October 17, 2021, 12:29 am
More

  ARTICLE - SECTIONS

  அண்ணா என் உடைமைப் பொருள் (29): திவ்ய சங்கல்பம்!

  அண்ணாவின் பணிகள் complete ஆகவில்லை என்பது அவரது வருத்தம். மேட்டூர் ஸ்வாமிகளின் divine dissatisfaction புரிகிறது. அண்ணாவின் உழைப்பும் புரிகிறது.

  anna

  அண்ணா என் உடைமைப் பொருள் – 29
  திவ்ய சங்கல்பம்
  – வேதா டி. ஸ்ரீதரன் –

  அண்ணா மேற்கொண்ட ஒரு விபரீத முயற்சியைப் பற்றி அவசியம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் சிறுகதை எழுத மேற்கொண்ட முயற்சியைத் தான் குறிப்பிடுகிறேன். நாலைந்து கதைகள் எழுதி இருக்கிறார். அதை ஏன் விபரீத முயற்சி என்று சொல்கிறேன் என உங்களுக்குத் தோன்றலாம்.

  வேறு ஒன்றுமில்லை, அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்தால்ஏதோ ரிஸர்ச் பேப்பர் படிப்பது போல இருக்கும். அவ்வளவு தான்.

  பெரும்பாலும் அண்ணா பத்திரிகைகளில் தொடர்கள் எழுதுவார். இவை பிற்காலத்தில் நூலாக வெளியிடப்படும். தொடர்கள் அல்லாத தனிக் கட்டுரைகள் அனைத்தையும்தொகுத்து தரிசனம் என்ற நூல் வெளியிடப்பட்டது. அண்ணா எழுதிய சிறுகதைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

  anna alias ra ganapathy9 - 1

  சிறுகதை என்ற விபரீதம் கூடப் பரவாயில்லை. திடீரென்று அண்ணாவுக்கு மிகமிக விபரீத ஆசை தோன்றி விட்டது போலும்! மகா பெரிய ட்ராஜடி நாவல் எழுதும் முயற்சியில் இறங்கி விட்டார். ‘‘அகத்தியர்: ஐக்கிய சக்தியின் அவதாரம்’’ என்பது அந்த நூலின் பெயர்.

  அண்ணா எழுத ஆரம்பித்த ட்ராஜடி கதை, கடைசியில், இரட்டை டாக்டரேட்டுக்கான ரிஸர்ச் பேப்பர் மாதிரி,படுபடு சீரியஸ் புத்தகமாக உருவெடுத்து விட்டது.உண்மையிலேயே இது தான் பெரிய ட்ராஜடி.(ட்ராஜிக் காமெடி?)

  ரிஸர்ச் பேப்பர் என்பது கேலியாகச் சொல்கிறேனே தவிர, அகத்தியர் புத்தகத்தின் முழுப் பகுதியும் அப்படி இல்லை. அதன் பெரும் பகுதி புராணக் கதை தான். அண்ணாவின் நூல்கள் எல்லாமே கனமானவை தான்.(நான் புத்தகத்தின் எடையைச் சொல்லவில்லை,விஷய கனத்தைக் குறிப்பிடுகிறேன்.)அவற்றில் இந்த நூல் ரொம்ப கனமானது என்று சொல்வது சரியான விளக்கமாக இருக்கும். பூமியின் பாரத்தை சமன் செய்யும் அளவு எடை கொண்ட குறுமுனி அல்லவா, அகத்தியர்?போதாக்குறைக்கு, கடலையும் பானகம் பண்ணியவர். அவரைப் பற்றிய நூலும் கனமாகத் தானே இருக்க முடியும்?


  அண்ணா மீதான ஸ்வாதீனத்தில் நான் கேலியாகச் சொன்னாலும், இந்த இரண்டு நூல்களைப் பற்றிய சில செய்திகள் மிகவும் உன்னதமானவை.


  கும்பகோணம் மடத்துப் பாடசாலை வாத்தியாரான ரங்கராஜனைப் பற்றி அண்ணா எழுதி இருந்த கட்டுரையை தரிசனம் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என அண்ணா விரும்பினார். ஆனால், அவரிடம் அதன் பிரதி இல்லை. மேலும், அது எந்தப் பத்திரிகையில், எந்த ஆண்டு வெளியாகி இருந்தது என்ற விவரமும் அவருக்கு நினைவில்லை.

  அண்ணா, அந்தக் கட்டுரை வெளிவந்த புதிதில் அந்தப் பத்திரிகைப் பிரதி ஒன்றை ரங்கராஜனுக்கு அனுப்பி இருந்தார். அவரிடம் கேட்டால் பிரதி கிடைக்க வாய்ப்பு உண்டு என்று அண்ணா நினைத்தார். ஏனோ அண்ணா அவருக்கு ஃபோன் பண்ண விரும்பவில்லை. என்னை நேரில் போய் வாங்கி வருமாறு பணித்தார்.

  நானும் கும்பகோணம் மடத்துப் பாடசாலைக்குப் போய் ரங்கராஜனைச் சந்தித்தேன். அண்ணா அந்தப் பத்திரிகைப் பிரதியை அனுப்பியது அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. தான் அந்தக் கட்டுரையை வாசித்ததாகவும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், அந்தப் பிரதியை யாரோ வாங்கிக் கொண்டு போனதாகவும், திருப்பித் தரவில்லை என்றும் தெரிவித்தார். இதைத்தவிர அவருக்கு வேறு விவரங்கள் ஞாபகம் இல்லை. எந்தப் பத்திரிகையில் அந்தக் கட்டுரை வெளியாகி இருந்தது என்பது கூட அவருக்கு நினைவில் இல்லை. அந்தப் பிரதியை யாரிடம் கொடுத்தோம் என்பதும் நினைவில்லை.நான் வெறும் கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று.

  தரிசனம் நூலில் அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க முடியவில்லை.

  ஆன்மிக எழுத்தாளர்களில் முக்கியமானவர் – அதுவும் பெரியவா பற்றி எழுதியவர், தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் – இப்படிப்பட்ட அண்ணா இந்த மனிதரைப் பற்றி எழுதி இருக்கிறார். இது அவருக்கு எப்பேர்ப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்! ஆனால், இந்த மனிதரோ அதைப் பற்றிய ப்ரக்ஞையே இல்லாதவராக இருக்கிறார்! ஏன் அப்படி என்ற கேள்வி எனக்குள் பெரிதாக எழுந்தது.

  இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கட்டுரையை நான் படித்திருந்தேன். அதன் விஷயங்களும் ஓரளவு நினைவில் இருந்தன. எனினும் அந்தக் கட்டுரைஇந்த மனிதரைப் பற்றியது என்பது அப்போது தான் புரிந்தது.

  அந்த ரங்கராஜன் தான் தற்போதைய அகோபில மடத்து ஜீயர் ஸ்வாமிகள்.

  இந்த ரங்கராஜனைப் பெரியவா பாடாய்ப் படுத்தி இருக்கிறார்.“Nobody can love this beggar like my Father Swami Ramdas and nobody can torture this beggar like my Father Swami Ramdas. My Father killed this beggar because He loved this beggar” என்று தனது குருவைப் பற்றி யோகியார் சொல்வது அச்சு அசலாக ரங்கராஜன்-பெரியவா உறவுக்கும் பொருந்தும்.

  பப்பா ராமதாசர், ஒரு சாதகரைப் பாடாய்ப் படுத்தி, அவரை யோகியாக உயர்த்தியதைப் போலவே, பெரியவா, இந்த சாமானிய மனிதரைப் பாடாய்ப் படுத்தி, ஜீயர் ஸ்தானத்துக்கு உரிய தகுதிகள் படைத்தவராக உயர்த்தி இருக்கிறார். சிவன் சார் அன்பரான ஶ்ரீ சிவராமன், பெரியவா அன்பர்கள் சில நூறு பேரிடம் விரிவான பேட்டிகள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த ஜீயர் ஸ்வாமியின் பேட்டியும் உள்ளது.


