spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பாரதி-100: கண்ணன் பாட்டு (3)

பாரதி-100: கண்ணன் பாட்டு (3)

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 3, கீதையின் நாயகனா? வேய்ங்குழல் வேந்தனா?

     “பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்கு மாலை சூட்டுகின்ற கவிகள் அருமை” எனத் தமிழ் இலக்கிய விமர்சன முதல்வர் வ.வெ.சு. ஐயர் அவர்களும், பாரதியின் கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பிற்கு 1919இல் எழுதிய முன்னுரையில் சுட்டிக் காட்டினார்.

கண்ணனை ஆயர்பாடியில் குழலூதும் கண்ணனாகவும், மகாபாரத யுத்தத்தில் கீதோபதேசம் செய்த கிருஷ்ணனாகவும் பார்க்கிறோம். பாரதியாரை முதலில் கவர்ந்தது, குருக்ஷேத்திரக் கிருஷ்ணனே என்பதையும் வ.வெ.சு.ஐயர் கண்ணன் பாட்டு முன்னுரையில் கூறுகிறார். அடிமைப்பட்டிருக்கும் நாட்டிற்கு குருக்ஷேத்திர யுத்த களத்தில் சங்கொலிக்கும் கிருஷ்ணனே தேவை; குழலூதும் கண்ணன் அல்ல என சுவாமி விவேகானந்தர் கூறியதை வ.வெ.சு.ஐயர் எதிரொலித்தார்.

     1909ஆம் ஆண்டு பாரதியார் பதிப்பித்த “ஜன்மபூமி“யில் இரு பாடல்களுக்கு “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்” என்றுதான் பெயரிட்டார். பெ.சு.மணி தனது நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பாராட்டிய கண்ணன் பாட்டு பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறார்: “கண்ணனைப் பாடிய ஆழ்வார்கள் அவன் பிள்ளைப் பருவத்தில் ஆய்ச்சியர் இல்லங்களில் புகுந்து வெண்ணெய் திருடி உண்டதையும் காளைப் பருவத்தில் கோபிகையரின் ஆடைகளைக் கவர்ந்ததையும், சுவைபட வருணித்துச் சொல்லியுள்ளார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பாரதியார் “கண்ணன் பாட்டி”லே குறிப்பாகக்கூட எதையும் கூறவில்லை”.

subramanya bharathi
subramanya bharathi

     கண்ணன் பாட்டில் அமைந்துள்ள சிருங்கார ரசப் பாடல்களான “கண்ணன் – என் காதலன்”, “கண்ணம்மா – என் காதலி” ஆகிய பாடல்களைப் பற்றி பாரதி புகழ் பரப்பிய கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கூறும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கன. “எல்லாவற்றிலும் சிகரமாக விளங்குவது கண்ணனின் காதல் காட்சிகள்தாம். சாதாரண ஆண், பெண் காதல் நெகிழ்ச்சியின் பல்வேறு கவசங்களையே கையாண்டு தெவிட்டாத தேவ சுகத்தைப் பாடும் அந்தக் கவிதையின் கற்பனை, தமிழ் இலக்கியம் அகத்துறைக் காட்சிகளிலும், பக்தி இலக்கியப் பண்புகளிலும் எந்நாளும் அழியாத மகா கவிதை” என்கிறார் திருலோக சீதாரம்.

     கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் “பாரதி, “கண்ணம்மா என் காதலி” என்று அழைப்பது அவருடைய பரபக்தி அனுபவத்தின் முதிர்ச்சி என்றே கொள்ள வேண்டுமே அல்லாமல் வெறும் கவிதை அழகுக்காக அவர் படைத்த கற்பனையென்று தள்ளக்கூடாது”. “கண்ணம்மா என் காதலி-6” எனும் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “In Each Other’s Arms” எனும் தலைப்பில் வெளியிட்ட பொழுது, பின்வரும் குறிப்பையும் மகாகவி பாரதியார் இணைத்துள்ளார்.

Note:- In the following verses, the Supreme Divinity styled here Krishna is imaged as the beloved woman and the human soul as the lover – CSB

     கண்ணன் பாட்டின் காதலன் காதலி பாடல்கள் பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இவை தமிழிலக்கிய அகத்திணை நெறியைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கூறுகிறார். “ஐந்திணை ஒழுக்கப்படி கண்ணன் பாடல்களைப் புனைந்த பாரதியார் அதற்குள்ள துறைகள் பலவற்றையும் கையாண்டுள்ளார். வள்ளலாரைப் போன்று அகப்பொருள் துறையில் அதிகப் பாடல்களைப் பாரதியார் பாடிக் குவிக்கவில்லை.

“கண்ணன் என் காதலன்” என்ற தலைப்பிலே நாயகி பாவத்தில் ஆறு பாடல்களையும், “கண்ணம்மா – என் காதலி” என்ற தலைப்பிலே நாயக பாவத்திலே ஆறு பாடல்களையுமாக பன்னிரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். தலைவன்பால் தோழியைத் தூது விடுதல், சிறைப்புறத்திருத்தல், நாணிக் கண்புதைத்தல், குறிப்பிடம் தவறுதல் ஆகிய அகப்பொருள் இலக்கியத் துறைகளைக் கண்ணன் பாட்டில் பாரதியார் பயன்படுத்தியுள்ளார்.

தொல்காப்பியம் அகத்திணையில் வரும் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி ஆகியவையும் கண்ணன் பாட்டிலே கூறப்பட்டுள்ளன. முன்கூறப்பட்ட அகத் திணைத் துறைகளோடு, “முகத்திரை களைதல்” எனும் புதிய துறை ஒன்றையும் பாரதியார் சேர்த்து வைத்துள்ளார்” எனக் கூறி ம.பொ.சி. தமது புதுமை நாட்டத்தைப் புலப்படுத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe