
ஜூலை 15: காமராஜ் பிறந்த தினம்
— திருப்பூர் கிருஷ்ணன் —
பெருந்தலைவர் காமராஜரை நான் முதன்முதலில் பார்த்தது, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்….
தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த மைதானத்தில் பொதுக்கூட்டம்.
கூட்டம் தொடங்கிவிட்டது. பெருந்தலைவர் வந்துகொண்டிருக்கிறார்!
என்ற அறிவிப்பு மட்டும் அடிக்கடி ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது காமராஜ் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தவர் மிகச் சிறந்த பேச்சாளரான குமரி அனந்தன்.
(ஏற்கெனவே முன்னொரு முறை கல்லூரி முத்தமிழ் மன்றத்திற்காக குமரி அனந்தனைப் பேசக் கூப்பிட்டிருந்தோம். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அரங்கிற்குக் குமரன் கூடம்
என்று பெயர். குமரன் கூடத்தில் இந்தக் குமரி பேசுவது பொருத்தம்தானே?
என்று பேச ஆரம்பித்து மாணவர்களைக் கவர்ந்தவர் அவர்.)
அவர் பேசப் பேச காமராஜ் மேடைக்கு வந்துசேர்ந்தார்.
ஏழைகளின் இல்லம் நோக்கி நடக்கும் கால்கள் எவருடைய கால்கள்? அவை பெருந்தலைவரின் கால்கள். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் கைகள் எவருடைய கைகள்? அவை பெருந்தலைவரின் கைகள்!
என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்தப் புகழ்ச்சியை விரும்பாத பெருந்தலைவரிடமிருந்து போதும்ணேன்!
என்று ஒரு குரல் வந்தது. அடுத்த கணம் சடக்கென்று தன் பேச்சை முடித்துக் கொண்டு குமரி அனந்தன் உட்கார்ந்துவிட்டார்.
தன் புகழ்ச்சியை விரும்பாத காமராஜையும் இன்றைக்கு ஆள்வைத்துத் தங்களைப் புகழ்ந்துகொள்ளும் சில தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், மனத்தில் கடந்த பொற்காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு எழுகிறது.
காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். விழிகளில் ஓர் இனந்தெரியாத ஒளி. முழங்கால் வரை நீண்ட கரங்கள். கிராமியப் பேச்சு.
ஸ்தாபன காங்கிரசுக்கு வாக்களியுங்கள்!
என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை.
இந்தக் கட்சியின் அறிக்கை இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு அவரவர் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்!
இப்படித்தான் அவர் பேசினார்.
அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக் கூடப் பயன்படுத்தவில்லை.
ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்களின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது.
காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. நான் உங்களில் ஒருவன்
என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் உள்ளத்திலிருந்து பேசினார் அவர். அன்றுமுதல் நான் காமராஜின் தீவிர ரசிகனானேன்.
(சிறிதுகாலம் முன்னர் சென்னையில் என் இல்லத்திற்குக் குமரி அனந்தன் வருகை தந்தபோது அவரிடம் இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினேன். காமராஜ் பற்றிய தூய நினைவுகளில் தோய்ந்த குமரி அனந்தன் உண்மையிலேயே விம்மி விம்மி அழலானார்.
என் மனைவி தானும் கலங்கியவாறே அவரை மோர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறியது அண்மைக்காலச் சம்பவம்.)…..
*திருப்பூரில் தாயம்மாள் என்ற சகோதரி, ஸ்தாபன காங்கிரஸ் தலைவியாக இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்காக காமராஜ் பிறந்த தினத்தை ஒட்டி தேச பக்தி
என்ற தலைப்பில் ஒரு கவிதைப் போட்டி நடத்தினார்.
நான் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு என் கவிதைக்காக முதல் பரிசு பெற்றேன். வாணிஜெயராம் பாடிய காமராஜ் குறித்த பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுத் தான் பரிசு.
(அந்த இசைத்தட்டில் ஒலித்த இருக்க இடமும் வரும் எல்லோருக்கும் வாழ்வு வரும்! காமராஜ் ஆளவந்தால் கட்டாயம் வாழ்வு வரும்! காலம் வரும் கண்ணே! நீ கண்துயில்வாய் முன்னே!
என்ற தாலாட்டுப் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தது.)
அப்படி நான் பரிசுபெற்றதில் என் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம் காமராஜ் என் குடும்பத்தினர் அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தார். சுதந்திரப் போராட்டச் சிந்தனைகளைத் தாங்கிய குடும்பம் என் குடும்பம்.
கதர் மட்டுமே கட்டியவர்களும் கட்டுபவர்களும் என் குடும்பத்தில் பலர் உண்டு. என் தந்தை பி.எஸ். சுப்பிரமணியம், கோழிக்கோட்டில் இருந்தபோது, காந்தி அங்கு வருகை தந்து வழங்கிய ஆங்கில உரையை காந்தி பேசப் பேச மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்….
*நான் சென்னை வந்ததும், பெருந்தலைவரின் அணியில் பேச்சாளராக இயங்கிக் கொண்டிருந்த தீபம் நா. பார்த்தசாரதியின் சீடனாக தீபத்திலேயே பணிக்குச் சேர்ந்ததும் என் வாழ்வில் பின்னர் நடந்தவை.
நா.பா. அந்தக் காலகட்டத்தில் கல்கியில் சத்திய வெள்ளம்
என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். அதில் பெருந்தலைவர் காமராஜே ராமராஜ்
என்ற தலைப்பில் ஒரு பாத்திரமாக வருவார்.
கல்லூரிப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட முற்றிலும் அரசியல் சார்ந்த ஒரு துணிச்சலான நாவல் அது. காமராஜின் பெருமையைப் பேசும் நாவல்.
காமராஜ் அணியில் இணைந்து ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்களாக நா.பா., ஜெயகாந்தன், சோ, கண்ணதாசன் போன்றோரெல்லாம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது.
ஒருமுறை காமராஜைப் பார்க்க நா.பா. சென்றபோது நானும் உடன்சென்றேன். தம்பியும் எழுத்தாளரா?
என்று நா.பா.விடம் கேட்டார் காமராஜ். ஆமாம், தீபத்தில்தான் பணிபுரிகிறார்
என்றார் நா.பா.
தம்பீ. இவரு மாதிரி நாட்டுக்கு நல்லது செய்யற சங்கதிகளைத் தான் எழுதணும். தெரியுதா?
காமராஜுக்கு மிக அருகில் நான் அமர்ந்திருந்தேன். அன்பு மயமாக என் கரங்களைப் பற்றிக் கொண்டு ஒளிவீசும் விழிகளால் கூர்மையாக என்னைப் பார்த்தவாறு இதைச் சொன்னார் அவர்.
நயன தீட்சையும் ஸ்பரிச தீட்சையும் ஒருங்கே நடந்த மாதிரி எனக்கு இனந்தெரியாத பரவசம்.
ஆன்மீகத் துறவிகள்தான் துறவிகளா! தேசத்திற்காக சகலத்தையும் துறந்த இவர் தேசத் துறவி அல்லவோ! சொந்தத் தாய்க்குக் கூடத் தன் அரசியல் அந்தஸ்து காரணமாக ஒரு சலுகையும் காட்டாத மாமனிதர். சொத்தே சேர்க்காத அரசியல்வாதி….
*நா.பா. விறுவிறுவென்று அரசியல் பேச்சுத் துறையில் பெரும்புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். ஸ்தாபன காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளராக மாறினார். தொடர்ந்து வெளியூர்க் கூட்டங்கள்.
ஒருமுறை என்னிடம் அந்தரங்கமாகப் பேசும்போது நா.பா. சொன்னார்:
`என்னுடைய பொருளாதாரப் பிரச்னைகள் பிறர் அதிகம் அறியாதவை. ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பம். நான் ஒருவன்தான் சம்பாதிக்கும் நபர். அரசியல் மேடைகளில் பேசுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஓரளவு பிரச்னையை சமாளிக்க உதவுகிறது. என்றாலும் தீபம் இதழுக்கும் அளவு கடந்து செலவாகிறது.
என்ன செய்வது! அரசியல் பேச்சுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக சன்மானம் கிடைத்தால் நன்றாயிருக்கும். ஆனால் பெருந்தலைவரிடம் இதை நேரில் எப்படிச் சொல்வது?`
நான் தயக்கத்தோடு என் ஆலோசனையைச் சொன்னேன்:
பெருந்தலைவருக்கும் உங்களுக்கும் ஒருசேர நெருக்கமான ஒரு நண்பர் மூலமாக இந்த விஷயத்தை அவர் காதுக்கு எட்டச் செய்யலாமே?
அதுவும் சரிதான் என்ற நா.பா., காதல் தூங்குகிறது
நாவலை எழுதிய எழுத்தாளரும் காமராஜுக்கு நெருக்கமானவருமான கு. ராஜவேலுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொன்னார்.
சில நாட்களில் நா.பா.வின் பேச்சுக்கான தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்ட நா.பா. மகிழ்ச்சியிலும் மனநிறைவிலும் ஆழ்ந்தார்.
பின்னொரு சந்தர்ப்பத்தில் எனக்கும் நன்கு அறிமுகமான கு. ராஜவேலுவை நான் தனியே சந்தித்தபோது ராஜவேலு என்னிடம் சொன்னார்:
“நா.பா.வின் பொருளாதாரப் பிரச்னையையும் தீபம் இதழின் சிரமங்களையும் பெருந்தலைவரிடம் சொன்னேன். உடனே நா.பா.வின் மேடைப் பேச்சுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறார்கள் என்று உதவியாளரை அழைத்து விசாரித்தார்.
என்னய்யா, இவ்வளவு குறைவான தொகையா? நமக்காக மேடைல பேசறவங்களுக்குக் குழந்தை குட்டி எல்லாம் இல்லையா? அந்தக் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவு இல்லையா? உடனே அந்தத் தொகையை இரண்டு மடங்கு ஆக்குங்கள்!
என்று உத்தரவு போட்டார்.
உதவியாளர் அப்படியானால் அவருக்கு இணையான மற்ற பேச்சாளர்களுக்கும் உயர்த்த வேண்டியிருக்கும்
என்று சொல்லித் தயங்கினார்.
எல்லோருக்குமே உயர்த்துங்கள். எல்லோரும் குடும்பம் உடையவர்கள் இல்லையா? என்னை மாதிரித் தனிக்கட்டையா என்ன? அப்படி நமக்காக உழைப்பவர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் கட்சி எதற்கு?
என்று சத்தம் போட்டார் காமராஜ்!`
இதைச் சொல்லிவிட்டு ராஜவேலு நெகிழ்ந்தபோது என் கண்களும் பனித்தன. திருமணமே செய்துகொள்ளாத ஒருவர், குடும்பஸ்தர்களின் சிரமங்களை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என எண்ணி நான் வியந்தேன்……
*மறக்க முடியாத அந்த அக்டோபர் இரண்டாம் தேதிக்குச் சில நாட்கள் முன்பு என் தாயாரைக் காணச் சென்னையிலிருந்து திருப்பூர் சென்றேன்.
ஏதோ ஒரு பொருளை அலமாரியிலிருந்து எடுத்தேன். அப்போது, என் அம்மா பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்ததும் காமராஜ் பிறந்த நாள் கவிதைப் போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்ததுமான அந்த வாணிஜெயராம் பாடிய இசைத்தட்டு தற்செயலாகக் கீழே விழுந்து இரண்டாக உடைந்துவிட்டது.
ஓடி வந்த என் தாயார் திடீரென அளவற்ற சோகத்தில் ஆழ்ந்தார்.
அதே இசைத்தட்டு வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம்! இது உடைந்ததைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்!
என்று என் அம்மாவிடம் ஆறுதல் சொன்னேன்.
ஆனால் சகுனங்களில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த என் அம்மாவை என்னால் சரிவர ஆறுதல் படுத்த இயலவில்லை. உடைந்தது இசைத்தட்டு மட்டுமல்ல, என் அம்மாவின் மனமும்தான்.
இது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் முன்கூட்டிய சூசகம்
என்று சொல்லிக் கவலையில் ஆழ்ந்தார் அவர்.
அந்தக் கெட்டது நடந்தே விட்டது. பெருந்தலைவர் காலமான விவரமும் விளக்கை அணைத்துவிடு!
என்று அவர் இறுதியாகப் பேசிய வாசகங்களும் நாளிதழ்களில் மிகச் சில நாட்களில் செய்தியாக வந்தன.
தன்னலம் கருதாத அந்தக் காந்தியவாதி, காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் காற்றில் கலந்துவிட்டார்….
*காமராஜ் என்ற அந்தத் தியாக தீபத்தின் மறைவு குறித்து மீளாத் துயரில் ஆழ்ந்த நா.பா., தீபம் இதழில் அட்டைப்படத்தில் காமராஜ் திருவுருவை வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார்.
காமராஜ் குறித்த அட்டைப்படக் கவிதை ஒன்றை நான் அதே தீபத்தில் எழுதினேன்.
அப்போது நா.பா.விடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டார், இலக்கியப் பத்திரிகையான தீபத்தில் காமராஜ் படத்தை எப்படி அட்டையில் வெளியிடலாம்?
என்று. அதற்கு நா.பா. சொன்ன பதில்:
ஏனென்றால் காமராஜே ஓர் இலக்கியம்தான்!
காமராஜ் பற்றிய திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை சிறப்பானது. அந்த மகானின் பெருமையைக் பற்றிக் கேள்விப் படும்போதே உள்ளம் நெகிழ்கிறது. அவரை அருகிலிருந்து பார்த்து அவர் தன்னுடன் பேசக் கேட்ட திருப்பூர் கிருஷ்ணன் பாக்கியசாலி – ஆர். வி. ஆர்