ஏப்ரல் 22, 2021, 1:03 காலை வியாழக்கிழமை
More

  விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-24)

  ஆதி மூலமே! அளவிட இயலாத சக்தியினைக் கொண்ட உமையம்மையின் குமாரனே, பிறைசூடியான சிவபெருமானின் அருமை மைந்தனே

  manakkula vinayakar

  விநாயகர் நான்மணிமாலை – பகுதி 24
  விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

  பாடல் 30 – கலித்துறை

  விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
  தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்
  பண்டைச் சிறுமைகள் போக்கி யென்னாவிற் பழுத்த சுவைத்
  தெண்டமிழ்ப் பாடலொரு கோடி மேவிடச் செய்குவையே.

  பொருள் – புதுவையில் கோயில்கொண்டுள்ள மணக்குள விநாயகனே எடுத்துச் சொல்லுவேன், கேட்பாயாக. உனது அன்னை பராசக்திக்கு என்றும் நான் தொடர்ந்து தொண்டு செய்திடுவேன். என்னிடத்தில் உள்ள பழைய குற்றங்களை எல்லாம் போக்குவாயாக. என்னுடய நாவில், பழுத்த பழத்தில் உள்ள இனிமையான சுவை கொண்டதான ஒரு கோடிப் பாடல்கள் எழுத வைப்பாயாக.

  பாடல் ‘விண்டுரை’ எனத் தொடங்கி, ‘செய்குவையே’ என முடிகிறது.

  பாடல் 31 – விருத்தம்

  செய்யா ளினியாள் ஸ்ரீ தேவி செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்
  கையா ளெனநின் றடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து
  செய்வாள்; புகழ்சேர்வாணியு மென்னுள்ளே நின்று தீங்கவிதை
  பெய்வாள், சக்தி துணைபுரிவாள், பிள்ளாய், நின்னைப் பேசிடிலே.

  பொருள் – விநாயகப் பெருமானே உன்னை புகழ்ந்து பேசினால், சிவந்த நிறமுடைய, செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் எனக்கு ஏவல் செய்பவளாக, என் பணிகளில் பங்கேற்க வேண்டும். பெரிய புகழை உடைய சரசுவதியும் எனக்குள்ளே நின்று நல்ல கவிதைகளை இயற்றத் துணைபுரிவாள். அன்னை பராசக்தியும் எனக்கு உதவியாக இருப்பாள்.

  பாடல் ‘செய்’ எனத் தொடங்கி, ‘பேசிடிலே’ என முடிகிறது.

  பாடல் 32 – அகவல்

  பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
  கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
  மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
  விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
  யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே 5

  இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
  செய்தல் வேண்டும், தேவ தேவா!
  ஞானாகா சத்து நடுவே நின்று நான்
  பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
  விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ் 10

  சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
  இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
  திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
  ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!
  இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை 15

  அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
  சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
  நித்தியப் பொருளே சரணம்
  சரணம் சரணம் சரண மிங்குனக்கே.

  பொருள் – விநாயகப் பெருமானே இதுவரை யாரும் பேசாத ஒரு பொருளைப் பேச நான் இன்று துணிந்தேன். எவரும் கேட்காத வரத்தைக் கேட்க இன்று நான் துணிந்தேன். இந்த பூவுலகத்தின் மீது உள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள் அனைத்தும் நான் ஆற்றுகின்ற பணியால் துன்பம் தீர்ந்து, இன்பமாக, ஒன்றோடொன்று அன்புடன் இணங்கி வாழ நீ அருள் புரிதல் வேண்டும்.

  தேவர்களுக்கெல்லாம் தேவனே, விநாயகா, உன்னருளால் இறைவன் நிற்கும் பரவெளியின் நடுவே நின்று நான் இந்தப் பூமியில் அன்பு, பொறுமை இரண்டும் விளங்க வேண்டும் என்று வாழ்த்துவேன். துன்பமும் வறுமையும் பிணியும் இறப்பும் நீங்கி என்னைச் சுற்றி உள்ள பலவிதமான உயிர்களும் இன்பமாய் வாழ்க எனக் கூறுவேன். இதனை நீ உனது திருச்செவியாலே கேட்டு, திருவுளம் கொண்டு அங்கனமே ஆகுக என அருளுவாய். எனது ஐயனே இன்று, இப்போது எனக்கு இந்த வரத்தினை அருளுவாயாக.

   ஆதி மூலமே! அளவிட இயலாத சக்தியினைக் கொண்ட உமையம்மையின் குமாரனே, பிறைசூடியான சிவபெருமானின் அருமை மைந்தனே. உனக்குச் சரணம். சரண மிங்குனக்கே. பாடல் ‘பேசா’ எனத் தொடங்கி, ‘உனக்கே’ என முடிகிறது

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »