June 24, 2021, 6:46 pm
More

  ARTICLE - SECTIONS

  சர்வதேச செவிலியர் தினம்! கவனம் பெற்றுள்ள நாள் இன்று!

  நம் நோய்ப்பிணி தீர்க்க போராடும் மருத்துவர்களும் செவிலியர்களுமே நம் கண் கண்ட தெய்வங்கள் !

  nurses day
  nurses day pic curtesy : Sudarsan Pattnaik

  கட்டுரை: கமலா முரளி

  கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இறை சக்தியையும், இறையன்பையுமே நம்பி, நாம் பயணிக்கும் இக்கட்டான இத்தருணத்தில், சுகாதார மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களே நம் தெய்வங்கள் !

  நம் நோய்ப்பிணி தீர்க்க போராடும் மருத்துவர்களும் செவிலியர்களுமே நம் கண் கண்ட தெய்வங்கள் !

  அதிலும் செவிலியர்களின் பணி மிகவும் உன்னதமானது. நோயாளிகளுக்கு முதலுதவியும் முக்கிய உதவியும் செய்வது செவிலியர் தானே !

  நோயாளியைத் தொடர்ந்து கவனித்து, நோயின் தாக்கத்தையும் போக்கையும் அக்கறையுடன் கவனித்து, அவ்வப்போது கருவிகளைக் கொண்டு சோதனை செய்து, குறிப்புகளைக் குறித்து வைத்து, சரியான காலத்தில் மருந்து மாத்திரைகளைத் தந்து, தகுந்த ஆலோசனைகளைத் தந்து என சுழன்று சுழன்று வேலை செய்யும் செவிலியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

  தூய வெண்ணிற ஆடை மட்டுமல்ல, அன்பும், பொறுமையும் சகிப்புத்தன்மையும் செவிலியர்களின் அடையாளங்கள் !

  சீரிய பணி செய்யும் செவிலியர்களுக்கான சிறப்பு தினம் எது தெரியுமா ?

  மே மாதம் 12ம் நாள் !

  உலகின் தலை சிறந்த செவிலியரும், செவிலியர் பணியை முன்னிறுத்தி முறைமைப்படுத்தியவருமான ”கை விளக்கேந்திய காரிகை” புளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினம் மே 12 ம் நாள்.

  உலக செவிலியர் அமைப்பு  ( The International Council of Nurses ), இந்நாளை  சர்வதேச செவிலியர் தினமாக 1974 ம் ஆண்டு அறிவித்தது.

  புளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையிலும் செவிலியர்களின் சிறந்த தொண்டினைச் சிறப்பிக்கும் வகையிலும் ஒவ்வொரு வருடமும், சர்வதேச செவிலியர் தினம் மே 12 ம் நாள் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.

  புளாரன்ஸ் நைட்டிங்கேல்

  புளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820 ஆம் ஆண்டு, மே 12ம் நாள் புளாரன்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன், செவிலியர் பணியைத் தாமே விரும்பி ஏற்றார். செவிலியருக்கான முதல் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியவர் இவரே !

  1854 ம் ஆண்டில், கிரிமியன் போரில் காயமுற்ற வீரர்களுக்குச் சிறந்த முதலுதவி, மருத்துவ சிகிச்சை வழங்கினார். அவருடன் மேலும் 38 செவிலியரையும் அப்பணியில் ஈடுபடுத்தினார். இரவு நேரங்களில், கைகளில் விளக்குடன் வந்து, வீரர்களுக்குச் சேவை செய்த வீரச் செவிலித் தாயை அனைவரும் “கை விளக்கேந்திய காரிகை “ (  The Lady with the Lamp )  என அழைத்தனர்.

  செவிலியர் பணி கௌரவமாகக் கருதப்படாத காலத்தில், புளாரன்ஸ் அம்மையாரின் தொண்டு,  செவிலியர் பணிக்கே ஒரு மதிப்பைப் பெற்றுத் தந்தது.

  பொது சுகாதாரம், சுத்தம், மருத்துவக் கருவிகள், பயிற்சி பெற்ற செவிலியரின் பணியின் தேவை போன்றவற்றை இன்று உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன . இவை தான், நோய்த்தொற்றுக்கும், இறப்பு அதிகரிப்புக்கும் முக்கிய காரணங்கள் என்பதை அன்றே உலகுக்கு உணர்த்தியவர் புளாரன்ஸ் நைட்டிங்கேல் !

  இந்தியாவில் செவிலியர் பணி முன்னேற்றமடைவதிலும் நைட்டிங்கேல் அம்மையாரின் பங்களிப்பு உண்டு ! 1865 ஆம் ஆண்டு, “இந்திய மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கான ஆலோசனை “ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

  அவரது 200 வது பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், 2020 ஆண்டை சர்வதேச செவிலியர் ஆண்டாக  உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

  செவிலியரின் உன்னதப் பணி

   உலக  செவிலியர் நாளான மே 12ம் நாள், புளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவைப் போற்றுதலோடு, உலகம் முழுதும் தியாக உணர்வுடன் தொண்டு செய்து கொண்டிருக்கும் செவிலியர் அனைவருக்கும் நம் நன்றியும், பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்க வேண்டிய தினமாகும்.

  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நாம், மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் தொண்டின் மகத்துவத்தினை நன்கு அறிந்துள்ளோம்.

  இந்த வருடத்துக்கான கருப்பொருளாக,  (  theme of the year  ) “ A Voice to Lead : A Vision for Future Healthcare “  என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் பணி சார்ந்த தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகள், போட்டிகள், களப்பணியைத் தரமாக்குதலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  கடந்த ஆண்டு, செவிலியர் தினத்தன்று, நமது செவிலியர்கள் கருணையே வடிவானர்கள் என நமது பிரதமர் நெகிழ்ந்து கூறினார்.

  முதல் உதவி, ஊசி இடுதல், மருந்து மாத்திரைகள் தருதல், காயங்களைக் கவனித்து மருந்திடுதல், முதியோர் நலம் பேணுதல் என கொ.மு ( கொரோனாவுக்கு முன் ) காலத்திலேயே செவிலியரின் சேவை சமூகத்துக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும் !

  இன்றோ, கொ.பி காலத்தில், ”பாதுகாப்பு உடை “ எத்தனை அசௌகரியமாக இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளாராக, தம் உயிரையும் துச்சமாக மதித்து, மக்கள் பணியில் ஈடுபட்டு, தம் சொந்தக் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் கூட கவனிக்க நேரமில்லாமல், தன்னலமற்று, ஓய்வில்லாமல், தொடர்ந்து பணி செய்து வரும் நம் செவிலியரின் சேவையைப் பாராட்ட வார்த்தைகளே  இல்லை !

  பெருந்தொற்றுக் காலத்தில், தீவிரப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தொண்டுள்ளங்களைத் தலை வணங்குவோம் !

  செவிலியரும், அவருடன் மருத்துவப் பணியில் ஈடுபட்டு உள்ளோரும், அவர்களது குடும்பத்தாரும் நல்ல உடல் நலமும், மன நலமும் ஆத்ம பலமும் பெற வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திப்போம் ! 

  சர்வதேச செவிலியர் தினமான இன்று செவிலியர்களை நன்றியுடன் பாராட்டி வாழ்த்துவோம் !


  கட்டுரையாளர்: ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிரியராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர்.


  1 COMMENT

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,264FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-