
இலக்கியத்தில் செஸ் (சதுரங்கம்)
- கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
தமிழகத்தில் இப்பொழுது செஸ் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக அளவிலான போட்டி இது. பாரதப் பிரதமர் துவக்க விழாவில் சொன்னது போல செஸ் பிறப்பிடம் தமிழகம். தமிழக முதல்வர் குறுகிய காலத்தில் இப் போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேசத் தரத்துடன் செய்திருப்பதை மனம் உவந்து பாராட்டினார் பிரதமர்.
பாரத தேசம் தான் குறிப்பாக தமிழகம் சதுரங்க விளையாட்டின் பிறப்பிடம் என்பதற்கு தமிழ் இலக்கிய ரீதியாகவும் தொல்லியல் ரீதியாகவும் ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா? எனத் தேடிப்பார்த்தேன். கிடைத்ததைப் பட்டியலிடுகிறேன்
செஸ் அதாவது சதுரங்க விளையாட்டைப் பற்றி அந்தக் காலத்திலேயே எழுதப்பட்ட ஸ்தல புராணங்களில் ஆதாரம் இருப்பதைக் காண முடிந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் திருப்பூவனூர் என்னும் ஊர் பாமணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் குடி கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் சதுரங்க வல்லப நாதர். அம்பாளை சதுரங்கத்தில் வெற்றி கொண்டு ஐயன் மாலை சூடியதால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. ஆகவே இறைவனும் இறைவியும் சதுரங்கம் ஆடியது தமிழகத்தில் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் குளிருகிறது! பாடல் பெற்ற ஸ்தலம் இது. அப்பர் சுவாமிகள் இக்கோவிலைப் பாடி உள்ளார். கிபி ஏழாம் நூற்றாண்டிலேயே இக் கோவில் இருந்திருக்கிறது எனத் தெரிய வருகிறது.

சாளுக்கிய மன்னர்களின் தலைநகராக பட்டடக்கல்( கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டம் பாதமி நகருக்கு அருகில் உள்ள ஊர்) இருந்துள்ளது. இங்குள்ள விருப்பாட்சர் கோவிலிலும் சிவபெருமான் சதுரங்கம் ஆடும் சிற்பங்கள் இருப்பதைக் கண்டு ரசிக்கலாம். இதுவும் ஏழாம் நூற்றாண்டு கோவில்.
கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த போது சதுரங்கத்தில் உள்ள காய்கள் போல் சில மண் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் நினைவில் கொள்ளத் தக்கதாகும்.
“வல் என் கிளவி தொழிற் பெயர் இயற்றே….. “என்பது தொல்காப்பிய மொழியாகும். வல் என்றால் சதுரங்கம் என்று பொருள். சதுர்+அங்கம்=சதுரங்கம்.
சங்க கால இலக்கியமான கலித்தொகையில் வல்லுப்பலகை என்னும் சொல் கையாளப்படுகிறது. சதுரங்கத்தைக் குறிக்கும் சொல் இது.
கவை மனத்து இருந்தும் வல்லு வனப்பு அழிய என்ற அகநானூறு பாடல் மூலம் சங்க காலத்தில் சதுரங்க விளையாட்டு இருந்திருக்கிறது என்பதை மேலும் உணர முடிகிறது!எனவே தமிழகத்திற்கும் செஸ் விளையாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!
செஸ் போட்டியில் இன்று உலக அரங்கில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் தங்க மகன் இளைஞர் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா உடைய கோச் பெயர் கிராண்ட் மாஸ்டர் திரு ரமேஷ் என்பதாகும். இவர் என்னுடைய நண்பர். என்னுடைய(கலைமகள்) அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இவர் நீண்ட நேரம் பல நாட்கள் செஸ் பற்றி விவாதித்ததும் உண்டு! சர்வதேச செஸ் சட்டதிட்டங்கள் பற்றியும் என்னிடம் பேசியது உண்டு. நூற்றுக்கணக்கான இளைஞர்களைத் தயார் செய்து வருகிறார் திரு ரமேஷ்.