
பிற்போக்கான “முற்போக்காளர்கள்”
ஆத்ம சமர்ப்பணம் செய்வதற்காக நம்மை ஊக்குவித்துத் தூண்டுகின்ற ஒரே குறிக்கோள் ராஷ்ட்ர சேவை என்பதே.
இதன்மூலம் நடைமுறை ரீதியான லட்சியத்தின் இருதரப்புகளாகின, யதார்த்த வாதம், லட்சியவாதம் ஆகிய இரண்டுமே பூர்த்தியாகி விடுகின்றன. எந்தவொரு பொருளைப் பற்றி நமது உள்ளத்தில் அன்பு, பெருமிதம் அல்லது பக்தி சிரத்தை தோன்றுகிறதோ அந்தப் பொருளுக்கு அல்லது மனிதர்களுக்குத்தான் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் ஏற்படும்.
ஆகவே முதன் முதலாக நாம் நமது மனத்தில் நமது தேசிய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி – தர்மம், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கைத் தத்துவ ஞானம்,அபிலாஷைகள், நம்பிக்கைக்கும் தன்மானத்திற்கும் உரிய பொருள்கள் ஆகியவை பற்றி – தீவிரமான அன்பும் பெருமிதமும் பக்தி சிரத்தையும் பூண்டு அதன்மூலம் மனதைப் பண்படுத்திப் பழக்க வேண்டியது அவசியம்.
ஆனால் நம் நாட்டில் இன்று தம்மை ‘முற்போக்குவாதிகள்’ என்று அழைத்துக் கொள்ளும் பலர் உள்ளனர். அவர்களுக்கு நம் தொன்மையான வாழ்க்கை லட்சியங்களனைத்தும் பிற்போக்குத்தன மாகவும் கொடுமை வாய்ந்தவையாகவும் தோன்றுகின்றன. பாரதீய பண்புகளுக்கெதிராக அவர்கள் எழுப்புகின்ற பெரும் ஆட்சேபம் அவை பழசாகிவிட்டன என்பதே.
இந்தப் புதிய ‘தீர்க்கதரிசி’ களுக்குப் புதுமை ‘மதம்’ பிடித்திருக்கின்றது. அவர்களுக்குப் பழையன அனைத்தும் மோசமானவை. கைமருத்துச் சரக்குகள் போன்ற அவர்களது சித்தாந்தங்கள் சமீப காலமாக அவற்றிற்கு அதிகமான குணமிருக்கிறது எனக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.
மருத்துவரொருவர் நோயாளியிடம் சென்று, காலக்கிரமப்படி பிறவிக்குப் பிறகு சாவு இருப்பதால், சாவதே நல்லது என்று யோசனை கூறினால் அது எவ்வளவு நகைப்புக்கிடமாக இருக்குமோ, அதுபோல உள்ளது இவர்கள் கருத்து.
சூரியன் பழைய வனாக, உண்மையில் மிகமிகப் பழையவனாக ஆகிவிட்டான். மின் குழல்விளக்கு இருளைப் போக்குவதற்காகப் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. ஆகவே சூரியனை விட்டுவிட்டு, அந்த இடத்தில் ‘குழல் விளக்கு’ வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா?
சில பொருள்கள் தொன்மையானவை என்பதற்காக மாத்திரம் அவற்றைப் பயனற்றவை என்றும் பிற்போக்குத் தனமானவை என்றும் கூறுவது அறிவுத்துறையில் அடிமைத்தனத்தை ஒப்புக் கொள்வதாகும். இவ்வாறு இருப்பினும், இந்த ‘அறிவு அடிமைகள்’ இந்த யுகத்தின் ‘முற்போக்குவாதிகள்’ என்று தம்மைத்தாமே அறிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இது மானசீக பலவீனத்தின் அறிகுறி, அறிவு சூன்யமாகி விட்டதென்பதையே இது காட்டுகிறது. இதன் காரணமாக, மனிதன் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் ஆக்கப்பூர்வமாகவும் முழுமையாகவும் சிந்திக்க முடிவதில்லை.
மானசீக அடிமைத்தனம்
மனிதனின் இந்த பலவீனத்தை வளர்ப்பதில் மற்றொரு காரணமும் துணைபுரிகின்றது. மேற்கு நாட்டவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் மட்டமானவர்கள் என்று நம்மையே கருதிக் கொள்கின்ற எண்ணம்தான் அது. இந்த உணர்ச்சியானது இந்நாட்டில் ஆங்கிலேய ஆட்சியின் பரம்பரைச் சொத்தாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்நாட்டில் தோன்றிய பல மகாபுருஷர்கள் அந்நிய ஆட்சியின் தளையை ஒடித்தெறியப் பெருமுயற்சி நடத்தி வந்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் மனத்தில் ஆங்கில அடிமைத்தனம் குடிகொண்டிருந்தது. அவர்களது மனத்தில் தோல்வி மனப் பான்மையும் இழிவு மனப்பான்மையும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. இது எப்படி நிகழ்ந்தது?
இதற்கான காரணம் மிகவும் எளிது. அதாவது எல்லா நற்குணங்களையும், பணத்துடனும் அதிகார சக்தியுடனும் தொடர்புபடுத்தி நினைக்கின்ற மனித பலவீனம்தான் அதற்குக் காரணம்.
சமஸ்கிருதத்திலுள்ள பிரபலமான ஒரு பழமொழி இதனை விளக்குகின்றது.
யஸ்யாஸ்தி வித்தம் ஸ நர: குலீன: |
ஸ பண்டித: ஸ ச்ருதிமான் குணக்ஞ: ||
(எவனிடம் செல்வமும் சக்தியும் இருக்கின்றதோ, அவனைப் பண்டிதனென்றும் ஞானம் வாய்ந்தவனென்றும் உயர்குடிப் பிறந்தவனென்றும் நல்ல குணங்கள் வாய்ந்தவனென்றும் ஒப்புக்கொண்டு விடுவது மனிதனின் இயல்பு)
அந்நியர்களுக்கு எதிராக பாரதீயர்கள் தொடுத்த போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதாகத் தோன்றியது; நாம் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டோம் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட ஆரம்பித்தது; அப்பொழுது நாட்டில் எங்கு நோக்கினும் நிராசையும் செயலிழந்த நிலையும் தன்னம்பிக்கை அழிந்த சூழ்நிலையும் பரவலாயிற்று. அதன் காரணமாக நமது நாட்டு மக்களின் மனத்தில் ஓர் எண்ணம் வளரலாயிற்று. அதாவது நம்மைத் தோற்கடித்து வெற்றிபெற்ற இனத்தவரிடம் படைபலமும் தந்திரச் சூழ்ச்சித் திறமையும் நம்மைவிட அதிகமாக இருப்பதுடன் உலகியல் செல்வமும் நிறைந்திருப்பதாக அவர்கள் தைரியமாக நடிப்பதால், அவர்கள் நம்மைவிட எல்லா ஞானங்களிலும் உயர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்து பெருகிவிட்டது.
துவக்க காலத்திலிருந்தே நம் நாட்டு மக்கள் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களையும் நடையுடை பாவனைகளையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி நடிக்கவும், மேல்நாட்டிலிருந்து கடன் வாங்கிய கருத்துக்களை உள்ளத்திலுறைந்த உறுதி போலவும் வெளியிடத் துவங்கினார்கள். ஒவ்வோர் ஐரோப்பிய லட்சியமும் – அது எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும் – அவர்களுக்கு வேதவாக்கு ஆயிற்று.
இதற்கு நேர்மாறாக நம் நாட்டின் ஒவ்வொரு பொருளும் இயற்கையாகவே பொய்யானது என்றும் முட்டாள்தனமானது என்றும் தீர்மானித்தார்கள். குறிப்பாக நமது சமுதாயத்தில் மேல்நாட்டு அறிவைப் பெற்ற ‘படித்த’ வர்க்கத்தினர் உண்மையிலேயே கறுப்பு ஆங்கிலேயர்களாகி விட்டார்கள்.
இப்படிப் ‘படித்த’ மனிதர்கள், ஆங்கிலேயர்களால் சூழ்ச்சிநயம் வாய்ந்த முறையில் பிரசாரம் செய்யப்பட்ட இந்த அபத்தத்தை அதாவது நமது தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் மூலகாரணம் நமது வாழ்க்கை முறைதான் என்ற கருத்தை – மிகச் சுலபமாக எவ்விதக் கஷ்டமுமின்றி நம்பிவிட்டார்கள் என்பதில் வியப்பில்லை. அவர்கள், தமது சொந்தப் பண்பாடு பற்றிய அவமான வெறுப்பும் வெளிநாட்டு வாழ்க்கை லட்சியங்களில் மோக வெறியும் கொண்டு நமது தேசிய வாழ்க்கையைப் புனர் நிர்மாணம் செய்யத் துவங்கினார்கள்.
பிரிட்டிஷாரும்கூட நம் நாட்டில் இந்தக் கீழ்த்தரமான தலைமை வர்க்கத்தைப் போற்றி வளர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டு சாமர்த்தியமாக முயற்சித்து வந்தனர். வெளிநாட்டு ஆட்சியாளர்கள், அடிமைப்பட்ட நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பை உண்மையான ராஷ்ட்ர பக்த சக்திகளை ஒடுக்குவதற்கும், விட்டுக் கொடுத்து இணங்குகின்ற சக்திகளை ஊட்டி வளர்ப்பதற்கும் முயன்று அதே கொள்கையுடன் வேலை செய்கிறார்கள்.