  பல வருடங்களுக்கு முன், ஒருமுறை மடத்துப் பாடசாலைக்குள் சில விஷமிகள் புகுந்து அங்கிருந்தவர்களின் பூணூலை அறுத்தனர். அவர்கள் வெளியேறியதும் இந்த விஷயம் பெரியவாளுக்குத் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே பெரியவா, திடுக்கிட்டவராக, ‘‘ரெங்கராஜன் பூணூலையுமா அறுத்துட்டா?’’ என்று பதைபதைப்புடன் கேட்டாராம்.

  ரங்கராஜன் பூணூலை அவர்களால் அறுக்க முடியவில்லை. காரணம், அவர் பூணூலை இடுப்பில் சுற்றிக் கொண்டு, அதன் மேல் அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கொண்டு, நாராயணா, நாராயணா என்று கோஷமிட்டவாறே தரையில் அங்கப்பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்து விட்டார். விஷமிகள் வெளியேறும் வரை அங்கப் பிரதக்ஷிணம் தொடர்ந்தது.

  இதன் பின்னர் பெரியவா சற்று நேரம் கண் மூடி தியானத்தில் அமர்ந்தாராம். ஒரு செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனதும், சம்பந்தப்பட்ட நபருக்காக உடனடியாக தியானத்தில் அமர்ந்ததும் பெரியவா வாழ்வில் நடந்த மிக அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்று.

  அதுமட்டுமல்ல, கண்ணுக்குள் வைத்துக் காப்பது என்று சொல்கிறோம் அல்லவா? அதேபோல, இந்த மனிதரைப் பெரியவா கண்ணுக்குள் வைத்துக் காத்து வந்தார் என்றே சொல்லலாம்.


  பெரியவா வாழ்வில் இதேபோன்ற இன்னொரு தியான நிகழ்வு இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் மதுரை ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்தது.

  மயிரிழையில் உயிர் தப்புவது என்பது ராம. கோபாலன் விஷயத்தில் நூறு சதவிகிதம் சரி. ஒரு பயங்கரவாதிஅவரை அறிவாளால் கழுத்தில் வெட்டினான். அறிவாள் அவர் கழுத்தில் இன்னும் இரண்டு மில்லி மீட்டர் இறங்கி இருந்தால் அந்தக் கணமே அவர் உயிர் போயிருக்கும்.

  வெட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த கழுத்தைக் கையால் தூக்கிப் பிடித்துக் கொண்ட அவர், தன்னை நோக்கிப் பதட்டத்துடன் ஓடி வந்த காவலர்களிடம், ‘‘அதோ ஓடுகிறானே, அவன் தான் என்னை வெட்டியவன்’’ என்று குற்றவாளியை அடையாளம் காட்டினார். மேலும் அவர்,முழு சுயநினைவுடன் தனது சட்டைப் பையில் இருந்து டெலிஃபோன் இன்டெக்ஸை எடுத்துஅவர்களிடம் கொடுத்து, யார் யாருக்கெல்லாம் தகவல் சொல்ல வேண்டும் என்ற விவரத்தையும் கூறினார். அவர் தகவல் சொல்லச் சொன்ன பெயர்களில் பெரியவாளும் உண்டு.

  ராம. கோபாலன் வெட்டப்பட்ட தகவல் கிடைத்த பொழுதும், பெரியவா, இதேபோல தியானத்தில் அமர்ந்தார்.


  எனக்குத் தெரிந்து அண்ணா மூன்று தடவை புத்தகங்களைக் கழித்துக் கட்டி இருக்கிறார். நானும் அவற்றில் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டது உண்டு. அண்ணாவிடம் அன்னதானம் சிவன் பற்றிய அந்தக் கால வெளியீடுகள் இரண்டு இருந்தன என்று என்னிடம் சொல்லி இருந்தார். அண்ணா அடுத்த தடவை புத்தகங்களைக் கழித்துக் கட்டும் போது அந்த இரண்டு நூல்களையும் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தேன்.

  ராம. கோபாலன் ஒருமுறை அண்ணாவைச் சந்தித்தார். அப்போது இந்த இரண்டு நூல்களும் அவருக்கு தானம் போய் விட்டன. கோபால்ஜீயின் புத்தகங்கள் அனைத்தும் தற்போது அந்தர்தானமாகி விட்டன. நான் விசாரித்த வரையில் அன்னதானம் சிவன் பற்றிய புத்தகங்கள் இந்து முன்னணி அலுவலகத்தில்இல்லை.

  கோபால்ஜீ அண்ணாவைச் சந்தித்து விட்டுப் போனதற்குச் சிறிது நேரம் கழித்து நான் அண்ணாவிடம் போயிருந்தேன். கோபால்ஜீயின் பணிவைத்தன்னால் நம்பவே முடியவில்லை என்று அண்ணா என்னிடம் குறிப்பிட்டார். ‘‘மேடையில ரொம்ப ஆக்ரோஷமா பேசுவார்னு சொல்லுவா. அடக்க ஒடுக்கமா உக்காந்திண்டிருந்தார் இங்கே’’ என்று குறிப்பிட்டார்.


  திருச்சியில் எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவரின் மனைவி தான் அன்னதானம் சிவன் பரம்பரையில் தற்போது இருக்கும் ஒரே உறுப்பினர். அந்தப் பெரியவரிடம் அன்னதானம் சிவன் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. எனக்கு அதைத் தருவதாக வாக்களித்தார். ஆனால், அவரால் அதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

  annadhanam sivan - 2

  அன்னதானம் சிவன் பற்றி மகா பெரியவாள் விருந்து, தரிசனம் ஆகிய இரண்டு நூல்களில் அண்ணா எழுதி இருக்கிறார். இவை தவிர யாரிடமாவது கூடுதல் விவரங்கள் இருந்தால் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்ளேன், ப்ளீஸ்.


  அண்ணாவின் காலத்தில் கடைசியாக வெளிவந்த அவரது நூல் தரிசனம்; அவர் காலத்துக்குப் பின்னர் வெளிவந்த அவரது நூல் ‘‘அகத்தியர்: ஐக்கிய சக்தியின் அவதாரம்’’.

  யதேச்சையாக ஶ்ரீ கணேஷ் சர்மாவுக்கு அகத்தியர் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி கிடைத்தது.இதைத்தொடர்ந்து புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்யுமாறு ஶ்ரீ மோகனராமன் என்னைக் கேட்டுக் கொண்டார்.

  கையெழுத்துப் பிரதியை வாங்கிப் புரட்டிப் பார்த்தேன். மிகவும் கனமான சப்ஜெக்ட். மிகுந்த தமிழ் ஆர்வம் உடையவர்கள் தான் அந்தப் புத்தகத்தை விரும்பிப்படிப்பார்கள் என்பது புரிந்தது. இதுபோன்ற ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவது முக்கியம். எனவே, பெரியவாளுடன் தொடர்புடைய ஏதாவது அமைப்பு மூலம் இந்த நூலை வெளியிடுவது நல்லது என்று நினைத்தேன். அத்தகைய அமைப்பினருக்குத் தான் அண்ணாவின் வாசகர்களுடன் ஓரளவாவது சம்பந்தம் இருக்கும். சிவன் சார் ட்ரஸ்டில் கேட்டுப் பார்த்தேன். வெளியிடுவதற்கு அவர்கள் தயார், ஆனால், புத்தக உருவாக்கத்துக்கு யார் பொறுப்பேற்பது – குறிப்பாக, ப்ரூஃப் படிப்பதற்கு – என்பது அவர்களின் கவலை. நான் பொறுப்பேற்கிறேன் என்று சொன்னதால் அவர்களும் சம்மதித்தார்கள்.

  எனது அலுவலகத்திலேயே டிடிபி வேலைகளை முடித்து ப்ரின்ட் எடுத்து ப்ரூஃப் படிக்க ஆரம்பித்தேன்.

  சிக்கல் புரிந்தது.

  அந்தப் புத்தகம் முழுமையான புத்தகம் அல்ல. பல பகுதிகளைக் காணோம். வாதாபி ஜீரணம், விந்திய கர்வ பங்கம், காவிரி ஜனனம் முதலான பல முக்கிய விஷயங்களைக் காணவில்லை. அந்த நூலில் ஆங்காங்கே அண்ணா குறிப்பிட்டுள்ள விவரங்களைப் பார்க்கும் போது, இவை அனைத்தையுமே அவர் அந்த நூலில் எழுதியுள்ளார் (அல்லது, எழுத விரும்பியுள்ளார்) என்பது புரிந்தது. தொல்காப்பியர் சாபம் பற்றி அந்த நூலில் எழுதி இருப்பதாகவும் அண்ணா குறிப்பிட்டிருக்கிறார்.

  ஆனால், இந்தப் பகுதிகள் எதுவுமே கையெழுத்துப் பிரதியில் இல்லை.

  (நான் விசாரித்த வரையில், தொல்காப்பியர் சாபம் மிகப் புதிய செய்தி. நான் தொடர்பு கொண்டு விசாரித்த அறிஞர்கள் யாருக்குமே இது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.)

  பல பகுதிகளைக் காணவில்லை தான், அதேநேரத்தில் ஒவ்வோர் அத்தியாயமும் முழுமையாக உள்ளது, அத்தியாய எண்கள் வரிசையாக உள்ளன. கடைசி அத்தியாயம் நிறைவுப் பகுதியைப் போலவே உள்ளது. இதுபோன்ற அம்சங்களை வைத்துப் பார்த்தால், மேலே சொன்ன பகுதிகள் இல்லாமலேயே அண்ணா அந்த நூலை நிறைவு செய்திருக்கிறார் என்று கருதவும் இடமுண்டு.

  கிடைத்திருந்த கையெழுத்துப் பிரதி பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதையும் யூகிக்க முடிந்தது. எனவே, அண்ணா அந்த நூலை நிறைவு செய்திருந்தாலும், ஏதோ காரணங்களால் அதை வெளியிட விரும்பாமல் இருந்திருக்கிறார் என்பதும் புரிந்தது.

  இப்பொழுது நான் என்ன செய்வது: நூலை வெளியிடலாமா வேண்டாமா?

  என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

  இறுதியில், ஏதோ ஒரு தூண்டுதலின் பேரில் பணிகளை முடித்து அனுப்பினேன். அண்ணா எழுதி அச்சுக்கு வராத ஒரு நூலை அச்சிட உறுதுணையாக இருந்த பெருமிதம் இருந்தது உண்மையே.அதேநேரத்தில், அண்ணா வெளியிட விரும்பாத புத்தகத்தை வெளியிட்டு விட்டோமோ என்ற உறுத்தலும் இருந்தது.

  எனினும், நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது, அந்த நூல் என் மூலம் வெளியாக வேண்டும் என்பது அண்ணாவின் சங்கல்பம் என்று நம்பத் தோன்றுகிறது.

  காரணம் 1:

  ப்ரூஃப் படிப்பதில் எனக்கு மிகுந்த அனுபவம் உண்டு என்பது உண்மையே. ஆனாலும், மிகுந்த அச்ச உணர்வுடனேயே அகத்தியர் புத்தகம் ப்ரூஃப் படித்தேன். அண்ணா நம்மிடையே ஸ்தூலமாக இல்லை என்பது ஒரு காரணம். ப்ரூஃப் படிப்பதில் எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது என்பதும் முக்கியமான காரணம். இதனால் என் ப்ரூஃப் ரீடிங் தரம் குறைந்து விட்டது. எங்கள் பதிப்பக வெளியீடுகளை ப்ரூஃப் படிப்பதற்கு இரண்டு நண்பர்கள் உதவி செய்வதுண்டு. ஆனால், அவர்கள் அகத்தியர் புத்தகம் ப்ரூஃப் படிக்க ஏற்ற நபர்கள் அல்ல. என்னையும் நம்ப முடியாது, எனது குழுவில் உள்ள பிறரையும் நம்ப முடியாது, அண்ணாவும் இல்லை.

  எனினும், அந்தப் புத்தகம் மிக நல்ல விதத்தில் அச்சாகி உள்ளது. அண்ணாவின் புத்தகம் எத்தகைய தரத்தில் உருவாக வேண்டுமோ, அத்தகைய தரத்தில் உருவாகியுள்ளது.

