
வேர்களை வலுப்படுத்துவோம்
(ஸ்ரீ குருஜி மாதவ சதாசிவ ராவ் கோல்வல்கர் ஆசிரியர்களிடையே பேசியது)
கல்வித்துறையில் ஆசிரியர்கள்தான் மிக முக்கியமானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. இருப்பினும் இந்த விஷயத் தில் நாம் சில விஷயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது நன்று.
நமது அடிப்படைத் தத்துவம்
‘கல்வி’ என்ற சொல்லுக்கு இப்போது எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது என்கிற விஷயத்தில் இருந்து நாம் தொடங்க லாம். மனிதனுக்கு உள்ளே உறங்கிக் கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்வதுதான் கல்வி. மூளையில் வெறுமனே தகவல் களைக் கொட்டும் வேலை கல்வியாகிவிடாது. தட்டுமுட்டுச் சாமான் கள் போட்டு வைக்கும் அறைபோல, மனித மூளையை ஆக்குவது அதன் நோக்கமல்ல. மனிதனுக்குள் இருக்கும் பல்வேறுபட்ட திறமைகளை – பேரறிவாற்றலை வெளிக்கொணர்ந்து வளர்ப்பது தான் கல்வியின் மிக முக்கியமான பணி என்று எல்லா இடங்களி லும் கருதப்படுகிறது. இது நல்ல பலன்களையும் தந்துள்ளது.கலை, விஞ்ஞானம் போன்ற பலவகையான துறைகளில் அரும்பெரும் சாதனை படைத்தவர்களை பல்வேறு நாடுகளிலும் நாம் பார்க்க முடியும்.
ஆனால் ஹிந்துக்களாகிய நாம், இத்துடன் நின்றுவிடவில்லை; இதையும் தாண்டிச் சென்றிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை கல்வியின் சாராம்சம் என்பது, மனிதனுக்குள்ளே உறையும் அவனது ஆளுமையை வெளிப்படுத்துவதுதான். வாழ்க்கை என்பது வெறுமனே உணர்ச்சிகளால் ஆன மூட்டை அல்ல. நமக்குள்ளே ‘இறுதிப் பேருண்மை ‘ இருப்பதாக நாம் சொல்கிறோம். அந்தப் பேருண்மையைப் புரிந்துகொண்டு, நமக்குள்ளிருக்கிற அதனை வெளிப்படுத்துவதே நோக்கம். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நமது மகான்களும் தவமுனிவர்களும் விரிவான ஆலோசனைக நமழங்கிச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நடை முறைப்படுத்துவதில் ஆசிரியரின் பங்களிப்பு மிக முக்கியமானது.
கையிலிருக்குது வெண்ணெய்
துவக்கத்திலேயே அவர்களிடம் பத்துத் தத்துவங்களை யமங்கள், நியமங்கள் மாணவர்களின் மனத்தில் வேரூன்றச் செய்துவிட வேண்டும். அஹிம்சை (இன்னா செய்யாமை), சத்தியம் (வாய்மை), அஸ்தேயம் (திருடாமை = தேவைக்குமேல் பொருள் சேர்க்காமல் இருப்பது), பிரம்மசரியம் (புலனடக்கம்), அபரிக்ரகம் (இரவாமை) – இவை ஐந்தும் ‘யமங்கள்’. ஸௌச்சம் (தூய்மை), ஸந்தோஷம் (போதுமென்ற மனம் படைத்தவராக இருத்தல்), தபஸ் (நோன்பு), ஸ்வாத்யாய (ஆன்மிகக் கல்வி), ஈஸ்வர ப்ரணிதானம் (கர்மங்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது) -இவை ஐந்தும் ‘நியமங்கள்’. பார்க்கப்போனால், பைபிளின் பத்துக் கட்டளைகள் என்பது என்ன? இந்த ஐந்து நியமங்கள்தான். மாணவர்களில் மிகச் சிலர்தான் இந்த யம-நியம உணர்வுகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற நிலை உருவாகலாம். அதனாலும் மிக நல்ல பலன் உண்டு. ஏனெனில், அவர்கள் தங்களைச் சுற்றிலும் மிகப் புனிதமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். இதன் விளைவாக, நாளாவட்டத்தில் மற்றவர்களும் இவற்றைக் கடைப்பிடிக்கத் துவங்கிவிடுவார்கள்.
இந்தத் தத்துவங்களை அந்த இளம் உள்ளங்களுக்குச் சுவையான முறையில் சொல்லித்தர வேண்டும். நான் நடுத்தரப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அப்பள்ளியில் ஓர் ஆசிரியர் இருந்தார். பள்ளிப்பாடங்களைச் சொல்லித் தருவதோடு மட்டுமல்லாமல் அவர், நமது தொன்மையான புராணங்களில் இருந்து பலதரப்பட்ட கதைகளையும் சொல்லுவார். அவர் சொல்லும் கதைகள் மிகவும் சுவையாகவும் அதேநேரத்தில் நல்ல ஞானம் ஊட்டுவதாகவும் இருக்கும். எனது தாயாரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. எனது தாயார் “கல்வியறிவு படைத்த” பெண்மணி அல்ல. மகாபாரதம், ராமாயணம் போன்ற நமது சமய இலக்கியங்களை நான் அவருக்குப் படித்துக்காட்டு வேன். இதன்மூலம் எனக்கும் அளவில்லா ஆதாயம் கிட்டியது.
இத்தனை நூற்றாண்டுகளாக ‘ஒரே மக்கள்’ என்ற அளவில் நம் பாரம்பரியத்தையும் நடத்தையையும் நிர்மாணித்து வருவது இந்தக் கதைகள்தான். இவற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம், ஏராளம். “ஜாபாலி” கதை ஓர் உதாரணம். ஜாபாலி என்பவன் ஒரு பையன். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவன் வாய்மையைக் கடைப்பிடித்தான். ஒருமுறை அவன் ஓர் ஆசிரியரை அணுகி, ‘என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ளுங்கள்’ என்று வேண்டினான். ஆசிரியரோ அவன் என்ன ‘கோத்திர’த்தைச் சேர்ந்தவன் என்று வினவினார். பையன் நேரே தாயாரிடம் சென்று, ஆசிரியர் தன்னிடம் கேட்ட கேள்வியைக் கூறினான். அவனது அம்மா, ”மகனே! நான் ஓர் எஜமானர் வீட்டில் வேலைக்காரியாக இருந்தபோது கர்ப்பமடைந்தேன். அந்தக் குழந்தைதான் நீ. உனது தந்தை யாரென்பதையே என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இதை உனது ஆசிரியரிடம் சொல்” என்று கூறினாள்.
ஆசிரியரிடம் போனான் ஜாபாலி. தாயார் தன்னிடம் சொன்ன பதிலை வார்த்தை பிசகாமல் அப்படியே அவரிடம் கூறினான். “தம்பி, உன்னிடம் நேர்மையான நடத்தை இருக்கிறது.உண்மை பேசும் துணிவு இருக்கிறது. கல்வியறிவு பெறுவதற்கு மிகவும் ஏற்றவன் நீ” என்று கூறி அவனைத் தனது சீடனாக்கிக் கொண்டார் அந்த ஆசிரியர். அதற்குப் பிறகு அந்தப் பையன் ‘சத்தியகாம ஜாபாலி’ என்றே அழைக்கப்படலானான்.
குறுக்கு வழிகள் நேர்மையை அழிக்கின்றன
ஆனால், கதைகளும் நிகழ்ச்சித் தொகுப்புகளும் மேற்கோள் களும் நிறைந்த இந்தக் களஞ்சியங்களைப் பற்றி நம்மில் பலர் அறிவதில்லை. மிகவும் வளமையான எல்லாத் துறைகளிலும் மேலோங்கிய – மிகத் தொன்மையான வரலாறு நமக்கு இருக்கிறது என்பதைக்கூட நமது இளைஞர்களில் பெரும்பாலானோர் அறியாமல் இருக்கிறார்கள். கல்விக்கூடங்களில் இந்த ஆக்கபூர்வ மான – ஆரோக்கியமான விஷயங்கள் சொல்லித் தரப்படுவதில்லை. எனவேதான் நமது மாணவர்கள் பாதைமாறிப் போய்விடுகிறார்கள். ஆபாசமான புத்தகங்களைப் படிக்கத் தலைப்படுகிறார்கள். ‘அவர்கள் அதிக முயற்சி எடுத்துப் படிப்பதில்லை; புரிந்துகொள்ள அதிக நாட்டம் கொள்வதில்லை’ என்பதை அவர்கள் பாடம் படிக்கும் முறையே காட்டிக் கொடுத்து விடுகிறது. பாடப்புத்தகங் கள், தரமான நூலாசிரியர்களால் எழுதப்பட்ட ஆலோசனை நூல்கள் (Reference Books) போன்றவை எல்லாம் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. சுருக்கமான குறிப்புகள், கேள்வி-பதில் ஆகியவை தான் இன்றைய ஃபாஷன். ‘எளிதில் பாஸ் பண்ணுவதற்கு இன்னொரு வழி டியூஷன் வைத்துக்கொள்வது’ என்றும் மாணவர்கள் கருதுகிறார்கள். ஓர் ஆசிரியர் சொல்லித் தரும் பாடத்திற்கு, அவருடைய மாணவர்கள் இன்னொருவரிடத்தில் டியூஷன் வைத்துக் கொள்ள வேண்டிவருகிறது என்றால், அந்த ஆசிரியர் அதைத் தன்னுடைய கடமை உணர்வுக்கும் ஒழுக்க உயர்வுக்கும் அவமானமாகக் கருதவேண்டும். மொத்தத்தில் இந்தக் குறுக்கு வழிகள் மாணவன் மனதைப் பாதிக்கின்றன. புரிந்துகொள்ளும் திறனையும் ஆர்வத்தையும் துடைத்தெறிந்து விடுகின்றன. இதுதான் மிச்சம். இந்த மாதிரியான விஷயங்களை ஆசிரியர்களே ஊக்குவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. பார்க்கப் போனால் சில ஆசிரியர்களே, தன்னிடம் டியூஷன் படிக்க வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்தவும் சொல்கிறார்கள். இவை எல்லாம் மாணவனின் மனோதிடத்தைப் பாதித்துவிடும்; ‘பிழைப்பதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் உள்ளன; எனவே, கடமையை நேர்மையாகச் செய்து முடிக்க வேண்டிய அவசியமே இல்லை’ என்று அவர்கள் மனத்தில் பதிந்துவிடும். இவ்வாறு மாணவர்களின் மன உறுதி குலைந்து போவதுதான், அவர்களை முறைகேடான நடத்தைக்குத் தூண்டுகிறது; எல்லாக் “குறுக்கு வழி”களும் தோல்வியடைந்துவரும்போது, தேர்வில் பாஸ் பண்ணுவதற்காக முறைதவறிய வழிகளில் ஈடுபடுகிறார்கள்.
மிகத் தீவிரமான ஹிந்துக்களாக இருப்போம்
இத்தகைய விபரீதங்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். துவக்கக் கல்வி பயிலும் நிலையிலேயே, உன்னத குணங்களான அறிவும் அன்பும், இளம் உள்ளங்களில் விதைக்கப்பட வேண்டும். புனிதமான நமது தேசியச் சிறப்பியல்பு கள், ஆற்றல்மிக்க தேசிய வீரர்கள், உயரிய சம்பவங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கிய தொன்மையான இலக்கியங்கள், நவீன நூல்கள் அடங்கிய களஞ்சியத்திலிருந்து நாம் இந்த விஷயங்களைப் பெறமுடியும். குறிப்பாக, நமது இளைய தலைமுறையினர், உன்னதமான இந்த ரிஷி – முனிவர்கள் பரம்பரையில் பிறந்ததற் காகப் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களின் உண்மையான வாரிசுகளாக நாம் இருக்க வேண்டுமென்றால், நாம் ஹிந்துக்களாக இருக்க வேண்டியது அவசியம். ஹிந்துக்களாகவே காட்சியளிக்க வேண்டும். நாம் ஹிந்துக்கள்தான் என்று உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளுமாறு நமது நடவடிக்கைகள் அமைய வேண்டியது அவசியம். எப்பொழுது நம்மையும் நமது தேசிய பழக்கங்களையும் தேசிய நடைமுறைகளையும் முதலில் நாம் மதிக்கத் தொடங்குகிறோமோ, அப்பொழுதுதான் உலகமும் அவற்றை மதிக்கும். உண்மையில், நாம் நாமாக இருக்க வேண்டும் என்றுதான் உலகம் விரும்புகிறது; யார் யாரை எல்லாமோ காப்பியடித்து அவர்களது நகல்களாக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
உள்ளத்துக்கு உண்மையாக…
ஒருமுறை ஒரு பிரெஞ்சுக்காரர் என்னைச் சந்தித்தார். அவரை எங்களுடன் உணவு அருந்துமாறு வேண்டினோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்த அவர், எங்களுடன் தரையிலேயே அமர்ந்தார். ஸ்பூன், முள் கரண்டி, டேபிள் எதுவும் இல்லாமல் நமது உணவை வெறும் கைவிரல்களாலேயே எடுத்துச் சாப்பிட்டார். இது மிகவும் சுவையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். “நாங்கள் உங்கள் நாட்டிற்கு வரும்போது உங்களது பழகுமுறை பழக்கங்கள் ஆகியவற்றின் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொண்டு, அவைகளை, நாங்களும் அனுபவித்து உணரவேண்டும். அது இல்லாவிட்டால், நாங்கள் இவ்வளவு தூரம் உங்களது நாட்டிற்கு வரவேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் வினவினார்.
ஒருமுறை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் இயக்கம் ஒரு பரிசோதனை மேற்கொண்டது. வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் இருந்து சில மாணவர்களை பூனாவிலும் மகாராஷ்ட்ரத்தின் வேறுசில பகுதிகளிலும் தங்கவைத்து கல்வி போதிப்பது என்பதே அந்தத் திட்டம். அவர்கள் தங்களது மனத்தில் நமது கலாச்சாரத்தைப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்; இதன் மூலமாக அவர்கள் நமது தாய்நாட்டின்மீதும் நமது மக்களுடனும் உணர்வுபூர்வமாக இணைக்கப்பட வேண்டும் -இந்தக் காரணத்திற்காக அவர்களை வீடுகளிலேயே தங்கவைப்பது என்று முடிவாகியது. இந்தத் திட்டத்தின் அமைப்பாளர்கள் என்னை அணுகியபோது நான், “மேற்கத்திய பாணி குடும்பங்களில் அவர்களைத் தங்க வைக்காதீர்கள்” என்று அறிவுரை கூறினேன். காலையும் மாலையும் பூஜையறையில் விளக்கேற்றி வைக்கப்படும் வீடுகளில் – நமது விழாக்களும் சடங்குகளும் உயிர்ப்புடன் இருக்கும் வீடுகளில் – எந்த வீடுகள் அவர்களுக்கு கலாச்சார பதிவுகளைக் கொடுக்க முடியுமோ, அத்தகைய வீடுகளில்தான் அவர்கள் தங்க வேண்டும் என்று கூறினேன். பரந்து விரிந்த பாரத பூமியில் வாழும் மக்கள் குழாம், எத்தனையோ குழப்பங்களுக்கு மத்தியிலும் தங்களது தேசிய சிறப்பு இயல்புகளைக் காப்பாற்றிக் கொண்டு, இறவாத தேசமாக இன்னும் உயிர் வாழ்ந்து வருவது இத்தகைய பண்புப் பதிவுகளின் மூலம் மட்டும்தான்.
“ஹிந்துஸ்தான் உலகிலேயே மிகப்பழமையான தேசம்” – என்று 1872லேயே எடின்பர்க் ரெவ்யூ எழுதியது; ஆனால் துரதிர்ஷ்டவச மாக, இந்தத் தொன்மையான, மகத்தான இனமக்கள்கூட அந்நிய பிரசாரத்தின் வலையில் விழுந்து விட்டார்கள்; தங்களது புராதன வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறந்துவிட்டார்கள். தங்களது கடந்த காலம் என்ற நிலத்தில் இருந்து வேர் அறுக்கப்பட்டுவிட்ட இந்த சமுதாயம் தனக்கென்று ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை நிர்மாணித்துக் கொள்வது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை.
இந்தக் குழப்பங்களுக்கு மூல காரணம் எது ?
நான் டெல்லி சென்றிருந்தபோது ஒருமுறை திரு. எம். சி. சாக்ளா அவர்களைச் சந்தித்தேன். அப்போதைய மத்திய கல்வி அமைச்சராக இருந்த அவர், சில நாட்களுக்கு முன்புதான் ரஷ்யா சென்று திரும்பி இருந்தார். எவ்வாறு ரஷ்ய இளைஞர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களாகத் திகழ்கிறார்கள், வாழ்க்கையின் எல்லாப் படிகளிலும் மகோன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் இருக்கிறார்கள் என்பதை அவர் விவரித் தார். பிறகு அவர் என்னிடம், “அதேநேரத்தில் நமது மாணவர் களையும் பாருங்கள்! ஒரே ஸ்டிரைக் மயம், ஒழுங்கீனம், குழப்பம். இவர்களிடம் என்ன கோளாறு என்பதே எனக்குப் புரிவதில்லை. ஆனால், உங்களது இயக்கத்தையும் நான் பார்க்கிறேன். அதிலுள்ள இளைஞர்கள் ஒழுக்கத்துடன் திகழ்கிறார்கள். அவர்களிடம் சமர்ப் பண மனோபாவம் இருக்கிறது. ஆகவே, நமது இளைய தலைமுறை யினரின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு நீங்கள் சொல்லலாமே!” என்று கேட்டார்.
“சரி! மாணவர்களின் மத்தியில் ஏதாவது தலைசிறந்த லட்சியத்தை முன்னிறுத்தி இருக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “அவர்களை ஊக்கப்படுத்தி கிளர்ந்தெழச் செய்கிற மாதிரி உன்னதமான ஒரு லட்சியம் இல்லாதபோது, அவர்கள் நல்ல ஒழுக்கத்தையும் சமர்ப்பணத்தை யும் உயர்ந்த வாழ்க்கைத் த்துவங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இத்தகைய உயர்ந்த லட்சியம் மட்டுமே தங்களது மூர்க்கத்தனமான தூண்டுதல் களைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும்; தங்களது பொங்கி வரும் ஆற்றலை ஆக்கபூர்வமான, தேச நிர்மாண வழிகளில் செலுத்தவைக்கும். எனவே, அவர்கள் மனதில் தேசிய லட்சியம் பதிய வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நமது உண்மை யான வரலாற்றைப் போதிப்பது இதற்கான நல்ல ஆரம்பம். நாம் மிக உயர்ந்த பாரம்பரியம் கொண்ட நாட்டில் பிறந்திருக்கிறோம், உலகாயத வாழ்விலும் ஆன்மிகத் துறையிலும் நமது முன்னோர்கள் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள், உன்னதமான வாழ்க்கைத் தரங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதை நமது குழந்தைகளுக்கு போதிக்கவேண்டும். அப்போதுதான், நாமும் அதேபோன்ற – அல்லது அதையும்விட உயர்ந்த – நிலையை எய்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்யும் ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும்.
“ஆனால், நம் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவதோ தலைகீழ்ப் பாடம் ; நமது வரலாற்றின் ஒளிமயமான காலம் அனைத்தும் இருண்ட காலம் என்று சொல்லித் தரப்படுகிறது; அடிமைப் பட்டிருந்த காலம் புகழப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் சுரண்டல்களுக்கு புகழாரம் சூட்டப்படுகிறது; சுதந்திரப் போராட்ட வீரர்களின் உணர்வூட்டும் செயல்கள் இருட்டடிப்புச் செய்யப்படு கின்றன. நமது சரித்திரத்தைப் பாதி ஆக்கிரமித்திருப்பது ‘முஸ்லிம் காலம்’. மீதத்தை ‘பிரிட்டிஷ் காலம்’ பிடித்துக் கொண்டுள்ளது. இதுதான் நாம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் லட்சணம். ‘அவர்களுக்கென்று மகத்தான கடந்த காலமே கிடை யாது; அவர்கள் எப்போதும் அடிவாங்கிக் கொண்டே இருந்தார்கள். முகலாயர்களும் பின்னர் பிரிட்டிஷாரும் வந்த பிறகுதான், இந்த நாடு முன்னேற்றப் பாதையைப் பார்த்தது. ஆக மொத்தத்தில் அவர்களுக்கென்று பெருமைப்படத்தக்க உருப்படியான கடந்த காலம் இல்லை, பின்பற்றத்தக்க உருப்படியான முன்னோர்கள் இல்லை.- இப்படிச் சொல்லிக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தை களிடம் இருந்து உருப்படியாக எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
”சரி, கடந்த காலத்தில் ஹிந்துக்கள் புரிந்த சாதனைகளைப் பற்றி நீங்கள் புகழ்ந்து பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களது வீரத்தையும் அந்நியர்களுக்கு – அது கிரேக்கர்களா கட்டும், முஸ்லிம்களாகட்டும், பிரிட்டிஷாராகட்டும் – எதிராக நடந்த போர்களில் அவர்கள் காட்டிய தியாக உணர்வையும் பாராட்டிப் பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உடனேயே உங்களை ‘வகுப்புவாதி’ என்று முத்திரை குத்திவிடுவார்கள்! பிரச்சினையின் ஆணிவேர் எது என்பது இப்போது தெரிகிறதா?. என்று நான் பதில் கூறினேன். திரு. சாக்ளா வாயடைத்துப் போனார். சற்று நேரம் கழித்து, “ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்டார்.
செயலில் தெரியுது வேறுபாடு
நம்மை அவமானப்படுத்துகிற நகைப்புக்கு இடமாக்குகிற இந்தக் கல்விமுறையினால் கண்ட பலன்தான் என்ன?
“ஓர் உதாரணம் தருகிறேன். சில ஆண்டுகள் முன்பு டாக்டர் சதுர்வேதி என்பவர் ஜெர்மனிக்குப் போனார். ஜெர்மனி வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது ‘இந்தோ – ஜெர்மனி அசோசியேஷன்’ என்ற அமைப்பு. ஐரோப்பிய பாணியில் உடையணிந்திருந்த அவர் விமானநிலையத்தில் வந்திறங்கியதுமே, அங்கிருந்தவர்களுக்கு ஒரே திகைப்பு! ‘சரிசரி, குளிருக்கு இதமாக இருக்கும் என்று இந்த உடைகளை அணிந்திருக்கிறார் போலும்!” என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள். பிறகு அவரை, அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே அழைத்துச் சென்றார்கள். அந்த வீதிகளில் நான்கு பெரிய பெரிய ஆர்ச்சுகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேதத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. வந்திருப்பவர் சதுர்வேதியாயிற்றே! (நான்கு வேதங்களிலும் கரைகண்டவர்) அசோசியேஷனின் செயலாளரான பெண்மணி, தூய சம்ஸ்கிருதத்தில் அவரை வரவேற்றுப் பேசினார். அவரை அடுத்துப் பேசிய நபரும் சம்ஸ்கிருதத்திலேயே பேசினார்; அடுத்துப் பேசிய “பண்டித” டாக்டரோ ஆங்கிலத்தில் பேசினார். அதுவும், வரவேற்புரைக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத விஷயத்தைப் பற்றி! காரணம் வேறொன்றுமில்லை. அவருக்கு சம்ஸ்கிருதத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது. வேதங்களைப் பற்றிக் கேட்பானேன்! ஒருவழியாக “பண்டித”ரின் குட்டு உடைந்தது. இதர நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு அந்தப் “பண்டித” டாக்டர், அடுத்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
பெரியவர்கள் நடந்து கொண்டுள்ள முறை இதற்கு நேர்மாறானது. ஸ்வாமி ராமதீர்த்தர் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் அமெரிக்க கடற்கரையைத் தொட்டது. சகபயணிகள் அனைவரும் அவசர அவசரமாகத் தங்கள் சாமான்செட்டுகளைச் சுருட்டிக்கொண்டு, கிளம்ப ஆயத்தமானார்கள். ஆனால், இந்தக் காவி உடைச் சாமியாரோ, ஆரவாரமில்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார். எதேச்சையாகத் துறைமுகத்திற்கு வந்திருந்த அமெரிக்கர் ஒருவர் அவரை அணுகினார்; அவருடைய சாமான்கள் எங்கே, அவர் எங்கே போக வேண்டும், ஏதாவது அறிமுகக் கடிதம் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் வினவினார். சுவாமி ராமதீர்த்தரோ, தன்னிடம் எந்த சாமான்செட்டும் இல்லை, பணமும் இல்லை என்றும் எந்தவித அறிமுகக் கடிதமுமே கிடையாது என்றும் பதில் கூறினார். இந்தப் பதிலைக் கேட்ட அந்த அமெரிக்கர் திக்குமுக்காடிப் போனார்: “என்ன இது, இது உங்களுக்கு அந்நிய நாடாயிற்றே! எதுவுமே இல்லாமல் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு இங்கே நண்பர்கள் – அறிமுகமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? ” ஸ்வாமிஜி புன்னகை பூத்தார்; வாஞ்சையுடன் அந்த அமெரிக்கரின் தோள்களில் கரங்களை வைத்து, ‘ஓ, இல்லாமலென்ன? ஒருவர் இருக்கிறார், நீதான் அது!” என்று மறுமொழி கூறினார். இந்த அன்பு அந்த அமெரிக்கரின் உள்ளத்தைத் தொட்டது. அப்போதே அவர் ஸ்வாமிஜிக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்; ஸ்வாமிஜியைத் துதிக்கலானார். ஸ்வாமி ராமதீர்த்தர் அமெரிக்காவில் தங்குவதற்கு மிக நல்ல ஏற்பாடுகளைச் செய்து தந்ததும் அவரே.
