
பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பகுதி – 9, கண்ணன் – என் தந்தை
இப்போது பாடலின் பொருளைக் காண்போம்
என்னை இந்த பூமிக்கு அனுப்பியவன் யார் தெரியுமா? என் தந்தை. எனக்கு தம்பிமார்கள் உண்டு. அவர்கள் பத மண்டலத்திலே இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில்தான் எத்தனையெத்தனை கிரகங்கள். அவைகள் நியமித்த வரைமுறையோடு நித்தநித்தம் உருண்டு கொண்டிருக்கின்றன. இங்கெல்லாம் எங்கள் இனத்தார் இருக்கின்றார்கள். இவர்களையெல்லாம் படைத்த சாமியாம் என் தந்தையைப் பற்றிய வரலாற்றைச் சிறிது சொல்லுகின்றேன்.
கணக்கற்ற செல்வம் படைத்தவன் என் தந்தை, அவன் சேமித்து வைத்திருக்கும் பொன்னுக்கோர் அளவில்லை. கல்வியில் மிகச் சிறந்தவன், அவன் படைக்கின்ற கவிதையின் இனிமைக்கோர் அளவில்லை. இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் அவனுக்கு அடிக்கடி ஒரு கிறுக்குப் பிடித்து விடும். நல்ல வழியில் நேர்மையாக நடப்பவர்களை மனம் நொந்து போய் மனம் தளரும் அளவுக்கு சோதனைகள் செய்துவிடுவான். அவன் பெயரைச் சொல்ல நா தயங்குகிறது. எங்களுக்கு ஈசன் எனலாமா? அல்லது கண்ணன் எனலாமா? நாம் நமது சிறு வயதில் மரியாதை நிமித்தம் நம் தந்தையின் பெயரைச் சொல்லமாட்டோம்; பெரியவர் என்றோ, ஐயா என்றோதான் சொல்லுவோம். அந்தப் பண்பாட்டை மறக்காமல் பாரதியார் தந்தையின் பெயரை எப்படிச் சொல்வது எனப் பாடல் புனைந்திருக்கிறார்.

அவனுடைய பெயரை மூன்று வகையாகச் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வகைக்காகவும் சிலர் சேர்ந்து சண்டைகள் செய்வார்கள். அவன் பிறந்தது தேவர் குலம் என்பர் சிலர். பிறந்தது மறக் குலத்தில் பேதமற வளர்ந்தது இடைக்குலத்தில், ஆனால் அவன் மேன்மையானவன் மிக உயர்ந்தவன் என்று பெயர் பெற்றது பார்ப்பன குலத்தில். அவனுக்கு செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு. அவன் நிறம் நல்ல கருமை, ஆனால் நேயத்தோடு அவன் பழகுவது பொன் நிறப் பெண்களொடு. இங்கே பாரதியார் கண்ணன் சாதி, மத, நிற பேதமற்றவன் என்பதை அழகாகக் கூறுகிறார்.
பொய்யான சாத்திரங்களைக் கண்டு எள்ளி நகையாடுவான். அவனது தோழர்கள் (குசேலன் போன்ற) ஏழை மக்கள்; செல்வம் படைத்த காரணத்தால் செறுக்குடையார் பால் சீறி விழுவான். எத்தனை துன்பம் வந்தாலும் மனம் தளராமல் அதனை எதிர்த்துப் போராடுவோர்க்கு செல்வங்களை அள்ளிக் கொடுப்பான். நேரத்துக்கு நேரம் அவனது புத்தி மாறும். ஒரு நாள் இருந்தது போல் மறு நாள் இருக்க மாட்டான். ஒருவரும் இல்லாத இடம் தேடி ஓடிவிடுவான், பாட்டு கேட்பதிலும் கதை கேட்பதிலும் தன் நேரத்தைச் செலவிடுவான்.
இன்பமே நன்று, துன்பம் இனியதல்ல என்று அவன் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை. அன்பு மிகுந்தவன், உயிர்க்குலம் முழுவதும் தெளிந்த அறிவு பெற அன்பாக செயல்புரிவான்; அவனுக்கு ஒரு அமைச்சன் உண்டு அவன் பெயர் விதி. முன்பு என்ன விதித்திருந்தானோ அதனை தவறாமல் நடக்கச் செய்வான் அவன். அவன் ஒரு மாலை கோர்த்து வைத்தான், அவை வேதங்கள் எனப்படும். அந்த வேதங்கள் மனிதர் பேசும் மொழியில் இல்லை. ஆனால் இப்புவியில் சிலர் சொல்லுகின்ற வெட்டிக் கதைகளில் வேதம் இல்லை. பூமியில் நான்கு குலங்களை அமைத்தான் நல்ல நோக்கத்தோடு, ஆனால் அவற்றை மூட மனிதர்கள் நாசப்படுத்தி விட்டனர்.
சீலம், அறிவு, கருமம் இவைகளில் சிறந்தோர் குலத்தில் சிறந்தவராம்; மேலோர் கீழோர் என்று பிறப்பினால் பிரிக்கப்படும் போலிச் சுவடிகளை தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டாம். அவனுக்கு வயது முதிர்ந்தாலும் வாலிபக் களை மாறவில்லை. அவனுக்குத் துயரம் கிடையாது, மூப்பு கிடையாது, சோர்வு என்பது அவனுக்கு இல்லை, நோய்கள் அவனைத் தீண்டுவதில்லை; பயம் என்பதே இல்லை அவனுக்கு, அவன் யாருக்கும் பரிவதில்லை.
எவர் பக்கமாவது நின்று எதிர்ப்பக்கம் துன்பம் தருவதில்லை. நடுநிலையோடு நடந்துகொண்டு அனைவருக்கும் நன்மை செய்து எல்லாம் விதிப்படி நடப்பதைக் கண்டு மகிழ்ந்திடுவான். துன்பப்படுபவர்களை அரவணைத்து அன்பு காட்டுவான், அன்பைக் கடைப்பிடி துன்பங்கள் பறந்து போகுமென்பான். எல்லோரும் இன்பம் அடைந்திட விருப்பமுறுவான்.