  இது எனது முயற்சிக்கும் உழைப்புக்கும் அப்பாற்பட்ட விஷயம். அனுக்கிரகம் என்பதைத் தவிர இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்க முடியாது.

  காரணம் 2:

  ப்ரூஃப் படிக்கும் வேலையின் முதற்கட்டம், கையெழுத்துப் பிரதியுடன் லேசர் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது. நான் இந்த வேலையைச் செய்ததே கிடையாது. எனவே, இந்த வேலைக்கு நான் பொருத்தமற்றவன். அதேநேரத்தில், அகத்தியர் புத்தகத்தில் இது மிக முக்கியமாகச் செய்யப்பட வேண்டியது. எனவே, செய்தாக வேண்டிய கட்டாயம்.

  மேலும், இந்த வேலையை இரண்டு பேர் சேர்ந்து தான் செய்ய முடியும் – ஒருவர் கையெழுத்துப் பிரதியை வாசிக்க வேண்டும், மற்றவர் லேசர் பிரதியைச் சோதிக்க வேண்டும்.

  இந்த வேலையில் ஓர் அன்பர் எனக்கு உதவ முன்வந்தார்.

  பணிகள் நடைபெற்ற காலத்தில், அவர் தன் மனதில் இருந்த சில பெரியகவலைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். தன் நிலைமையைப் பற்றி அவர் குறிப்பிடும் போது அவர் மிகவும் மனம் வருந்தி அழுதார். இது எனக்கு வேதனையாகஇருந்தது.அவருக்காக நான் அண்ணாவிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.

  புத்தக வேலைகள் முடிந்தன. அச்சுக்கு அனுப்பி விட்டேன். புத்தகப் பிரதி கைக்குக் கிடைக்கும் முன்பாகவே அவருக்கு ஒரு விபத்து நேரிட்டது. அதைத் தொடர்ந்து அவருக்குத் தலையில் சர்ஜரி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் கோமா நிலையில் இருந்தார். புத்தகப் பிரதியை அவரால் பார்க்கக் கூட முடியவில்லை. நீண்ட கால கோமாவுக்குப் பின்னர், சில மாதங்கள் முன்பு அவர் மரணமடைந்து விட்டார்.

  இது தான் அண்ணா அவருக்குச் செய்த அனுக்கிரமா என்று அண்ணா மீது கோபம் வந்தது. அதேநேரத்தில்,வேதனை மிகுந்த அந்த மனிதர் ஒரு புனிதமான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு என் மூலம் கிடைத்தது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

  இதை நினைக்கும் போதெல்லாம் நான் நெகிழ்ந்து போகிறேன்.

  அவரது மாமனார் மிகுந்த ஆசார சீலர். தமிழறிஞர். சம்ஸ்கிருதத்திலும் நல்ல தேர்ச்சி உடையவர். தற்போது அவர் இல்லை என்றாலும், அண்ணாவின் அகத்தியர் புத்தக உருவாக்கத்தில் அவரது குடும்பத்தின் பங்களிப்பு இருந்தது என்பது அவரது மொழியறிவுக்கும் ஆசாரத்துக்கும் கிடைத்த மிகப் பெரிய வெகுமானம்.

  காரணம் 3:

  அந்த நூலில் அண்ணா ஒரு மந்திரத்தைப் பற்றி எழுதி இருந்த தகவல் தவறானது. ஏறக்குறைய அந்த நூலில் இருந்த அத்தனை விஷயங்களுமே எனக்குப் புதிய செய்திகள் தான். இந்நிலையில், ரொம்ப ரொம்ப வினோதமான விதத்தில், இந்த ஒரே ஒரு மந்திரத்தின் பயன்பாடு குறித்த தகவலை மட்டும் சரிபார்ப்பதற்காக இரண்டு சாஸ்திரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். இருவருமே அந்தத் தகவல் தவறானது என்று தெரிவித்தார்கள்.

