October 15, 2024, 4:49 AM
25.4 C
Chennai

பயன் படுத்தப் படாமல்… பாழ்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியம்!

செங்கோட்டை ரயில் நிலையம், அந்நாளின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலத்தில் கட்டப்பெற்ற மிகப் பழைமையான பாரம்பரியமான ரயில் நிலையம்! பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில், பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த தமிழகப் பகுதியில் இருந்து, தன்னாட்சிப் பகுதியான திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு அந்நாளில் ரயில் பாதை அமைத்தார்கள். எனவே தான் நூற்றாண்டுகள் பழைமையான ரயில் பாதையாக இந்தப் பாதை அறியப்பட்டது.

எல்லைப் பகுதியில் இருந்த செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவாங்கூர் சமஸ்தானப் பகுதி தொடங்குவதால் இந்த ரயில் நிலையம் மிகப் பெரும் அளவில் கட்டமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.

மிகப் பாரம்பரியமான ரயில் நிலையமாக, அதிக அளவிலான பணியாளர்களுடன் பரபரப்பாகத் திகழ்ந்த ஒரு ரயில் நிலையம், இன்று மதுரை கோட்ட நிர்வாகத்தினரின் பாராமுகத்தால் படிப்படியாக அந்தப் பரபரப்பை இழந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது.

செங்கோட்டை ரயில் நிலையத்தில்… மீண்டும் பிட் லைன் வசதி ஏற்படுத்தப் படுமா?! என்ற நமது 2021ம் ஆண்டின் பதிவு… அதில் இருந்து…

100 கி.மீ., தொலைவுக்குள் இரு பிட் லைன் வாய்ப்பு இல்லையாம். திருநெல்வேலியில் பிட்லைன் வசதி உள்ளது. அடுத்து கொல்லம் பெரிய ஸ்டேஷன். ஆனால் கொல்லத்தில் பிட் லைன் தேவை என்று பிரேமசந்திரன் எம்.பி., குரல் கொடுத்தார். ரயில்வே வளர்ச்சி விவகாரங்களில் கேரள எம்.பி.க்களின் செயல்பாடு அலாதியானது.

செங்கோட்டையில் பிட்லைன் வசதி இல்லாத காரணத்தால் தான், பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை – சென்னை சென்று, மறுநாள் சென்னை – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகி, அது மறுநாள் நெல்லை – சென்னை சென்று, பின்னர் சென்னை-செங்கோட்டை பொதிகை ஆகி… ஒரு சுற்று வருகிறது. திருநெல்வேலி பிட் லைனில் வைத்து பராமரிப்புப் பணிகளைச் செய்கின்றனர்.

முன்னர் செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெரும் குடியிருப்பே இருந்தது. இஞ்சின் பராமரிப்பு, இன்சின் பராமரிப்பு கட்டடம், பெட்டிகள் பராமரிப்பு, பிட் லைன், அவற்றுக்கான பொறியாளர்கள் , குடும்பத்தினர் வசிப்பிடம், ரயில்வே மருத்துவமனை, இப்படி பெரிய தளமாக, நிறைய பேர் வசித்து வந்தனர். மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜ் ஆகும் போது, ஒவ்வொன்றாக கழன்று கொள்ள ஆரம்பித்தது. வசிப்பிடங்கள் காலியாயின. மீட்டர் கேஜ் பிட் லைன் மண் மூடி, புதர் வளர்ந்தது.

முன்னர் மீட்டர் கேஜில் 8 பெட்டிகள் பிட் லைனில் விட்டு பராமரித்த இடம்… இப்போது 18 பெட்டிகள், நீளமான 24 பெட்டிகள் கொண்ட பொதிகை .. இதற்கெல்லாம் பிட்லைன் அமைக்க என்றால் ஒரே நீளத்துக்கு நேர் கோட்டில் இடம் வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது செங்கோட்டை ரயில் நிலையத்தில் பழைய பிட் லைனில் இட நீட்டிப்பு செய்தால், ஓர் இடத்தில் அது திரும்பி விடுகிறது. கனமான பாறை உயரத்திலும், கூடவே சில குடியிருப்புகளும் அந்த இடத்தை முட்டுகிறது… என்கிறார்கள்.