
கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலைப்பு சட்டத்தை மீறும் செயலை அரங்கேற்றியுள்ளது இன்று சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜைதாரர் தீட்சிதரை தாக்கியது அவரது மத உணர்வையும், அரசியல் சாசன உரிமையும் மீறும் செயலாகும். அடிப்படை மத உரிமையை மீறும் செயலாகும். கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலமைப்பு மீறலை செயல்படுத்தி அரங்கேற்றியுள்ளது என கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் மற்றும் கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.
நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர் மற்றும் கோயில் வழக்குரைஞர் ஜி.சுந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தவை….
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெரிய வரலாற்று பிழை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோயில் வரலாற்றிலேயே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை.

ஆனித் திருமஞ்சன தரிசனம் உத்ஸவம் நடைபெறுவதால் மூன்று நாட்களாக கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்தனர். திங்கள்கிழமை காவல்துறையினர் அறநிலையத் துறையினருடன் வந்து பலகையை அகற்றி எடுத்து சென்று விட்டனர். அப்போதும் தீட்சிதர்கள் அமைதி காத்தார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிகளவில் காவல்துறையினர் கனகசபை கதவை உடைத்து உள்ளே செல்ல அனுமதிப்போம் என அச்ச உணர்வு ஏற்படும் வகையில் தகவல்கள் வந்தது. இருந்தாலும் தீட்சிதர்கள் மன அமைதியோடு, எந்த அசம்பாவிதம் நடைபெற்றாலும் பாதுகாப்பு வேண்டும் என கேட்டு காவல்துறையில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்கள்.

செவ்வாய்க்கிழமை மாலை சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன் பிறகு நடராஜராகவே மதிக்கப்படும் பூஜைதாரர் தீட்சிதரை திட்டக்குடியைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை ஶ்ரீ தேவி, கொளஞ்சியப்பர் கோயில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் புவனகிரி நகர காவல் ஆய்வாளர் சரஸ்வதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பொன்மகரம் மற்றும் பெண் காவலர்கள் கிழக்கு பகுதி வழியாக உள்ளே நுழைந்து பூஜைகாரர் தீட்சிதரை தாக்கி நிலை குலைய வைத்து பூநூல் அறுபடும் வகையில் நெட்டி தள்ளி கனகசபை மீது ஏறி கீழே இறங்கியுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்கள் பதிவுதபால் மூலம் காவல்துறைக்கு தீட்சிதர்களால் அனுப்பப்படும். இந்த தாக்குதல் நடைபெற்றது அவரது மத உணர்வையும், அரசியல் சாசன உரிமையும் மீறும் செயலாகும். அடிப்படை மத உரிமையை மீறும் செயலாகும்.
கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலமைப்பு மீறும் செயலை செயல்படுத்தி அரங்கேற்றியுள்ளது. இது சிதம்பரம் கோயில் வரலாற்றில் கருப்பு தினமாகும். இதற்கு உரிய வகையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையே பூஜைகாரரை தாக்கும் அளவிற்கு சம்பவம் நடைபெற்ற பிறகு என்ன சொல்வது. பொதுதீட்சிதர்கள் மீது ஒன்றரை ஆண்டுகளாக தமிழகஅரசு நிறைய இடையூறு செய்து வருகிறது. பொய் புகாரின் அடிப்படையில்
மனித உரிமை மீறல்கள், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தீட்சிதர்கள் அனைவரும் அச்ச உணர்வில் உள்ளார்கள்.
இனிமேல் தீட்சிதர்கள் சுதந்திரமாக தங்கள் கடமையையும், மத பூஜைகளை செய்வது என்றால், அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீட்சிதர்கள் சொன்ன சொல்லை மீறுபவர்கள் அல்லர்.
புதன்கிழமை முதல் கனகசபை மீது பூஜை நேரங்களைத் தவிர பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப் படுவார்கள். அரசாணை பொறுத்த வரை தீட்சிதர்கள் சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது… என்றார்கள்…
இதன் அடிப்படையில் பார்த்தால்….
சிதம்பரம் விவகாரத்தில்….
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல் படுகிறது என்றால்…
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசின் காவல்துறை அதிகாரிகளே சட்டவிரோதமாக கதவை உடைத்துக் கொண்டு படியேறி தகராறு செய்திருக்கிறார்கள் என்றால்…
மாநில அரசின் காவல்துறையையோ மாநில அரசையோ நம்புவதற்கு இல்லை. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு சிதம்பரத்துக்கு தேவைப்படுகிறது என்பது தெரிய வருகிறது.
ஏற்கனவே தில்லை சிதம்பர நாதனையும் திருவரங்க நாதனையும் ஏதோ செய்வோம் என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் தங்கள் கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
எனவே உள்நோக்கத்துடன் இந்துக்களின் கோயில்களை நிர்மூலமாக்கி, கொள்ளையடித்துக் கொண்டு வரும் நாத்திக திமுக அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதை எதிர்க்க வேண்டும் என்றால் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பதை கோருவதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே ஆளுநர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அல்லது வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்களை, தங்கள் கொள்கையை செயல்படுத்துவது என்ற பெயரில் அரசாட்சிக்கு வந்த பிறகு நசுக்குவதும் சொல்லவியலாத கொடுமைகளை இழைப்பதும் திமுக அரசின் திட்டமாக இருப்பதால்…
அரசுத்துறை கேள்விக்கு இடமாகிறது.
எனவே தீட்சிதர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை சிதம்பரம் கோயிலுக்குள் பாதுகாப்புக்கு இறங்க வேண்டும்.
நாத்திக திமுக அரசின் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஆட்சியாளர்களுக்கு அடியாட்களாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்ற படை போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கும் கடிவாளம் போட வேண்டுமென்றால்…. மத்திய அரசின் தலையீடு சிதம்பரம் திருவரங்கம் போன்ற தலங்களுக்கு முக்கியமாகிறது