  அண்ணா விஷயத்தில் இதுபோன்ற ‘‘யதேச்சையான’’ விஷயங்கள் எல்லாமே அவரது விருப்பப்படி நடந்தவை என்பது பிற்காலத்தில் புரிய வந்திருக்கின்றன.‘‘நான்’’ எழுதிய காரேய் கருணை ராமானுஜா புத்தகம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அதுபோலவே இந்த நூலிலும், அவர் செய்யும் வேலை என் மூலம் நடப்பதாக அவர் காட்டியுள்ளார் என்பது எனக்குப் புரிகிறது

  காரணம் 4:

  அகத்தியர் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் மிகவும் அரிதாகி விட்டன. நூலகங்களில் சில குறிப்புதவி நூல்கள் இருக்கும் என்பது நன்றாகவே புரிகிறது. எனினும், அண்ணா எழுதியுள்ள இந்த நூல், தமிழ், வரலாறு, தொன்மையான நம்பிக்கை, தத்துவம் ஆகிய நான்கு அம்சங்களை உள்ளடக்கியது. அகத்தியரைப் பற்றிய இதுபோன்ற ஒரு நூல் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆவணத் திரட்டு என்றே என் மனம் நம்புகிறது.

  ஆராய்ச்சி மாணவர்களுக்கு அது ஒரு பொக்கிஷம்.

  யாரோ ஒருசிலருக்குப் பயன்பட வேண்டும் என்ற திவ்ய சங்கல்பத்தின் காரணமாகவே அது வெளியாகி உள்ளது. எனினும், இத்தகைய ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது என்ற செய்தியே பொதுவெளியில் பிரபலமாகவில்லை.

  நூல் வெளியானதற்குக் காரணமான சங்கல்பம் எதுவோ, அதுவே பயனாளிகள் கைக்கு நூல் பிரதிகளைக் கொண்டு சேர்க்கும்என்பது என் நம்பிக்கை.

  ***

  அண்ணா உண்மையில் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்வதற்குக் காரணமாக அமைந்ததும் இந்த நூலே.

  அண்ணாவின் புத்தக ஷெல்ஃபில் அவ்வப்போது நாஃப்தாலின், வசம்பு அடங்கிய துணிப்பைகளைப் போட்டு வைப்போம் – புத்தகங்களைப் பூச்சி அரிக்காமல் இருப்பதற்காக. புத்தகங்கள் என்றால் அவை புத்தகங்கள் மட்டுமல்ல, நிறைய காகிதங்களும் அவற்றில் இருக்கும். கொத்தாகப் பல காகிதங்களையும் ஒருசில புத்தகங்களையும் சேர்த்து பாலிதீன் கவரில் போட்டு வைத்திருப்பார், அண்ணா. அந்தக் காகிதங்களில் என்ன எழுதி வைத்திருந்தார் என்று நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை. இதுபோலப் பல ஆயிரக்கணக்கான காகிதங்கள் இருந்தன என்பது மட்டும் நன்றாகத் தெரியும்.

  அகத்தியர் புத்தகத்துக்கான கையெழுத்துப் பிரதியை கணேஷ் சர்மா என்னிடம் தரும்போது இரண்டு பெரிய பண்டல்களையும் சேர்த்தே கொடுத்தார். அவற்றில் அண்ணா பயன்படுத்திய ஒருசில புத்தகங்களும் இதேபோன்ற காகிதங்களும் இருந்தன. எனக்குத் தேவை அகத்தியர் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி மட்டுமே. அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி விஷயங்களைப் பரணில் போட்டு விட்டேன்.

  சமீபத்தில் ஒரு நாள் யதேச்சையாக அந்தப் பையை எடுத்துப் பார்த்தேன். அண்ணாவிடம் இதேபோல ஆயிரக்கணக்கான காகிதங்கள் இருந்தனவே அவற்றில் என்ன எழுதி வைத்திருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, அந்தப் பைக்குள் இருந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தேன். ஒவ்வொரு கவருக்குள்ளும் ஒருசில காகிதங்கள் இருந்தன. ஒவ்வொரு காகிதக் கட்டும் ஒரு புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி. ஏதேதோ புத்தகங்களைப் பார்த்து அவற்றைக் காகிதங்களில் எழுதி வைத்திருக்கிறார், அண்ணா.

