spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு!

சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு!

- Advertisement -

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடி – தமிழ்குடி

அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம்.

சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று புத்தாண்டு தொடங்குவது, தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நமது நாட்டில் உள்ள பல மாநிலங்களிலும், அந்த நாளிலேயே புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. அசாம், கேரளா, வங்காளம், பஞ்சாப், போன்ற நமது மாநிலங்களிலும், வெளி நாடுகளான பர்மா, கம்போடியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று தான், புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

“சூரிய சித்தாந்தம்” என்ற சமஸ்க்ருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையின் காலம், 60 வருடங்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.

“60 ஆண்டுகள் கணிப்பு” என்பது பூமி உடன் தொடர்புபடுத்தி, வானத்தில் மற்ற கிரகங்கள் இருக்கும் நிலையுடன் தொடர்புபடுத்தி, நமது முன்னோர்கள் கணித்து உள்ளனர். ஒரு முறை சூரியனை சுற்றுவதற்கு, சனி கிரகம் 30 வருடங்கள் எடுத்துக் கொள்ளும், வியாழன் கிரகம் 12 வருடங்கள் எடுத்துக் கொள்ளும், சூரியன் 60 வருடங்களுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை, இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறை குறிக்கின்றது.

பெரும்பொழுது, சிறுபொழுது:
தமிழர்கள் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டு பொழுதாக பிரித்து வைத்து உள்ளனர்.
ஒரு வருடத்தை ஆறு பிரிவுகளாக பிரித்து வைத்து உள்ளனர்.
1. இளவேனில் காலம் – சித்திரை, வைகாசி
2. முதுவேனில் காலம் – ஆனி, ஆடி
3. கார் காலம் – ஆவணி, புரட்டாசி
4. கூதிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை
5. முன்பனி காலம் – மார்கழி, தை
6. பின்பனி காலம் – மாசி, பங்குனி
என பிரித்து பெரும்பொழுது என அழைத்தனர்.

அது போலவே, ஒரு தினத்தை ஆறாகப் பிரித்து…
1. வைகறை,
2. காலை,
3. நண்பகல்,
4. ஏற்பாடு,
5. மாலை,
6. யாமம்
என ஆறாக பிரித்து வைத்து, அதை “சிறுபொழுது” என அழைத்தனர்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், ”பௌர்ணமி” அன்று என்ன நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரே, தமிழ் மாதப் பெயராக உள்ளது.

தமிழ் புத்தாண்டும் அரசியலும் :
1969 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள், தமிழக முதல்வராக இருந்த போது, பொங்கலுக்கு அடுத்த நாளை, “திருவள்ளுவர் நாள்” என்று அறிவித்து, அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். பின்னர், 1971 ஆம் ஆண்டு, 50 ஆண்டு காலத்துக்கு முன்பு ஒரு கூட்டத்தில் தமிழறிஞர்கள் சிலர் எடுத்த முடிவின் அடிப்படையில் “திருவள்ளுவர்” ஆண்டு நடைமுறையை தமிழக அரசு ஏற்கும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில், தமிழ்நாடு அரசு இதழில் இது நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது.

பின்னர், 1981ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், திருவள்ளுவர் ஆண்டு நடைமுறை என்பது அனைத்து அரசு அலுவலக நடைமுறைகளில் வந்தது.
பின்னர், ஜனவரி 29-ந்தேதி, 2008 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில், “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” நாளாக அறிவிக்கப் பட்டது. ஆனால் அது பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் 23-ந் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில், “சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாள்” என்று அறிவிக்கப்பட்டது.

சித்திரை 1 – தமிழ் புத்தாண்டு நாள் – காரணங்கள் :

மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே, வருடத்தின் முதல் மாதமாக, பண்டைய தமிழர்கள் கருதினர் என்பதற்கு, சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது.

சங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் 160–161:
“திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து…
இதற்கு நச்சினார்க்கினியரின் உரை…
“திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேஷராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே”…

அதாவது, மேஷ ராசி தொடங்கி மற்ற ராசிகளில் சென்று திரியும் சூரியன் என்று உரை. ஆகவே மேஷ ராசியே முதல் ராசியாக பண்டைய தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேஷ ராசியில் சூரியன் திரியும் மாதம் சித்திரை. ஆகவே, அதை முதல் மாதமாக கொண்டாடினர்.

ஆண்டின் தொடக்கம் வசந்த காலமாக இருக்க வேண்டும் என்பதனாலேயே, சித்திரை மாதம், ஆண்டின் தொடக்கமாக கணக்கிடப்பட்டு உள்ளது. பல ஆண்டு காலமாகவே, சித்திரை முதல் நாளையே, தமிழர்கள், புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோடை காலமே, “முதலாவது பருவம்” என சீவக சிந்தாமணியில் கூறப்பட்டு உள்ளது. பண்டையத் தமிழர்களின் வானவியல் ஆய்வுப்படி, “சித்திரை ஒன்றையே, தமிழ் புத்தாண்டு என அனுசரிக்கப்பட்டது.

சங்க இலக்கியங்களில் மிக பழமையானதான பத்துப்பாட்டு நூல்களில், சூரியன் மேஷத்தில் இருந்து தொடங்கி சுழற்சி செய்யும் உண்மையை நக்கீரனார் கூறி உள்ளார்.

சென்னை பல்கலை கழகத்தால் 1912 ஆம் ஆண்டு, பதிப்பிக்கப் பட்ட தமிழ் பேரகராதியில், “சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” என கூறப்பட்டு உள்ளது.

அரசவை கவிஞராக இருந்த நாமக்கல் வி. இராமலிங்கம் பிள்ளை அவர்களும், சித்திரை 1 தான், தமிழ் புத்தாண்டு என கூறி உள்ளார்.

பல்வேறு சேர, சோழ, பாண்டிய கல்வெட்டுகளிலும், சித்திரை முதல் நாளே, “தமிழ் புத்தாண்டு” என உள்ளது.

திமுக ஆட்சி காலத்தில், தமிழ் புத்தாண்டை மாற்றினாலும், அதை ஏற்காமல் தமிழர்கள் சித்திரை 1 அன்று, தமிழ் புத்தாண்டை, வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

60 தமிழ் வருட பெயர்கள் :

பிரபவ – நற்றோன்றல்  (1987–1988)
விபவ – உயர்தோன்றல் (1988-1989)
சுக்ல – வெள்ளொளி (1989-1990)
பிரமோதூத – பேருவகை (1990-1991)
ப்ரஜோத்பத்தி – மக்கட்செல்வம் (1991-1992)
ஆங்கீரச – அயல்முனி (1992-1993)
ஸ்ரீமுக – திருமுகம் (1993-1994)
பவ – தோற்றம் (1994-1995)
யுவ – இளமை (1995-1996)
தாது – மாழை (1996-1997)
ஈஸ்வர – ஈச்சுரம் (1997-1998)
பகுதான்ய – கூலவளம் (1998-1999)
பிரமாதி – முன்மை (1999-2000)
விக்ரம – நேர்நிரல் (2000-2001)
விஷூ – விளைபயன் (2001-2002)
சித்ரபானு – ஓவியக்கதிர் (2002-2003)
சுபானு – நற்கதிர் (2003-2004)
தாரண – தாங்கெழில் (2004-2005)
பார்த்திப – நிலவரையன் (2005-2006)
விய – விரிமாண்பு (2006-2007)
சர்வசித்து – முற்றறிவு (2007-2008)
சர்வதாரி – முழுநிறைவு (2008-2009)
விரோதி – தீர்பகை (2009-2010)
விக்ருதி – வளமாற்றம் (2010-2011)
கர – செய்நேர்த்தி  (2011-2012)
நந்தன – நற்குழவி (2012-2013)
விஜய – உயர்வாகை (2013-2014)
ஜய – வாகை (2014-2015)
மன்மத – காதன்மை (2015-2016)
துர்முகி – வெம்முகம் (2016-2017)
ஹேவிளம்பி – பொற்றடை (2017-2018)
விளம்பி – அட்டி (2018-2019)
விகாரி- எழில்மாறல் (2019-2020)
சார்வரி – வீறியெழல் (2020-2021)
பிலவ – கீழறை (2021-2022)
சுபகிருது – நற்செய்கை (2022-2023)
சோபகிருது- மங்கலம் (2023-2024)
குரோதி – பகைக்கேடு (2024-2025)
விசுவாவசு – உலக நிறைவு (2025-2026)
பராபவ – அருட்டோற்றம் (2026-2027)
பிலவங்க – நச்சுப்புழை (2027-2028)
கீலக – பிணைவிரகு  (2028-2029)
சௌமிய – அழகு (2029-2030)
சாதாரண – பொது நிலை (2030-2031)
விரோதி கிருது – இகல்வீறு (2031-2032)
பரிதாபி – கழிவிரக்கம் (2032-2033)
பிரமாதீச – நற்றலைமை (2033-2034)
ஆனந்த – பெரு மகிழ்ச்சி (2034-2035)
ராக்ஷச – பெருமறம்  (2035-2036)
நள – தாமரை (2036-2037)
பிங்கள – பொன்மை (2037-2038)
காளயுக்தி – கருமை வீச்சு (2038-2039)
சித்தார்த்தி – முன்னிய முடிதல் (2039-2040)
ரௌத்திரி – அழலி (2040-2041)
துன்மதி – கொடுமதி (2041-2042)
துந்துபி – பேரிகை (2042-2043)
ருத்ரோத்காரி – ஒடுங்கி (2043-2044)
ரக்தாக்ஷி – செம்மை (2044-2045)
குரோதன – எதிரேற்றம் (2045-2046)
அக்ஷய – வளங்கலன்  (2046-2047)

