
— பூஜ்ய தலாய் லாமா —
வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் பதிலென நான் நம்புகிறேன். பிறந்த கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியே விரும்புகிறார். துன்பத்தை விரும்பவில்லை. படிப்போ, சமூக சூழலோ, கருத்தியலோ எதுவும் இந்த பதிலுக்கு முரணாக இல்லை. ஆழ்ந்து பார்க்கும் போது, நாம் நிறைவுடன் வாழ விரும்புகிறோம்.
பிரபஞ்சத்திற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறதா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்து, குறைந்த பட்சம் நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம். எனவே அதிகபட்ச மகிழ்ச்சியை தருவது எது என்பதை கண்டுபிடிப்பது முக்கியமானது.
ஒரு துவக்கமாக, எல்லா இன்ப துன்பங்களையும் இரண்டு வகைக்குள்ளாக்க முடியும். ஒன்று, உடல் ரீதியானது. மற்றது மனம் சார்ந்தது. இந்த இரண்டில் மனம் சார்ந்தவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது உணவு உடை போன்ற அடிப்படை தேவைகளே கிடைக்காத நிலையில் இருந்தாலோ அன்றி, வாழ்க்கையில் உடல் ரீதியான விஷயங்கள் இரண்டாம் பட்சமாக உள்ளன. உடலுக்கு தேவைப்படும் அடிப்படையான விஷயங்கள் கிடைத்துவிட்டால், நாம் பொதுவாக இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடுகிறோம்.
ஆனால் மனம் அப்படியல்ல. அது ஒவ்வொரு நிகழ்வையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட, அதை பதிவு செய்கிறது. எனவே நாம் மன அமைதிக்கு, மன நிறைவுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அன்பை, பரிவை வளர்க்கும் போது நம்முள் ஆழ்ந்த நிறைவு, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதை நான் கண்டுள்ளேன். மற்றவர்களின் மகிழ்ச்சி குறித்து நாம் அக்கறை படும்போது நமக்குள் பெருத்த சந்தோஷமும் நிறைவும் ஏற்படுகிறது.
மற்றவர்களுடன் நெருக்கமான, பரிவான தொடர்பை வளர்க்கும் போது இயல்பாகவே நம் மனம் லேசாகிறது. இதனால் நம்முடைய பயம், பாதுகாப்பின்மை அகன்று எந்த தடைகளையும் எதிர்கொள்ளும் வல்லமை கிடைக்கிறது. இதுதான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆதாரம்.
நாம் இந்த உலகில் வாழும் வரையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். பிரச்சனைகள் வரும்போது நாம் நம்பிக்கை இழந்து விட்டால் அது நம்முடைய துன்பங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை குறைத்து விடுகிறது. அதற்கு மாறாக, எல்லோரும் தான் துன்பப்படுகிறார்கள் என்ற நடைமுறை உண்மை நமக்கு நினைவிருந்தால் அது பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறமையையும் உறுதியையும் அதிகரி க்கும்.
இந்த அணுகுமுறை நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் நம் மனதை மேம்படுத்தும் வாய்ப்பாக பார்க்கத் தூண்டும். நாம் மற்றவர்கள் துன்பப்படும் போது பரிவுடன் பார்த்து , அவர்களது நோவை போக்க உதவி செய்யும்போது, மேலும் மேலும் பரிவுள்ளவர்களாகிறோம்.
நாம் அன்பும் பரிவும் உள்ளவர்களாக இருக்கும்போது நமக்கு பெருத்த மகிழ்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால், அன்பைத்தான் இயற்கை எல்லாவற்றையும் விட மேலானதாக போற்றுகிறது.
சாதாரணமான பேச்சில் கூட யாராவது மனிதநேயத்துடன் பேசினால் நாம் அதை மகிழ்ச்சியுடன் கவனிக்கிறோம். அதற்கு ஏற்ப வினையாற்றுகிறோம். அதற்கு மாறாக ஒருவர் கடுமையாகவோ அல்லது அக்கறை இல்லாமல் அலட்சியமாக பேசினால் நாம் சங்கடப் படுகிறோம். உடனே தொடர்பை முடித்துக் கொள்ள முனைகிறோம். சாதாரணமானது தொடங்கி முக்கியமான நிகழ்வுகள் வரை எல்லாவற்றிலும் பிறரிடம் பரிவும் மரியாதையும் வெளிப்படுத்துவது நம்முடைய மகிழ்ச்சிக்கு முக்கியமாகிறது.
அன்பிற்கு, பரிவுக்கு பெரும் தடையாக இருப்பது கோபமும் வெறுப்பும். இதை போக்க நாம் முனைய வேண்டும். இவை வலிமையான உணர்வுகள். நம் ஒட்டு மொத்த மனத்தையும் ஆக்கிரமிக்க கூடிய வல்லமை வாய்ந்தவை. இருந்தாலும் இவற்றை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் இந்த எதிர்மறையான உணர்வுகள் எளிதில் நம்மை சூழ்ந்து கொண்டுவிடும் . மகிழ்ச்சியான மனத்தையடைய நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரும் தடையாகிவிடும்.
உங்கள் எதிராளிகள் உங்களுக்கு ஊறு செய்வதாக தெரிந்தாலும் இறுதியில் அவர்களுக்கு அவர்களே கேடு ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பதிலடி கொடுக்க வேண்டும் என்று உங்கள் தன் உணர்வு தூண்டலாம். அன்பை பயில வேண்டும் என்ற உங்கள் ஆவலையும், பிறரிடம் பரிவுடன் இருக்க வேண்டும் என்ற உங்கள் உறுதியையும், நினைவுக்கு கொண்டு வந்து, அந்த பதிலடி கொடுக்க தூண்டும் தன்னுணர்வுக்கு தடை போட வேண்டும். அவருடைய செயல்களின் விளைவால் அவருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்கும் பொறுப்பையும் நீங்கள் ஏற்க வேண்டும்.
தனி மனிதர்களின் மகிழ்ச்சி ஒட்டுமொத்த மனித இனத்தின் மேம்பாட்டிற்கு ஆழ்ந்த பங்களிப்பை அளிக்கக்கூடியது. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் அன்பை எதிர்பார்ப்பவர்கள். நாம் எந்த சந்தர்ப்பத்தில் எவரை சந்தித்தாலும் அவர்களை சகோதரனாக, சகோதரியாக உணர முடியும்.
சுருக்கமாக சொன்னால் ஒட்டுமொத்த மனித இனமே ஒன்றுதான். இந்த சின்ன உலகம் தான் நம்முடைய ஒரே வீடு. நம்முடைய இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் சகோதரத்துவத்தை, பெருந்தன்மையை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நாம் நம்முடைய மதத்தில் பற்றுள்ளவராகவோ அல்லது ஒரு கருத்தியலில் தீவிரமானவராகவோ இருப்பதை விட , ஒவ்வொருவரிடமும் நல்ல மனித தன்மையை வளர்ப்பது அவசியம்.
(ராஜீவ் மல்ஹோத்ராவிடம் கூறியது)
நன்றி – டிரிபியூன் நாளேடு