைக் கொண்டே பிராமணர்களையும், இந்துக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்துகிறது ஒரு கூட்டம். அலுவலகத்திற்கு பேண்ட், சட்டையோடு சென்று பணியாற்றும் பிராமணர்களுக்கு எந்த பிரச்னையும் வருவதில்லை. நீங்கள் ஒரு உண்மையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பிராமணர்களின் பிரதிநிதிகள் மட்டுமல்ல, இந்துக்களின் பிரதிநிதிகள்கூட. உங்கள் செயல்கள் இந்துக்களிடமும், பிராமணர்களிடமும் பிரதிபலிக்கிறது.
நீங்கள் இழிவுபடுத்தப்படும் போதும் சரி, நீங்கள் சார்ந்த கோவில்களும் இழிவு படுத்தப்படும் போது ஒட்டுமொத்த இந்துக்களும் உங்கள் பின்னால் நின்று போராடுகிறார்கள். நீங்கள் போராட்டத்தில் பங்கெடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், யாருடைய சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோமோ, அவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் செயல்படுவது நியாயமா?
பிராமணர்களே! அசிங்கங்களையும், கேவலங்களையும் மறந்துவிட்டு, பூர்ண கும்பத்தின் அருமையை புரிந்து கொள்ளாதவர்களை வரவேற்க ஏன் சென்றீர்கள்? சாதாரண பிரஜையாக நீங்கள் செல்லவில்லை. நீங்கள் சார்ந்த கோவிலின் சார்பில் வரவேற்கச் சென்றதாக தொலைக்காட்சி செய்தி சொல்கிறது. கோவில்கள் பணி அரசுப்பணி. ஒரு அரசியல் தலைவரை வரவேற்க அரசு எப்படி தங்கள் பணியாளர்களை அனுப்பியது? இதை வரைமுறைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ சட்டங்கள் ஏதுமிருக்கிறதா? அல்லது யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கோவிலில் பணி புரிபவர்கள் மூலம் பூர்ண கும்ப மரியாதையை செலுத்தலாமா?
பிராமணர்களே! உங்களை யாராவது பூர்ணகும்பம் கொடுக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்களா? மிரட்டுகிறார்களா? அல்லது சினிமாவில் பார்த்த முகத்தை நேரில் பார்க்கும் ஆவலில் சென்றீர்களா?
எது எப்படி இருந்தலும், உங்களுடைய செயல் ஒட்டுமொத்த இந்துக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் பூர்ண கும்பம் கொடுத்த நிகழ்வைவிட, அதை ஏற்க மறுத்ததன் செய்திதான் பிரபலமாகிவிட்டது. இந்துக்களின் உரிமைக்காக தமிழகமே போராடிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் இப்படிச் செய்யலாமா?
தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக் கதை.
ஒரு நாடு. அதன் அரசன் ஒரு நாத்திகன். அரண்மனையில் ஒரு பூஜை நடந்தது. பூஜை முடிந்ததும் சாது கலசத்தில் இருந்த நீரை எல்லோர் தலையிலும் தெளித்தார். அரசனிடம் சென்றான்.
‘சாதுவே! இந்த தண்ணீர் நம் மீது பட்டால் என்ன கிடைக்கும்?’ என்று கேட்டார்.
‘அரசே! இந்த நீர் நம் மீது படும் போது நாம் புனிதமடைகிறோம்’, என்றார்.
‘யாரங்கே! சாக்கடையில் படுத்திருக்கும் பன்றியை இழுத்து வாருங்கள். அதன் மீது இந்த நீரை தெளிக்கட்டும். பன்றி எப்படி புனிதமடைகிறது’, என்று பார்ப்போம் என்றான் அரசன்.
சற்று நேரத்தில் சாக்கடை நீர் சொட்டச்சொட்ட துர்நாற்றத்துடன் பன்றியை அழைத்து வந்தார்கள். அரசனின் ஆணைப்படி புனித நீர் அதன் மீது தெளிக்கப்பட்டது.
‘சாதுவே! உங்கள் கூற்றுப்படி பன்றி இப்போது புனிதமடைந்துவிட்டது. இதை உங்கள் வீட்டு கூடத்தில் விடச் சொல்கிறேன். இந்த புனிதமான பன்றியோடு வாழுங்கள்’, என்று சொல்லிவிட்டு சென்றான்.
சாதுவை மடக்கிவிட்ட திருப்தி அரசனுக்கு. இரண்டு மாதங்கள் ஓடிப்போனது. சாதுவின் வீட்டிற்கு சென்றான் அரசன். சாதுவின் வீடு நாறிப்போயிருக்கும் என்று நினைத்தான்
‘என்ன சாதுவே! புனிதமான பன்றி என்ன சொல்கிறது?’ என்று கேட்டான் நக்கலாக.
சாது பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.
அப்போது, ‘அரசே!’ என்று ஒரு குரல் கேட்டது. பேசியது பன்றி.
‘அரசே! நான் இத்தனை காலம் சாக்கடையில் இருந்தேன். அழுக்கிற்கும், சுத்தத்திற்கும் வித்தியாசம் தெரியமலிருந்தேன். சாது என்னை சுத்தப்படுத்தினார். அவர் சாப்பிடும் நல்ல உணவையே எனக்கும் கொடுத்தார். இங்கு நடக்கும் பூஜையும் அவர் சொல்லும் வேதங்களும் தினமும் என் காதுகளில் விழுந்தன. இதைவிட பெரிய பாக்கியம் வேறு ஏதும் இருக்க முடியாது. புனித நீரால் புனிதமடைய முடியும் என்று சாது சொன்னவுடன் சாக்கடையில் வசிக்கும் என் நினைவு உங்களுக்கு எப்படி வந்தது? அப்படியென்றால் உங்கள் நாட்டில் வசிக்கும் நாங்கள் புனிதமானவர்கள் அல்ல என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்? எங்களை புனிதப்படுத்த இத்தனை காலம் ஏன் முயற்சி எடுக்கவில்லை? ஆகையால், எங்களைவிட மனத்தில் அழுக்கைச் சுமந்துகொண்டு நாட்களை நகர்த்தும் உங்களுக்குத்தான் புனித நீர் உடனடியாக தேவைப்படுகிறது’, என்று சொல்லிவிட்டு ஓடிப்போனது.
சாது பேசினார்
‘அரசே! புனித நீர் புனிதப்படுத்தும் என்று நம்புவதில் தவறில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை. நான் புத்திசாலி, எனக்கே எல்லாம் தெரியும் என்று புனிதத்திற்கும், உடல் அழுக்கை சுத்தப்படுத்துவதற்கும் தொடர்பு இருப்பதாக நினைப்பவர்களின் சிந்தனையை எந்த புனித நீராலும் சுத்தப்படுத்த முடியாது. உங்கள் சிந்தனையை நாத்திகம் என்று சொல்ல முடியாது. உண்மையான நாத்திகம் தன்னம்பிக்கையோடு தொடர்புடையது. உங்கள் நாத்திகம் அடுத்தவர் மனதை புண்படுத்தும் சித்தாந்தம் மட்டுமே. இது உங்கள் மனத்தில் உள்ள அழுக்கையே காட்டுகிறது. அது கிண்டலையும், கேளியையும் மட்டுமே நம்பி வாழ்கிறது’, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
புனித நீர், அழுக்கு, சுத்தப்படுத்துதல் என்ற வார்த்தை விளையாட்டுக்கள் எதுவும் அரசனுக்கு புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். அடுத்த முறை சாது புனித நீரை எடுத்துக் கொண்டு அரசனிடம் செல்ல மாட்டார்.
அரசியல்வாதிகளே! உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். எந்த ஒரு அர்ச்சகரையோ, குருக்களையோ உங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம். ‘பார்ப்பான்’ என்று இழி சொல்லால் அவமதிக்கப்படும் வேளையில் எந்த ஒரு அரசியல்வாதியும் இவர்களுக்கு துணைக்கு வரவில்லை. ஏன் அப்படி அவமானப்படுத்துகிறீர்கள் என்று ஒரு கேள்விகூட கேட்கவில்லை. இந்த தேர்தல் நேரத்தில் இவர்களை உங்கள் கோடாலிக்கு காம்பாக பயன்படுத்த வேண்டாம்.
பூர்ண கும்ப மரியாதை என்பது ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் மரியாதை. ஒரு தரப்பு, குறிப்பாக நாத்திகத்தை அடிப்படையாகக்கொண்டவர்கள் இதை இந்து சமயச் சின்னமாகவும், மத அடையாளமாகவே பார்க்கிறார்கள். அதனால்தான் இதை நிராகரிப்பதை பெருமையோடு பொது வெளியில் சொல்கிறார்கள்.
அடுத்தவர்களின் உணர்வுகளே முக்கியம் என்று நினைப்பது இந்து மதத்தின் பெருமை. ராமாயணத்தில் சபரி கொடுத்த எச்சில் பழங்களை ராமன் சாப்பிட்டதே இதற்கு உதாரணம். இதையெல்லாம் போலி நாத்திகவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. பூர்ண கும்பத்தை நிராகரித்தேன் என்று பெருமையோடு சொல்பவர்கள் மங்கலத்தின் மீது நம்பிக்கையில்லாமல், அமங்கலத்தை விரும்புகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பிராமணர்களே! திருந்துங்கள். உங்கள் செயல் ஒட்டு மொத்த இந்துக்களையும், இறை உணர்வு உள்ளவர்களையும் கேவலப்படுத்துகிறது. துணி மூட்டையை சுமந்து செல்லும் கழுதைக்கு அழுக்குத் துணியும், துவைத்த துணியும் ஒரே மாதிரியான சுமையாகத் தெரியலாம். ஆனால், புத்திசாலி மனிதர்கள் அப்படி நினைப்பதில்லை.
இவையெல்லாம் மீறி நான் அப்படித்தான் நம்மை கேவலப்படுத்துபவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதையைக் கொடுப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பை கண்டு கொள்ளாமல் நகர்ந்து செல்வதுதான் இந்து மதம் எங்களுக்கு போதித்த வாழ்க்கை முறை. நீங்கள் பூஜிக்கும் கடவுள் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்.
அன்புடன்
சாது ஸ்ரீராம்
[email protected]