  இவற்றை ஏன் கையால் எழுத வேண்டும் என்பதே புரியவில்லை.

  அனேகமாக, இவையெல்லாம் இரவல் வாங்கிய புத்தகங்களாக இருக்கும் என்பது என் யூகம். 1980களின் இறுதியில் தான் இந்தியாவில் ஜெராக்ஸ் இயந்திரம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்னர் டைப்பிங் மட்டுமே. டைப் பண்ணுவதற்குப் பதில் அண்ணா கையாலேயே அவற்றைப் பிரதி எடுத்திருக்கிறார்.

  அண்ணா எழுத்தில் உருவாகி அச்சிடப்பட்ட நூல்களின் பக்க எண்ணிக்கை மட்டுமே சுமார் 30 ஆயிரம் பக்கங்கள் இருக்கும். இவற்றில் எதையும் யாரும் அவருக்காக டைப் பண்ணித் தரவில்லை. அனைத்தும் அவரால் எழுதப்பட்டவையே. இது தவிர, தெய்வத்தின் குரலுக்காக அவர் எழுதிய குறிப்புகள் எத்தனை ஆயிரம் பக்கங்களோ?(பெரியவா சொல்லும் வேகத்தில் அண்ணா நோட்ஸ் எழுதிக் கொள்வார். சில சந்தர்ப்பங்களில் அண்ணாவுக்காகப் பெரியவா நிறுத்தி நிறுத்திப் பேசுவதும் உண்டு. பெரியவா உரைகளைப் பதிவு செய்வதற்கு டேப் ரெகார்டர் முதலான சாதனங்களை அவர் பயன்படுதியதே இல்லை.)தெய்வத்தின் குரல் ஏழு பகுதிகள் தான் வந்திருக்கின்றன. ஆனால், குறைந்தது மேலும் இரண்டு பாகங்களுக்காவது அவரிடம் விஷயங்கள் இருந்தன. அண்ணாவே என்னிடம் இதைச் சொல்லி இருக்கிறார்.

  இவை தவிர, நான் மேலே குறிப்பிட்டுள்ளது போல இரவல் புத்தகங்கள். இவை எத்தனை ஆயிரம் பக்கங்களோ?

  தோராயமாக மதிப்பிட்டுப் பார்த்தேன். அனேகமாக, அண்ணா தனது வாழ்நாளில் ஏ-4 காகிதத்தில் சுமார் இரண்டு லட்சம் பக்கங்கள் எழுதி இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. வாழ்நாளில் என்று சொல்வது தவறு. சுமார் 35 வருடங்களில் என்று சொல்வதே சரியாக இருக்கும்.(அண்ணாவின் எழுத்துப் பணி சுமார் 35 வருடங்கள் தான் நீடித்தது.)

  மனித உழைப்பா அது!!


  mettur swamigal - 3

  மேட்டூர் ஸ்வாமிகளுக்கு அண்ணா மேல் மிகுந்த வருத்தம்.

  ஸ்த்ரீ தர்மம் பற்றிப் பெரியவா சொல்லி இருக்கும் கருத்துகள் ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அந்த நூல் முழுமையானது அல்ல என்பது அவரது கருத்து. இதுபற்றிப் பெரியவா நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார், அண்ணா அவற்றை வெளியிடவில்லை என்று அவர் என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார்.

  மேலும், அண்ணா திரட்டியுள்ள குறிப்புகளைக் கொண்டு தெய்வத்தின் குரல் இன்னும் இரண்டு பாகங்களாவது வெளியிட்டிருக்க முடியும். அண்ணா அதைச் செய்யவில்லை என்பதும் அவரது வருத்தத்துக்குக் காரணம்.அண்ணாவின் பணிகள் complete ஆகவில்லை என்பது அவரது வருத்தம்.

  மேட்டூர் ஸ்வாமிகளின் divine dissatisfaction புரிகிறது. அவரைப் போலவே பெரியவா அன்பர்கள் பலருக்கு அண்ணா மீது வருத்தம் இருக்கும் என்பதும் புரிகிறது. அண்ணாவின் உழைப்பும் புரிகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-