எல்லா சமஸ்கிருத (தமிழ்) வருட பெயர்களுக்கும் ஈடாக, தமிழ் வருட பெயர்கள் உள்ளது. எவ்வாறு ஆங்கிலம் மொழி, பல நாடுகளுக்கும், பாரத தேசத்திற்கும் இணைப்பு மொழியாக உள்ளதோ, அது போலவே, சமஸ்கிருத மொழியும், நமது பாரத தேசத்தில் பயன் படுத்தப்பட்ட அனைத்து மொழிகளுக்கும், இணைப்பு மொழியாக இருந்து வருகின்றது.

எல்லா இந்திய மொழிகளிலும், நிச்சயமாக சமஸ்கிருத வார்த்தை கலந்து இருக்கும். தமிழில் எத்தனையோ சமஸ்கிருத வார்த்தைகளை, நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். தமிழ் வருடத்தில் சமஸ்கிருத பெயர்களே உள்ளன, என கூறி வரும் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆட்சி செய்த காலத்தில், தமிழ்ப் புத்தாண்டை மாற்றியது போல, தமிழ் வருடப் பெயர்களையும், அழகு தமிழில் மாற்றி இருக்கலாமே?!

அவ்வாறு மாற்றி இருந்தால், அவர்களை உலகத் தமிழர்கள் அனைவரும் நிச்சயம் கைகூப்பி வணங்கி இருப்பார்கள். அவ்வாறு செய்யத் தவறியது அவர்களின் தவறு?!

சிலர் சமஸ்கிருத பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என கூறி வருகிறார்கள். நமது நாட்டிற்கு சமஸ்கிருத மொழி என்பது இணைப்பு மொழியாக இருந்தது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண் வரிசைகளை 1,2.. (ஒன்று இரண்டு) என பயன் படுத்துகிறோமே தவிர, தமிழ் எழுத்து அகராதிகளை, தமிழ் எண் வரிசைகளை, நாம் பயன்படுத்துவது இல்லை.

வட இந்தியாவில், மக்கள் எண்களை எழுதும் போது, அவர்களின் தாய் மொழியிலேயே, எண்களை எழுதி வருகின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நாம் எவ்வாறு 1, 2… என எழுதி வருகிறோமோ, அது போலவே, அனைவரும் அறியும் வகையில், இந்த சமஸ்கிருத பெயர்கள் பயன்பாட்டில் இருந்தது என தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கட்டுரை: – அ.ஓம்பிரகாஷ் (Centre for South Indian Studies, Chennai)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe