
குல்தீப் நய்யார் இங்கிலாந்தில் இந்திய தூதராக இருந்தார். அவர் தன்னுடைய அனுபவம் ஒன்றை எழுதியுள்ளார்.
சோவியத் ரஷ்யா உடைந்து போகும் நிலையில், அதன் அதிபராக இருந்த கோர்பச்சேவ் , கிளாஸ்நோஸ்த் மற்றும் ப்ரெஸ்தொரெய்கா ஆகிய இரண்டு கோட்பாடுகளைத் தொடங்கி யிருந்தார். அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுடிருந்தார். அவர் நாடு திரும்பிய பிறகு லண்டனில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தபோது தாட்சரிடம் உங்களது சுற்றுப்பயணம் எப்படி இருந்தது என்று நய்யார் கேட்டார். நன்றாக இருந்தது என்று அவர் பதில் அளித்தார். பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது என்று நய்யார் மீண்டும் கேட்டார் .
அதற்கு தாட்சர் கூறினார் : ” கோர்ப்பச்சேவ் மிகவும் சோகமாகவும் மகிழ்ச்சியற்றவராகவும் இருந்தார். எதனால் இப்படி இருக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இங்குள்ள பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையே மிகுந்த கசப்பு நிலவுகிறது, கடுமையான மோதல் நிகழ்கிறது. ஆகவே அவர்களால் ஒன்றாக வாழ முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது என்று பதில் அளித்தார். அவர் கூறிய விதத்தைப் பார்த்தால் ரஷ்யா சிதறுண்டு போகும் என்றே எனக்கு தோன்றியது “.
குல்தீப் நய்யார் , தாட்சரிடம் கேட்டார்: ” பிறகு நீங்கள் என்ன சொன்னீர்கள்?” “இப்படிப்பட்ட நேரத்தில், உங்கள் நட்பு நாடான இந்தியாவிடம் நீங்கள் ஏன் அறிவுரை கேட்கவில்லை. அந்நாடு இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, பல்வேறு ஜாதிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகளை கொண்ட மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறதே? என்று கோர்பச்சேவிடம் கூறினேன்” என்று தாட்சர் தெரிவித்தார்.
தாட்சர் இவ்வாறு பதிலளித்தது தன்னை அறியாமலேயே தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக குல்தீப் நய்யார் எழுதியுள்ளார்.
ரஷ்யாவில் 15 சமூக குழுக்களை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. அவர்கள் பிரிந்து சென்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாக பிரித்து விட்டுச் சென்றார்கள் என்று நாம் நினைக்கிறோம். இதற்கும் மேல் மூன்றாவது விஷயமும் இருந்தது.
அப்போது இங்கே 565 சமஸ்தானங்கள் (சிற்றரசுகள்) இருந்தன. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று அந்த சமஸ்தானங்களை அவர்கள் விருப்பத்திற்கு ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றனர். ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.
— சுரேஷ் சோனி
தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை (பக் — 66-67)