
மத்தியக் கிழக்கும்…
மத்திய அரசும்..!
உலக அளவிளான அரசியல் சதுரங்கத்தில் தற்போது இஸ்லாமிய சமூக நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் நம் இந்திய தேசத்திற்கும் பெரும் பங்கு உண்டு. அதன் தாக்கங்கள்…. அதன் அரசியல் பங்களிப்பில்லான மாற்றங்கள் மிக மிக நுட்பமானது. ஆழத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
சுலபமாக இப்படி புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மைய கட்டடம் செப்டம்பர் 11 தேதி பயங்கரவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. இது நடந்தது இன்றிலிருந்து சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு. அமெரிக்க சி.ஐ.ஏ வால் வளர்க்கப்பட்ட ஒசாமா பின் லேடனால் திட்டமிட்ட இந்த தாக்குதல் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டு ஆனானப்பட்ட அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது. அதில் இருந்து அவர்கள் மீளவேயில்லை. சரியாக சீனா தலையெடுத்ததும் இதே காலகட்டத்தில் தான்.அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கர்களின் கண்களில் விரலை விட்டு ஆடிக் காட்டினார்கள் அவர்கள்.
1980 களில் மத்திய கிழக்கு நாடுகளில் குக்கிராமங்களாக இருந்த பல இடங்களிலும் இன்று வானளாவிய கட்டடங்கள் வளர்ந்து நிற்பதற்கு நம்மவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பது நம்மில் பலருக்கு சரியாக தெரியாது. அத்தனை மனித உழைப்பு கொட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த இடங்களிலும் அமெரிக்கர்களின் டாலர்கள் கொட்டிக் கிடக்கின்றன.. கொஞ்சம் வில்லத்தனமான விதத்தில்….. எண்ணெய் வயல்களை குறிவைத்து நகர்ந்த இந்த அரசியல் ஆட்டத்தில் ஆதாயம் பார்த்தென்னவோ அமெரிக்கா தான்.1990 களின் ஈராக் சவுதி அரேபியா யுத்தமும் அதனை தொடர்ந்து ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைன் பிடித்து தூக்கிலிட்டது வரை நடந்தது அத்தனையும் திரைமறைவு ஆட்டங்கள் தான். இத்தனைக்கும் அன்றைய ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைன் அன்று அங்கிருந்தவர்களுக்கு நம் ஊர் எம்ஜிஆர் போல ….. எண்ணெய் வயல்களை அதன் வளத்தை அங்கு இருந்த மக்களோடு பங்கிட்டுக் கொண்டார்.
இப்படி தூக்கி கொடுத்தால் பிடிக்குமா அமெரிக்கர்களுக்கு … கதை கட்ட ஆரம்பித்து கட்டம் கட்டி தூக்கி விட்டனர். அதற்கு அவர்கள் சொன்னது, சதாம் ஆபத்தான உயிரி வேதியியல் ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிறார் என்பதே… ஒரு பினாயில் பாட்டிலைக் கூட எடுத்து வந்து காட்ட முடியவில்லை புஷ் ஆல் என்பது வேறு கதை. இவருக்கு….. அல்லது இவர் சார்ந்த கட்சியினருக்கு பரம்பரை பரம்பரையாக க்ரூட் ஆயில் பிஸினஸ் கொடி கட்டிப் பறக்கிறது என்பது வேறு விஷயம்.
உதாரணமாக சவூதி அரேபியாவில் இயங்கும் அராம்கோ என்கிற மிகப் பெரிய ஆயில் வர்த்தக சாம்ராஜ்யத்தில் 51% பங்குகளளை முன் ஒரு காலத்தில் அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது…. இதன் மீதெல்லாம் ஈரானிய ஹமாஸ் இயக்கம் ட்ரோன் தாக்குதல் எல்லாம் நடத்தியதாக சமீபத்திய ஆண்டுகளில் செய்திகள் எல்லாம் வெளிவந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்…. பிறகு வருவோம் இதற்கு.
ஆச்சா….
அதே வழியில் வந்த ஜோபைடன் பதவிக்கு வந்ததும் வராததுமாக தான் செய்ய விரும்பும் அரசியல் மத்திய கிழக்கு நாடுகளில் என்றார். நன்கு கவனியுங்கள்….. அவரது அரசியல் செய்யப்படுகின்ற ஒன்று என்பதை நம்மால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். சரியாக ஒன்றரை வருடம் கழித்து உக்ரைன் ரஷ்யா மோதல் வந்தது. அதற்கு தோதாக உக்ரைனில் ஜெலன்ஸ்க்கி எனும் கோமாளியை கொண்டு வந்து ஆட்சி பீடத்தில் அமர்த்தி விட்டனர். ஈராக்கிய அதிபராக சதாம் ஹுசைனை போல் பதம் பார்த்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு இருந்தவர்களை புடின் பந்தாடிக்கொண்டு இருக்கிறார் அங்கு. அதாவது பைடன் பப்பு வேகவில்லை அங்கு.
இவையெல்லாம் வெளியே மேலோட்டமாக பார்த்தால் தெரியும் சங்கதிகள். கொஞ்சம் உள்ளே நகர்ந்து ஊடுருவி பயணம் செய்தால்……
மத்திய கிழக்கு நாடுகளின் பட்டியலில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் அரபு இஸ்லாமிய தேசங்களில்…. நன்கு கவனியுங்கள்…, அரபு உலகம் வேறு இஸ்லாமிய சமூக தேசங்கள் வேறு. அரபு உலகம் நாடுகளின் தலைமை கிட்டத்தட்ட சவூதி அரேபியா வசம் இருக்கிறது. இதன் தலைமை பீடத்தில் முகமது பின் சல்மான் வருகிறார். அதுபோலவே இஸ்லாமிய தேசங்களின் தலைமைக்கு இரண்டு துருவங்கள் உண்டு. ஒன்று ஈரானிய தற்போதைய அதிபர் இப்ராஹிம் ராய்சி மற்றொரு புறம் ரெசிப் தையிப் ஹெர்துவான். மேற்கு உலக பாஷையில் சொன்னால் துருக்கிய அதிபர் ஹெர்டோகன். இருபது ஆண்டுகளாக பதவியில் இருக்கும் இவருக்கு பரந்து விரிந்த ஒட்டோமான் பேரரசு அமைக்க வேண்டும் என்கிற ரீதியிலான பேராசை எல்லாம் உண்டு. நம்மவரோடு #மோதி மூக்கு உடைக்கப்பட்ட சமாச்சாரம் எல்லாம் நடந்து இருக்கிறது. ஒரு #மார்க்கமான நிழல் அரசாங்கம் கட்டமைப்பு செய்து இதன் பொருளாதார பலத்தை…. அதில் புழங்கும் பணத்தை #ஹலால் என்கிற பெயரிலான வணிகத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தலைமையகம் மலேஷியாவாக முன் ஒரு காலத்தில் இயங்கியது… அதாவது சுருக்கமாக மஹாதீர் பின் முகம்மது காலத்தில்…91 வயதில் இவர் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல ….. நம்மவர்கள் தலையிட்டு முன்னாள் மலேசியா பிரதமர் என்கிற ரீதியிலான பட்டத்தை கொடுத்ததும் தான் துருக்கி அதிபரும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.இவருக்கு பாமாயில் என்றால் அவருக்கு கிரீஸ்.ம்ம்ம்ம்ம் வழுவழுப்பான கீரீஸ் அல்ல.கிரேக்கம் என அழைக்கும் இன்றைய கிரீஸ். அவர்களை நம்மோடு கூட்டு சேர்த்துக் கொண்டு அவர்களின் ராஃபேல் விமானங்களில் நம்முடைய பிரமோஸ் பொருத்தப்பட்ட போது தான் காஷ்மீருக்காக பொங்கிக் கொண்டு இருந்த துருக்கி அதிபர் ஹெர்துவான் கொஞ்சம் அடக்கினார். மனிதர் அவ்வளவு லேசுப்பட்டவர் அல்ல….
இவர் அமெரிக்க அதிபரையே எகத்தாளம் பேசி ஏகடியம் செய்த மஹானுபாவர். இது என்ன பிரமாதம்…… ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் விட்டு வைக்காமல் ஏகப்பட்ட இடங்களில் பகடி செய்தவர். புடினும் சரி அமெரிக்க அதிபரும் சரி பல்லைக் கடித்து இவரை பொறுத்துக்கொண்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு. காரணம் இவர் ஆளும் துருக்கி அமைந்திருக்கும் நிலப்பரப்பு. இவர் அனுமதி கொடுத்தால் ரஷ்யா தனது கப்பலை கருங் கடலுக்கு கொண்டு செல்ல முடியும். அதுபோலவே இவரது தயவு இருந்தால் மட்டுமே மேற்கு உலக நாடுகளின் கப்பல்கள் உக்ரைனை வந்தடையும்.
அதனை வைத்துக் கொண்டு இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடிக் கொண்டு இருந்தார். முதன் முதலில் இவருக்கு மூக்கணாங்கயிறு மாட்டியது நம்மவர்கள் தான். நம்மில் பலருக்கு தெரியாத சங்கதி இது. இதனோடு நேரடியான வேறோர் மோதல் சம்பவம் எல்லாம் இருக்கிறது. ஆர்மீனியா அஜர்பைஜான் கேள்விப் பட்டதுண்டா?
ஜோபைடன் பதவிக்கு வந்ததும் வராததுமாக மத்திய கிழக்கு நாடுகளில்தான் இனி அமெரிக்க அரசியல் என்று சொன்னார் அல்லவா? உடனடியாக கையில் எடுத்தது இந்த இடத்தை தான்.
ஆர்மீனியா பக்கம் ரஷ்யா நிற்க, அஜர்பைஜான் பின்னால் இருந்த துருக்கியைக் கொண்டு தூண்டி விட்டார். வாடகை ராணுவம் தங்கள் வாகனங்களை நாகர்னோ கராபாக் என்கிற இடத்தில் ஆர்மேனியாவை வம்புக்கு இழுத்து பிடறியில் அடித்தார்கள். இதில் ஆர்மீனியா பக்கம் ரஷ்யா மாத்திரம் அல்ல நம் இந்திய தேசமும் நிற்கிறது. அவர்களின் ராணுவ தேவைகளுக்கு நம் இந்திய தயாரிப்பு சுவாதி ரேடார்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் துருக்கி தயாரிப்பு ட்ரோன்கள் பேராக்டர் டீபி 2 உள்ளே நுழைந்து அதகளம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். இது என்ன பிரமாதம் என்பது போல் ரஷ்ய தயாரிப்பு மிக் ரக ஹெலிகாப்டரை எல்லாம் வீழ்த்திக்கொண்டு இருந்தார்கள்.
பதிலுக்கு ரஷ்யா உறுமிய போது… தெரியாமல் நடந்து விட்டது என்று பம்மி விட்டார்கள்.பின்னால் நமட்டு சிரிப்புடன் இவற்றை எல்லாம் ரசித்து வந்தது அமெரிக்கா. சந்தடி சாக்கில் இந்திய தயாரிப்பு ரேடார் சாதனங்கள் எல்லாம் வேஸ்ட் என்கிற ரீதியிலான விஷம பிரசாரத்தை பாகிஸ்தான் மூலமாகப் பரப்பி விட்டது துருக்கி.
இத்தனைக்கும் இந்திய தயாரிப்பு சாதனங்கள் எதுவும் அது சென்ற பொட்டியில் இருந்து கூட வெளியே எடுக்கவில்லை. அதற்குள் இத்தனை களேபரங்கள். சரியாக சொல்வதென்றால் துருக்கியின் நீண்ட கால கோரிக்கையை அஜர்பைஜானைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வழி ஏற்படுத்தி, சந்தடி சாக்கில் ரஷ்யா மற்றும் இந்தியாவை பதம் பார்த்தது மேற்கு உலக நாடுகள்.
இதற்கெல்லாம் பதிலடியாக யாருமே எதிர்பாராத விதமாக இந்தியா இயங்கியது. இந்திய – மத்தியக் கிழக்கு பொருளாதார பட்டுப்பாதை திட்டத்தை அறிவித்தது. நம் நாட்டில் #G20 உச்சி மாநாடு நடந்த சமயத்தில் இதனை அறிவித்தது! அறிவித்ததோடு நின்று விடாமல் செயலிலும் இறங்கி இருக்கிறார்கள்.
இஃது ஆனானப்பட்ட ஜோபைடனே, தனது மேற்கு உலக சகாக்களோடு சேர்ந்து அறிவித்து, பின்னர் கிடப்பில் போட்டு விட்ட திட்டத்தை காட்டிலும் கூடுதல் மதிப்பு மிக்கது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்????
கிரீஸ்ஸில் தொடங்கி இஸ்ரேல் ஹைஃபா துறைமுகம் வரை கடல் மார்க்கமாகவும், அங்கிருந்து சௌதி அரேபியா வளைகுடா நாடுகள் வரை தரை மார்க்கமாகவும், பின்னர் அங்கு இருந்து நம் நாட்டுக்கு அரபிக் கடலிலும் புதிய வழித்தடத்தில் இயங்க இருக்கிறார்கள். புதியதாக ஏற்படுத்த இருக்கிறார்கள்.
இதனை வெளிப்படையாக அறிவித்த ஒரு மாதத்திற்குள்ளாக இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதாவது ஈரானிய ஆதரவு ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் முதன் முறையாக இஸ்ரேல் மீது நடத்தி இருக்கிறார்கள். காலங்காலமாக பாலஸ்தீன் பக்கம் நின்ற, நிற்கும் இந்தியா, இந்த முறை யார் பக்கம் என கேள்வி கேட்டு பக்கம் பக்கமாக ஊடகங்களில் பேசிக் கொண்டு இருப்பதை சமீபத்திய காலத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம். இந்திய தரப்பில் உடனடியாக இஸ்ரேல் பக்கம் என அறிவித்ததும் நடந்தது.
இதன் பின்னணியில் ப்ரோ இண்டியன்ஸ் (pro-indians) ஹமாஸ் வலைத்தள பக்கங்களை ஹேக் செய்து விட்டதாக அறிவித்ததும் நடந்தது. காஷ்மீரில் ஹமாஸ் தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற ரீதியிலான விஷயம் பரவியது. இங்கு நம் கேரளத்தில் ஹமாஸ் தலைவர் பேசியதற்கு பின்னர் குண்டு வெடிப்பு எல்லாம் நடந்தது.
இத்தனைக்கு மத்தியில் இது நாள் வரை புலம்பிக் கொண்டு இருந்த உக்ரைன் ரஷ்யா மோதல் காணாமல் போனதை நம்மில் எத்தனை பேர் கவனித்தார்கள்? ஊடகங்களில் மட்டுமே ஜெயித்து வந்த உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்க்கி மேற்கொண்டு யுத்தம் நடந்த கடன் கேட்டு நாடு நாடாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார் இன்று. கடன் கொடுக்க உக்ரைனை விலை பேச ஆரம்பித்திருக்கிறது மேற்கு உலக நாடுகள் பலவும் என்கிறார்கள்!
இதற்கு எல்லாம் காரணம் இந்தியா. ஒரே புள்ளியில் இணைத்த, பரம வைரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, அரபு உலக சௌதி பட்டத்து இளவரசர் முகம்மத் பின் சல்மான்., இஸ்லாமிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ராய்சி ஆகியோர் தான்!
என்ன ஒரு ஒற்றுமை என்றால், இந்த மூவரையும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு பிடிக்காது. இவர்களுக்கும் அவரைக் கண்டால் ஆகாது. அவர் சார்ந்த கட்சியினரும் எட்டிக்காய் தான். ஆக, நுட்பமாக சொல்வதென்றால், ஜோபைடன் கொண்டு வந்த, ஜோபைடனால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடலை, மத்திய கிழக்கு அரசியலை, ஐரோப்பிய அரபு உலக பட்டுப் பாதை திட்டத்தை தவிடு பொடியாக்கி, தனது வேலையை நேர்த்தியாக, குறித்த நேரத்தில் செய்து வரும்…
நாம் சொல்ல மாட்டோம். நாளைய உலகமே பேசும்.
பொருத்திருந்து பாருங்கள்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்