
— கமலா முரளி —
மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையை, மத்தியக் கல்வி அமைச்சகம் 29 ஜூலை 2020 அன்று வெளியிட்டது.
ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்குமான விரிவான மற்றும் முழுமையான வரைவுத் திட்டத்தை உள்ளடக்கிய இக்கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
சிறந்த வடிவமைப்பின் தூண்களான அனைவருக்குமான எளிதான வாய்ப்பு, தரம், மாணாக்கர்களுக்கு அதிக பொருட்செலவு இல்லாமை மற்றும் பொறுப்புணர்வோடு கூடிய திட்டமைப்பு ஆகிய அம்சங்களுடன் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை அமையப் பெற்றுள்ளது. நம் பாரதத்தை உலக அளவில் கவனத்தை ஈர்க்கக் கூடிய ‘உத்வேகமுள்ள அறிவுசார் சமூகமாக” மாற்ற இந்த புதிய கல்விக் கொள்கை ஒரு திறவுகோலாகும்.
ஆழ்ந்து சிந்தித்தல், புதுமையான சிந்தனை, கூட்டு முயற்சி, அறிதலில் ஆர்வம், தகவல் தொடர்பு ஆகிய 21வது நூற்றாண்டின் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளுதல், நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய கல்வி / பாடங்கள் அறிமுகம், பல பாடங்களை ஒருங்கிணைந்து ( Multi Disiciplinary ) கற்க வாய்ப்பு , முழுமையான வளர்ச்சி போன்ற உயரிய கற்றலின் கூறுகளை உள்ளடக்கியதாக ,ஒவ்வொரு மாணவனின் கல்விப் பாதையைச் சீர்பட அமைத்து, தங்கள் திறனைத் திறம்பட வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இப்புதிய திட்டம் வரையப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- உலகளாவிய அணுகுமுறையுடன், கல்வியைப் பொதுமயமாக்குதல்.
- 2030ஆம் ஆண்டுக்குள் அரசின் கல்விக்குடைக்குள் அனைத்துக் குழந்தைகளும் இருப்பதற்கான ஆயத்த நடவடிக்கைக்களை மேற்கொள்ளுதல்.
- ”இடைநிற்றல் ” இல்லாமல், கல்வியைத் தொடர , திறன் சார்ந்த கல்வித்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
- இளஞ்சிறார்களுக்கான கல்வியை நெறிப்படுத்தி, தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் கொணர்தல்.
- பள்ளிக்கல்வி 5+3+3+4 முறையில் செயல்படுத்தப்படும்.
- அடித்தள நிலை ( ஐந்து ஆண்டுகள் ) 3 ஆண்டுகள் அங்கன்வாடி மற்றும் பாலர் கல்வி மேலும் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு அடித்தள நிலையான ஐந்து வருடங்கள். மூன்று வயது முதல் எட்டு வயதிலான குழந்தைகளின் கல்வி. கற்றலில் ஆர்வம் ஏற்படும் வகையில் செயல்பாட்டுடன் கூடிய வழிமுறை (ஆக்டிவிட்டி ), சுகாதாரம் மற்றும் அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு உறுதி செய்யப்படும்.
- தயாரிப்பு நிலை: (மூன்று ஆண்டுகள் ) 3 முதல் 5 வகுப்புகள். படிப்படியாக பேசுவது, வாசித்தல், எழுதுதல், உடற்கல்வி, மொழிகள், கலை, அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தப்படும்.இது எட்டு முதல் பதினொரு வயது உடையவர்களை உள்ளடக்கும்.
- நடுத்தர நிலை: ( மூன்று ஆண்டுகள் ) 6 முதல் 8 வகுப்புகள். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகிய பாடங்களில் அடுத்த நிலை கோட்பாடுகள் சுருக்கமான கருத்துக்களாக அறிமுகப் படுத்தப்படும். தொழில் மற்றும் திறன் சார்ந்த பாடங்கள் அறிமுகம்.பதினான்கு வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கியது.
- இரண்டாம் நிலை: 9 முதல் 12 வரையிலான வகுப்புகள்.
- 9 மற்றும் 10 வகுப்புகள் ஒரு கட்டமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகள் இரண்டாம் கட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான மற்றும் விமர்சன சிந்தனையுடன் இணைந்து பலதரப்பட்ட படிப்பை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. பாடங்களைத் ( தொழில் சார்ந்த பாடங்களும் )தேர்வு செய்வதற்கு பல விதமான விருப்ப வாய்ப்புகள் வழங்கப்படும்.
- தொழில்/ வேலை மற்றும் திறன் சார்ந்த கல்வி வாய்ப்பு
- மதிப்பெண்கள் என இல்லாமல், தொடர்ச்சியான மதிப்பீடுகள்
- விளையாட்டு, கலை, இசை, உள்ளூர் திறன்கள் பயிற்சி
- இந்திய மற்றும் மாநில பாரம்பரியம், வட்டார மற்றும் உள்ளூர் கலைகள் மற்றும் சிறப்புகளை அறிதல்
- உயர் கல்வியிலும் புதுமையான கூறுகளைக் கொண்டுள்ளது புதிய கல்வித்திட்டம்.
- மாணவர்கள் பல்வேறு நிலைகளிலும் தங்கள் கல்வியைத் தொடரக்கூடிய வாய்ப்பு, திறன் சார்ந்த, வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் போன்ற எண்ணற்ற வாய்ப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.
மொழிக்கொள்கை
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனை “மொழித்திணிப்பு- குறிப்பாக இந்தி / வடமொழி மொழித்திணிப்பாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், மொழிக்கொள்கை எந்தத் திணிப்பையும் உள்ளடக்கியது அல்ல. ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் தாய்மொழி அல்லது வட்டார மொழியில் (மீடியம்) பாடங்களைப் பயிலாம்.
இளம் பருவத்தில் மொழியினைக் கற்பது எளிது. எனவே, தாய்மொழி அல்லது வட்டார மொழி தவிர இந்திய மொழிகள் மற்றும் அந்நிய மொழிகள் பயில வாய்ப்பினை ஏற்படுத்துகிறது இந்த கல்வித் திட்டம்.
சமீபத்தில் மத்தியக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.ஸி) மாணவர்கள் தங்கள் தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவால்கள்
இத்தகைய உயரிய நோக்கங்களையும் அம்சங்களையும் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தை அவ்வளவு எளிதாக வெற்றிகரமாக செயல்படுத்திவிட முடியமா? இதனைச் செயல்படுத்துவதில் பல சவால்களும் உள்ளன.
அரசியல் ரீதியான சவால்களும் பிரச்சினைகளும் ஒருபுறமிருக்க, இக்கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தி, செயல்படுத்த எத்துணை காரணிகளைப் பற்றியும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியுள்ளது ?
அதையும் படிப்படியாக நிறைவேற்றிவரும் மத்திய அரசைப் பாராட்டத்தான் வேண்டும்.
கல்விக்கூடத்தின் கட்டமைப்புகள், பாலர் கல்வி, திறன்சார் கல்வி, உயர்கல்விப் பாடங்கள், கலை விளையாட்டுக் கல்வி போன்ற அனைத்து புதிய அம்சங்களுக்கான பாடத்திட்டங்கள், கற்றலின் கோட்பாடுகள், மாணாக்கர் -ஆசிரியர் விகித ஏற்றத்தாழ்வு,ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பயிற்சி, தேர்வு முறை மாற்றங்கள் என எந்த ஒரு கோணத்தை எடுத்துக் கொண்டாலும் , அதற்கான தகவல் பரிமாற்றங்கள், பயிற்சி பட்டறைகள் என இந்த மூன்று வருடத்தில் சிறப்பான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லுகிறது புதிய கல்வித் திட்டத்தின் பயணம்.
புதிய கல்வித் திட்டத்தின் எல்லா அம்சங்களையும் ஏற்றுக் கொள்வதில் அரசியல் ரீதியான சவால்கள் இருந்தாலும், எல்லா மாநிலங்களும் , இதனை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகா, மத்தியபிரதேஷ், உத்தரபிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் சீக்கிரமே இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடும். சில வடகிழக்கு மாநிலங்கள் உயர் கல்வியில், (கல்லூரி) புதிய திட்ட முறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
மேனாள் இஸ்ரோ ( ISRO) தலைவர் திரு. கிருஷ்ண்ஸ்வாமி கஸ்துரிரங்கன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு சமர்ப்பித்த ஆவணம் , மத்திய அமைச்சரவையால் அறிமுகபடுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மற்றும் கருத்தரங்க விவாதங்களுக்குப் பின்னரே, புதிய கல்விக்கொள்கை வெளியிடப்ப்ட்டுள்ளது.
கொரொனா தாக்கத்தால், இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் செயல்படுத்துதல் சற்று தொய்வாக இருந்தாலும்,திட்டமிடல், கட்டமைப்பு பணிகள் , பாடத் திட்ட ஆய்வுகள், ஆசிரியர் தேர்வு மற்றும் பயிற்சி, கருத்தரங்குகள் ஆகியன தொடர்ந்தன.
இனி வரும் காலம், மாணவர்களுக்குப் பொற்காலமாக ஆகட்டுமே !