spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சிதம்பர ரகசியம்!

சிதம்பர ரகசியம்!

- Advertisement -

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

டாக்டர் பாஸ்கரன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரத்திற்குச் சென்றிருந்தோம். எங்களுடைய இனிய நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்களுடைய சகோதரர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சிதம்பரம் கோவிலை எங்களுக்குச் சுற்றிக் காண்பித்தார். என்னுடன் கலைமகள் பதிப்பாளர் திரு ராஜன் மற்றும் நாடக ஆசிரியர் திரு சி வி சந்திரமோகன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

டாக்டர் பாஸ்கரன் தம்பதி (சிதம்பரம் கோயிலில்)
டாக்டர் பாஸ்கரன் தம்பதி சிதம்பரம் கோயிலில்

சிதம்பரம் கோவில் நடராஜர் முன்பாக எங்களைக் கொண்டு நிறுத்தி மிக அற்புதமான தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார் சிவசிதம்பரம் ஆர் பாஸ்கர தீட்சிதர். குஞ்சிதபாதம் மாலை அணிவித்து கௌரவித்தார். சிதம்பரத்தில் ஆடல் வல்லானின் சன்னதியில் மனம் உருகி நின்று கொண்டிருந்த நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வசந்த கால நினைவூட்டல் ஆகும்.

சிதம்பர ரகசியம் என்று சொல்கிறார்களே! அது என்ன? என் மனது கோவிலைச் சுற்றிச் சுற்றி வந்தது.

சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அழகிய சிலைகள் ஆயிரம் கால் மண்டபம் என எல்லாமே கண்ணுக்கு விருந்து படைத்தன.

மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது சிதம்பரம் கோயில். அதனால்தான் அதன் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக் கூடிய ஒன்பது நவ துவார வாயில்களைக் குறிக்கின்றது. திருக்கோயிலின் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது.இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிப்பதைக் குறிக்கின்றது (15×60×24 = 21,600).

மேற்படி 21,600 பொற்தகடுகளை வேய, 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 72,000 என்ற இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. நரம்பியல் வல்லுனர் டாக்டர் பாஸ்கரன் அவர்களும் இதனை ஆமோதித்தார்!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவ பெருமானுடன் மூவாயிரம் வேத பண்டிதர்களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ பெருமானே வேதங்களைத் தந்தருளினாராம். ஈசனிடமே தீட்சை பெற்றவர்கள் எனும் பெருமைக்கு உரியவர்கள் ஆனதால், அந்த மூவாயிரம் பேரும் தீட்சிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தீட்சை பெற்றவர்கள். அதனால் தீட்சிதர்கள்!

” தில்லைப் பெண் எல்லை தாண்டாள்” ஒரு பழமொழி. அதாவது தீட்சிதர்கள் குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வார்கள்.வெளியே பெண் எடுப்பதில்லை. வெளியூருக்கும் செல்வதில்லை. கொடுக்கல் வாங்கல் எல்லாமே அவர்களுக்குள்ளேயே நடந்து முடிகிறது. தில்லை நடராஜனை விட்டு அவர்கள் வேறு எங்கும் செல்ல விரும்புவது இல்லை!!

தீட்சிதர் குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தை பிறந்த உடனேயோ அல்லது வளர்ந்ததுமோ ” தீட்சிதர் ” எனும் பட்டத்துக்கு கௌரவத்துக்கு வந்துவிடமுடியாது. உபநயனம் எனப்படும் பூணூல் வைபவம் முடிந்த பின்னரும் கூட தீட்சிதர் ஆகிவிட முடியாது.திருமணமாகி மாங்கல்ய தாரணம் எனப்படும் தாலி கட்டுகிற வைபவம் நடந்து முடிந்த அந்த நிமிஷத்திலிருந்துதான் அவர் தீட்சிதர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார் ! தீட்சிதர் ஆக முக்கியமான தகுதி அவர் கிரகஸ்தராக இருக்க வேண்டும். வேதங்களை நன்றாக கற்று இருக்க வேண்டும்.