அஸ்திவாரத்தை மறக்க வேண்டாம்
ஆனால், சிறுவயதில் இருந்தே முறையான பண்புகளை நாம் பெற்றுவந்தால்தான், அன்பு கொள்வதிலும் விவேகம் பெறுவதிலும் இவ்வளவு உயரத்தை அடைய முடியும். அதற்கு, தொடக்கப்பள்ளி நிலையில் இருந்தே சரியான சூழ்நிலை உருவாக்கி வைக்கப்பட வேண்டியது அவசியம். ஒருமுறை நான், நாசிக்கில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தேன். பள்ளி வராந்தா சுவர்களில் நூற்றுக்கணக்கான படங்கள் மாட்டப்பட்டி ருந்தன . எல்லாமே, ஐரோப்பாவிலும் வேறுசில நாடுகளிலும் நடைபெற்ற போர்கள் முதலானவை பற்றிய படங்கள்தான். நமது சரித்திர கால, புராண கால சம்பவங்களைக் குறிக்கும் ஒரு படம்கூட இல்லை. “இளைய தலைமுறையினர் உள்ளங்களில் இந்தப் படங்கள் எப்படி சரியான உணர்வைப் பதியவைக்கும்?
போர்களைப் பற்றிய படங்களாகவே இருக்கட்டும், ஹல்திகாட், பானிப்பட்டு போர்களைப் பற்றிய சித்திரங்களை வைத்திருக்கக் கூடாதா!” என்று நான் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்டேன். இதற்கு அவர், “எனது நாடு, எனது நாட்டு எல்லை என்று குறுகிய வட்டத்துக்கு உள்ளேயே அடைந்து கிடக்கக்கூடாது.” என்று குறிப்பிட்டார். இத்தகைய அசட்டுத்தனமான சர்வதேச வாதம், இன்னும் இதர ‘இஸம்’கள் போன்ற எல்லா வறட்டு வாதங்களும் இளம் உள்ளங்களை சீரழிக்கவே செய்யும்.
நமது தேசிய தத்துவங்களையும் பாரம்பரியத்தையும் பொறுத்தவரையில் அவை என்றுமே, ஒட்டுமொத்த மனிதகுலத்துக் கும் ஏற்படவுள்ள மிக உயர்ந்த நன்மையை உள்ளடக்கியவை. எனவே, நமது தேசியத்தைக் குழந்தைகளுக்குப் போதிப்பதால் -மிக மிகத் தீவிர தேசியத்தைச் சொல்லித் தந்தாலும் கூட – நமது குழந்தைகளின் மனது ஒருக்காலும் மனிதகுல நன்மைக்கு விரோதமாகி விடாது. அதற்கு மாறாக, அது மனிதகுலத்தின் உயர்ந்த பண்புகளையும் வலுப்படுத்தவே செய்யும்.
இளைய உள்ளங்களை உருவாக்கும் ஆசிரியர்கள், இந்தக் குறிப்புக்களை மனதில் கொள்வது நல்லது.