
தமிழிசை என்றால் குறிஞ்சி பாடிய கபிலரிலிருந்தே தொடங்கலாம்; சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலர் பிராமணர்தான். குறிஞ்சிப் பாட்டு என இருப்பதால், ஏதோ மறைந்துபோன இசை மெட்டில்தான் இப்பாடல்கள் அமைந்திருக்க வேண்டும். குறிஞ்சிப் பண்ணில் அமைந்திருக்கலாம்.
திருஞானசம்பந்தர் பாடியதும் தமிழிசைதான்.
களப்பிரர் காலத்தில் பொலிவிழந்து போயிருந்த தமிழிசை காழிப்பிள்ளையாரின் தமிழால் புத்துயிர் பெற்றதாகச் சைவ அறிஞர்கள் எழுதியுள்ளனர். சம்பந்தர் அரன் பணியைத் தொடங்கியபோது தென் தமிழகத்தில் சமணமே கோலோச்சியது.
நாதமுனிகள் தொகுத்ததும் தமிழிசைதான்.
ஸ்ரீமந்நாதமுனிகள் அஷ்டாங்க யோகம் கைவரப் பெற்றிருந்தும் நாலாயிரப் பனுவல்களைப் பரப்பும் பணியை மேற்கொண்டார்; மேலையகத்து ஆழ்வான், கீழையகத்து ஆழ்வான் என்ற தம் மருமக்கள் இருவருக்கும் அவற்றைக் கற்பித்தார். அவர்தம் தமிழிசைக் கொடையை ”காளம்வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்தாளம்வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்தவள்ளல்” என ஸ்ரீ வேதாந்த தேசிகர் கொண்டாடியுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ நாதமுனிகள் காலத்துக்கு முன்னரே அருளிச்செயல் இசை வடிவம் பெற்றிருக்க வேண்டும் .
”தேவு மற்று அறியேன், குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே !” என்றார்
ஸாமவேதம் வல்ல மதுரகவி ஆழ்வார்; ஸ்வாமி நம்மாழ்வாருக்கு மிக அணுக்கமானவர் இந்த ஆழ்வார். இந்த ஆழ்வார் நம்மாழ்வார் காலத்திலேயே மாறன் தமிழை இன்னிசை கலந்து கானம் செய்ய ஆரம்பித்துவிட்டார் என நிரூபணமாகிறது.
“பாவின் இன்னிசை” என்பதற்கு ’பாவிலே பூண்ட இனிய இசை’ என உரை செய்கிறார் ஸ்வாமி நம்சீயர் அவர்கள்; ”பாவின் இன்னிசை ” என்பதற்கு ’இயலோடு சேரப் புணர்ப்புண்ட இன்னிசை’ என விளக்கம் அருளிச் செய்வார் ஸ்வாமி நம்பிள்ளை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆடம்பரமோ, விளம்பரமோ இல்லாமல் இயல், இசை, அவிநயம் அனைத்தையும் பேணிவரும் அரங்கன் திருமுற்றத்து அடியார்களான அரையர்களும் அந்தணர்களே. ’செந்தமிழ் பாடுவார் வீதி’ என்றே இவர்களுக்கான அமைவிடம் இருந்தது திருவரங்கத்தில். ஸ்ரீ ராமாநுஜர் காலத்தில் 700 அரையர்கள் இருந்ததாக குருபரம்பரை நூல் சொல்கிறது. துருக்க கலாப காலத்தில் அழகிய மணவாளன் இல்லாத காலத்திலும் அரங்கத்தில் எஞ்சியிருந்த அரையர்கள் வெறும் கைத்தாளத்தோடு பாசுரங்களை சேவித்ததாக வரலாறு. அரையர் சேவை அரங்கம் தவிரப் பல திவ்யதேசங்களிலும் இருந்துள்ளது. இன்று இவர்களது எண்ணிக்கை அருகி விட்டது.
வில்லிபுத்தூராழ்வார் திருமகனார் ’வரந்தருவார்’ செய்த முதல் தமிழ்த்தாய் வாழ்த்து [14ம் நூற்0] :
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்!
’வாரணமாயிரம்’ பதிகம் இல்லாமல் வைணவ மணவினைகள் முற்றுப்பெறா.
சுப்பிரமணிய ஐயர் [அபிராமி பட்டர்] பாடிய அபிராமி அந்தாதியும் தமிழிசைதான். ஆவுடையக்காள் பாட்டு, ஊத்துக்காடு வேங்கட கவியின் பாட்டுக்கள், ராமஸ்வாமி ஐயர் அவர்கள் செய்த பெரிய புராணக் கீர்த்தனை – பார்வதி சரித்திரக் கீர்த்தனை, கோபால கிருஷ்ண பாரதியார் – கவி குஞ்சர பாரதியார் – அநந்த பாரதியார் – சுப்ரமண்ய பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் அவர்களின் எண்ணற்ற கீர்த்தனைகள், கணக்கற்ற கும்மி – கோலாட்ட – நலுங்குப் பாட்டுகள் எல்லாம் தமிழிசைதான்.
19ம் நூற்றாண்டில் இசையுலகின் சிகரமாக இருந்தவர் கனம் கிருஷ்ண ஐயர்; இவரும் தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றியவர். ’வேலவ’ ‘முத்துக்குமர’ எனும் முருகன் பெயர்கள் கொண்ட முத்திரைகளில் தமிழ்ப் பதங்களை இவர் இயற்றியுள்ளார். ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் தூண்டுதலால் அடாணா ராகக் கீர்த்தனை ஒன்றை இயற்றினார். கோபால கிருஷ்ண பாரதியார் ஆபோகி ராகத்தில் தமிழ்க் கீர்த்தனை பாடக் காரணமாக இருந்தவரும் ஸத்குரு தியாகய்யாதான். இதிலுள்ள பல தகவல்கள் டாக்டர் உ வே சா அவர்கள் கொடுத்துள்ளவையே; இட்டுக்கட்டி எழுதவில்லை.
அருணாசலக் கவிராயரிடம் தமிழ்ப் பாடம் கேட்ட வெங்கட்ராமய்யர், கோதண்ட ராமய்யர் என்ற இரு சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் இராமநாடகக் கீர்த்தனைகளைப் புனைந்தார். அந்த இரண்டு வித்வான்களும் பல ஊர்களிலும் சென்று அந்தக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தினர். பிற்காலத்தில் அரியக்குடி ராமாநுஜ ஐயங்கார் மேலும் மெருகேற்றிப் பாடினார்.
கோடீசுவர ஐயரின் கீர்த்தனைகள் முன்பு பாடப்பட்டன; இப்போது அவை அரிதாகி விட்டன. இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடியுள்ளார். சுப்பராம ஐயர் அவர்களின் தமிழ்ப் பதங்கள் ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்தன, இசைத்தட்டாகவும் வெளியாயின. ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் ‘ ஆனந்தமான சங்கீதம், இதை அறிந்தவர்க்கே……’ எனும் காம்போதிக் கீர்த்தனை மிக அருமையாக இருக்கும். அண்மையில் யாரும் இதைப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை.
திரு நீலகண்ட சிவம் அவர்கள் 4446 கீர்த்தனைகள் தமிழில் இயற்றியுள்ளர்; ஒரு பகுதியை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது. இவர் நாகர்கோவில் அருகே வடிவீசுவரத்தில் பிறந்தவர்; அன்றைய ஸம்ஸ்தானங்கள் இவருக்கு ஆதரவளித்தன.
கவியோகி சுத்தானந்த பாரதியார் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரே தவிர, அவர் பாடியது தமிழில்தான். மஹரிஷி ரமணர் எளிய தமிழில் உரையாடி, போதனைகள் செய்து, பாடலும் இயற்றியவர். செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்கள் அருட்பாவை இசைத்தட்டாக வெளியிட்டார், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர். லலிதா தாஸர் இயற்றிய தமிழ்ப் பாடல்களையும் செம்பை பாகவதர் அவர்கள் பாடிப் பிரபலமடையச் செய்தார். 1940களில் தமிழிசை ஓர் இயக்கமாக உருப்பெறுவதற்கு முன்பே நடந்தவை இவை எல்லாம். செம்பை அவர்களிடம் இசை பயின்ற குருவாயூர் பொன்னம்மாள் எனும் இசை அறிஞர் திருவருட்பா பாடல்களுக்கு மெட்டமைத்து சுரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.
வள்ளிமலை சுவாமிகளின் [அர்தநாரி] அருந்தொண்டால் திருப்புகழ் புத்துயிர் பெற்றது. தில்லி ராகவன் அவர்கள் அமைத்த பத்ததியில் திருப்புகழ் பாடும் பல குழுக்கள் இன்றும் உள்ளன. காஞ்சிப் பெரியவர் முனைந்ததால் திருப்பாவையும், திருவெம்பாவையும் பிரபலம் ஆயின.
தமிழிசை ஓர் இயக்கமாகத் தோன்றிய பின்னரும் அதற்கு ஆதரவளித்து ஒத்துழைத்தது பிராமணர்களே. இது குறித்து ஜெயமோகன் அவர்களும் எழுதியுள்ளார். அமரர் கல்கி தம் பத்திரிகை வாயிலாகத் தமிழிசைக்கு மிகச் சிறந்த ஆதரவளித்தார்.
தெலுகு – கன்னட வாக்கேயகாரர்களின் அருமையான பாடல்கள், நாயக்க மன்னர்களின் ஆட்சி இவற்றால் பிறமொழிப் பாடல்கள் முன்னணியில் இருந்தது உண்மையே. இன்றைய தென்னிந்திய இசை மரபு புரந்தர தாஸரவர்கள் அமைத்தளித்த பத்ததியைத்தான் பின்பற்றி வருகிறது. கர்நாடக ஸங்கீத மும்மூர்த்திகளுள் தியாகய்யா, தீக்ஷிதர் இருவரின் பாடல்களும் புகழ் பெற்றுப் பரவக் காரணம், அவர்கள் வறுமையையும் எதிர்கொண்டு, ஒரு சீட மரபைத் தோற்றுவித்ததுதான். அவர்கள் மேலும் பலரைத் தயார் செய்தனர்.
பத்ராசல ராமதாஸர் தெலுகு கீர்த்தனைகள் பாடியுள்ளார்; அதிகம் பிரபலமாகவில்லை. காரணம் அவர் சிஷ்யர்களுக்கு போதிக்கவில்லை. ஸத்குரு தியாகய்யா தெலுகு கீர்த்தனை பாடினார்; பிரபலமானது. காரணம் அவர் முயன்று உருவாக்கிய சிஷ்ய பரம்பரை.
சிறந்த செவிக்கினிய மெட்டு என்றால் மொழிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சங்கராபரணம் (தெலுகுத் திரைப்படம்),ஆராதனா (ஹிந்தி) , செம்மீன் (மலையாளம்) போன்றவற்றின் பாடல்கள் தமிழரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
- தேவ் ராஜ்