‘இவ் இருடிகளுள் நாம் ஒருவர்’ என்று இறைவனால் அருளிச் செய்யப் பெற்ற பெருமையை உடையவர்கள் தீட்சிதர்கள்.சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் “தில்லைவாழந்தணதம் அடியார்க்கும் அடியேன்” என்கிறார். சிவபெருமானே முதலாவதாகக் கூறிய திருக்கூட்டத்தினர் இவர்கள்! என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் என்று சொன்னால் அது சிதம்பரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் குறிக்கும் என்பது பொதுவான கருத்தாகும். சோழ மன்னர்களின் கட்டுமான திறனுக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.முதலாம் பராந்தக சோழ மன்னன் 9 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் சிவபெருமானின் சந்நிதிக்கு “பொன் கூரையை” வேய்ந்தான். பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தர பாண்டிய மன்னனும் இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் “கம்போடியா” நாட்டு அரசன் நடராஜமூர்த்திக்கு தங்கம் மற்றும் மாணிக்க கற்களைக் கொண்ட நகைகளைத் தனது நாட்டு தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பியதாக கல்வெட்டு குறிப்புக்கள் மூலம் அறிகிறோம்.

பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.

பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் ஸ்தலங்களில் முதல் ஸ்தலமாக சிதம்பரம் உள்ளது. உலகின் மைய புள்ளியாகவும் இந்த கோவில் இருப்பதாக ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். சிதம்பர நடராஜரின் ஆட்டத்தில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

சிதம்பர ரகசியம் யாருக்கும் தெரியாத ஒரு சவால்!! இந்த உலகத்தையே சுழல வைக்கும் அற்புதம்!! அண்ணாந்துப் பார்க்கும் ஆகாயம் கண்ணுக்கு நீலமாகத் தெரிந்தாலும் அது உண்மையில் வெட்ட வெளி!!

சிதம்பரம் என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது “சிதம்பர ரகசியம்” என்ற சொல்வழக்காகும். இதன் உண்மையான பொருள் “சித்” எனும் அறிவு “அம்பரம்” எனும் வெட்டவெளியில் கலக்கும் போது நாம் ஒன்றுமில்லாதவர்கள் எனும் வாழ்க்கை தத்துவத்தை விளக்குவதுதான் சிதம்பர ரகசியமாகும். அதனால் தான் இக்கோவிலில் மூலவர் சந்நிதியில் வெட்டவெளியைத் திரையிட்டு மறைத்து, அதற்கு தீபாராதனை காட்டப்பட்டு, பிறகு திரையை விலக்கி வெட்ட வெளித் தத்துவத்தைப் பக்தர்களுக்குக் காண்பிக்கின்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்கள் மற்றும் பாடல் பெற்ற ஸ்தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது…சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெறுகின்றனர். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தைச் சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் ஸ்லத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

இங்குள்ள 4 கோபுரங்களும் சிற்பக் களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோரின் உருவங்கள் சிலைகளாக உள்ளன.

தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தைப் பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்குத் தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.

சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை ‘மூத்த நாயனார்’ என்கிறார்கள்.

நடராஜர் இருக்கும் பொன்னம்பலம் என்று சொல்லக்கூடிய சித்சபை, நந்திகேஸ்வரர் இருக்கக்கூடிய கனக சபை, மூன்றாவது கொடி மரத்துக்கு மேல் எதிரில் நடன சபை, நான்காவதாக பேரம்பலம் என்று சொல்லக்கூடிய தேவசபை. கோவில் உற்சவ மூர்த்திகள் நகை ஆபரணங்கள் இருக்கக்கூடிய இடமாகும். ஐந்தாவது ராஜசபை எனும் ஆயிரம் கால் மண்டபம் என ஐந்து சபைகள் உண்டு,” கனக சபை இருக்கும் இடம்தான் மக்கள் நின்று வழிபாடு செய்யக்கூடிய இடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe