
— ஸ்வேதா மகேந்திரா
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
‘ அறிவும் நோக்கமும் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ – Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் . அறிவை கணிணியும் நோக்கத்தை மனிதர்களும் தீர்மானிப்பார்கள் . ‘ இது பிரதமர் நரேந்திர மோடி தொழில் நுட்பம் குறித்து கூறியுள்ள தொலைநோக்கு பார்வை. இது காந்திய மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை (ஏ ஐ) பயன்படுத்தி எதிர்காலத்தை நாம் வடிவமைக்கும் போது நாம் உருவாக்கும் இயந்திரங்கள் எவ்வளவு அறிவு உள்ளதாக இருக்கிறது என்பது மட்டுமே அதன் சிறப்பை கூறாது. மாறாக எந்த அளவுக்கு அது தார்மீக ரீதியில் செயல்படுகிறது என்பதுதான் அதன் சிறப்பைச் சொல்லும்.
‘ மனிதனைப் போன்ற ‘ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ ஐ) என்று நாம் பேசும்போது மனிதன் இயல்பாகவே நன்நெறிகளை கொண்டவனாகவும் மென்மையானவனாகவும் நியாயமானவனாகவும் இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இந்த பார்வை முழுமையானது அல்ல. மானுடம் என்பது நல்லதும் கெட்டதும், கருணையும் குரூரமும், தர்க்க அறிவும் உணர்ச்சி உந்துதலும் என இரண்டும் கலந்தது. மனிதனை பிரதி/ போலி செய்வதாக (ஏ ஐ )வடிவமைப்பது என்றால் அவனிடம் உள்ள நல்லவற்றையும் குறைகளையும் சேர்த்தே உருவாக்கும் ஆபத்து உள்ளது.
இதற்கு மாறாக , தெய்வீக ஆணையின்படி உருவான , இயற்கையில் இரண்டுக்கும் இடையே சமநிலை உள்ளது. அது நடுநிலையாக, பக்க சார்பு அற்று, முறையான தர்க்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அந்த சமநிலை தடுமாறும் போது, அது இயற்கையால் ஏற்படுவது அல்ல மனிதனின் குறுக்கீட்டினால் உருவாவது , பேரழிவு ஏற்படுகிறது. ஏ ஐ வளர்ந்து வரும்போது இயற்கை அதை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இயற்கை அந்த சவாலை எப்படி எதிர்கொள்ளும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. அது மட்டும் அல்ல அது மர்மமானதும் கூட.
எனவே , மனித நடத்தையை போலி செய்வதாக நாம் ஏ ஐ வடிவமைக்க கூடாது. அதை சீரிய அறிவுடனும் மானுட விழுமியங்களில் சிறந்தவற்றை பிரதிபலிப்பதாகவும் கவனத்துடன் வடிவமைக்க வேண்டும். அறிவு இந்த சமன்பாட்டில் ஒரு பகுதிதான். நோக்கம் தான் அதற்கு உரிய அர்த்தத்தை அளிப்பது. மனித நன்னெறிகள் தான் குறிக்கோளை தீர்மானிக்க வேண்டும்.
ஏ ஐ – யில் இப்போது மொழியியல் நுண்ணறிவு மாதிரிகளும் ( Large Language Models – எல் எல் எம் ) தர்க்க – கணித நுண்ணறிவு மாதிரிகளும் ( Large Reasoning Models – எல் ஆர் எம் ) வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் சூழல் நிலவுகிறது. எல் எல் எம் – பேசுதல், எழுதுதல், படித்தல் விஷயத்தை செறிவாகவும் கச்சிதமாகவும் வடிவமைப்பதிலும் , எல் ஆர் எம் – வடிவங்கள், உறவுகள், தொடர்புகள், தர்க்க ரீதியாக சிக்கலை தீர்ப்பது – பண்பாட்டு அறிவுடனும் பொதுவான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு சிக்கலான முடிவெடுப்பதில் சிறந்து வருகின்றன. எல் எல் எம் இயந்திரத்தின் திறனையும் எல் ஆர் எம் வழிமுறைகளின் பின்னணியையும் தீர்மானிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாகிய நன்னெறிகளுடன் பொறுப்பு கூறும் மாதிரிகளை ( Ethical Responsibility Models – இ ஆர் எம்) பன்முக தன்மையும் தார்மீகமும் உடைய நம்முடைய பண்பாட்டின் அடிப்படையில் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
டெல்பி அறநெறி தொகுப்பில் உள்ள மிலேட்டசை சேர்ந்த தேல்சின் (கிரேக்க தத்துவவாதி) ‘ எல்லாவற்றிலும் அளவோடிருத்தல் ‘ என்ற தத்துவத்தையே இது எதிரொலிக்கிறது. ஏ ஐ யைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பத்தை அதிகமாகவோ குறைவாகவோ பயன்படுத்தாமல் அளவாக, கட்டுப்பாடோடு பயன்படுத்துவதை குறிக்கிறது. ஏ ஐ ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதிக்கம் செய்யவோ அல்லது வாய்ப்பை தவற விட்டதாகவோ இருக்கக் கூடாது என்பதே அளவோடு இருத்தல் என்பதன் பொருளாகும்.
இதோடு தொடர்புடையது இன்னொரு டெல்பி கூற்று. ‘சபதம் எடுங்கள் ;அழிவு நெருங்கிவிட்டது ‘ என்பதே அது . (எதையும் வலுவான சொற்களிலும் நம்பிக்கையுடனும் உறுதிப்படுத்துபவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்று இதற்கு பொருள். இது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றாக பொதுவாக கருதப்படுகிறது) இந்த கூற்று அவநம்பிக்கைக்கு பதிலாக எச்சரிக்கை அளிப்பதாகவே கருத வேண்டும். ‘ செயல்படு , ஆனால் நெடுநோக்குடன் செயல்படு. உயரமாக எழும்பு ஆனால் அடித்தளத்தை உறுதிப்படுத்து. உறுதிமொழி/ சபதம் கூறு, ஆனால் விழிப்போடு கூறு ‘ என்று இது நமக்கு அறிவுறுத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைகளும் நிதி ஆயோக்கின் திட்டமிடலும் மேற்கண்ட பண்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் தான் ஏஐ தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் செயல்பாடுகள் உள்ளன. இது ஆழ்ந்த சிந்தனையையும் தார்மீகத்தையும் இந்திய கலாச்சார பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டது. ஏ ஐ தொழில்நுட்பம் பொருளாதரத்தை , சமுதாயங்களை, மக்களை மாற்றி அமைக்கின்ற வேளையில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட கருத்து சிறந்த வழிகாட்டியாக உள்ளது. ‘ செயற்கை நுண்ணறிவை அதன் தொழில்நுட்பத் திறனை கொண்டு மட்டுமே மதிப்பிடக் கூடாது. மாறாக அதன் நன்னெறிகளைக் கொண்டு மதிப்பிட வேண்டும் , ‘ என்று சொல்லியுள்ளார்.
பிரதமர் மோடி ஏ ஐ பயன்பாட்டில் தார்மீகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ ஐ தொழில்நுட்பத்தை பற்றிய இந்தியாவின் செயல் திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாக கொண்டது. வளர்ந்து வரும் ஏ ஐ தொழில்நுட்பம் உலகளாவிய நன்னெறிகளில் நங்கூரமிட்டு இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் உறுதிப்பட கூறியுள்ளார். அவரது பேச்சு வழிகாட்டுவதாக மட்டுமில்லை , தொழில்நுட்பம் மனிதநேயத்தை அழிப்பதாக இல்லாமல் உயர்த்துவதாக , தொழில் நுட்பத்துக்கும் மனித இனத்திற்கும் மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த கண்ணோட்டத்தின் படி ஏ ஐ தொழில்நுட்பம் தொல்லை தருவதாக இல்லாமல் தர்மத்தின் அடிப்படையிலான முன்னேற்றத்தை கொண்டு வருவதாக அமையும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் சத்யாகிஹகம் அல்லது உண்மையின் துடிப்பாக இருக்கிறது . அது வெளிப்படை தன்மையையும் பொறுப்புணர்வையும் வளர்கிறது . தவறான , பொய்யான செய்திகளையும் தரவுகளை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க கூடியதாக தொழில்நுட்ப கட்டமைப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. தார்மீக நெறிகளின் மீது கட்டமைக்கப்படும் ஏ ஐ தொழில்நுட்பம் நவீன கால சத்தியாகிரகம் என்றே கருத வேண்டும்.
சுதேசி கொள்கை -?உள்நாட்டு தயாரிப்பு – என்ற மோடியின் செயல்திட்டம் ‘ ஏ ஐ தொழில்நுட்பத்தை இந்தியாவுக்காக , இந்தியாவிலேயே தயாரிப்போம் ‘ என்பதாக உள்ளது. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜி பி யூ – கிராபிக் செயலாக்க அலகுகள் , உள்நாட்டிலேயே தயாரான அடிப்படை கட்டமைப்பு, தரவுகளின் தேசிய தளம் ஆகியவை எண்ம தற்சார்பை உறுதி செய்வதாக இருக்கிறன. ஆத்ம நிர்பார் என்பது உற்பத்தி துறையில் மட்டுமாக சுருங்கி விடாமல் எண்ம கட்டமைப்பிலும் இறையாண்மையை விரிவாக்குவதாக உள்ளது. ஏ ஐ தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகளும் சீனாவும் ஆதிக்கம் செய்து வந்த நிலையில் தொழில்நுட்ப அடிமைத்தனத்திற்கு புதிய இந்தியாவில் இடமில்லை என்ற தெளிவான செய்தியை உலகுக்குச் சொல்லி உள்ளது.
‘ அனைவருக்குமான ஏ ஐ தொழில்நுட்பம் ‘ என்ற மோடியின் கூற்று வெறும் கோஷமல்ல. அறிவை ஜனநாயக படுத்துவதற்கான உறுதிமொழி. கிராமப்புற மக்களும் சிறப்பான மருத்துவ கவனிப்பை தரும் இ – சஞ்சீவினி , தரவுகளின் அடிப்படையில் செயல்பட விவசாயிகளுக்கு உதவிடும் அக்ரி ஸ்டாக் , பன்மொழிகளை கொண்ட இந்தியாவில் மொழிகளால் பிரிவினை ஏற்படாமல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாஷிணி போன்றவை அந்த உறுதி மொழியின் வெளிப்பாடுகள்.
கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று காந்திஜி வழி மொழிந்தது வெறும் பேச்சாக இல்லாமல் அரசின் திட்டங்களாலும் இணைய தொடர்புகளாலும் நடைமுறையில் சாத்தியமாகியுள்ளது . சர்வோதய கொள்கை என்பது கற்பனையல்ல நிதர்சனத்தில் சாத்தியம் என்பதை காட்டியுள்ளது எண்ம பொதுப் பயன்பாடு. ஜன்தன் (வங்கி கணக்கு) முதல் ஆயுஸ்மான் பாரத் வரை, நேரடி பலன் பரிமாற்றம் முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் வரை என ஏ ஐ தொழில்நுட்பத்தை நவீனமாகவும் நன்னெறிகளுடனும் பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா செயலில் காட்டியுள்ளது.
‘ ஏ ஐ தொழில்நுட்பம் செல்வமும் செல்வாக்கும் கொண்டவர்களுக்கு மட்டுமே என்பதாக இல்லாமல் ஒவ்வொரு இந்தியனின் குரலாக , இந்திய மொழிகளிலேயே ஓங்கி ஒலிக்க வேண்டும் ‘ என்று மோடி மிகச் சரியாகச் சொன்னார் . அவர் சொன்னபடியே ஏ ஐ தொழில்நுட்பம் அளவில் பெரியதாக இருப்பது மட்டுமல்ல பயனுள்ளதாகவும் இருக்கிறது.
காந்தியின் அபரிக்ரஹா (பேராசையின்மை) மற்றும் எளிமையை டிஜிட்டல் இந்தியா திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அரசின் ஏ ஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டுக்கு உகந்தவை யாகவும் ,எளிமையாகவும், குறைந்த வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையில் கூட செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதாரை அடிப்படையாகக் கொண்டு சேவைகள், ஒரு சொடுக்கில் பல சேவைகள் என்பது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலருக்கும் நன்மை செய்வதாக உள்ளன.
இந்தியாவின் ஏ ஐ தொழில்நுட்ப வளர்ச்சி திட்டங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் மட்டுமல்ல அவருடைய நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய புள்ளியல் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் அந்த திட்டங்கள் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமன்றி அதற்கு அப்பாலும் செல்கின்றன. தார்மீகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது , கணிணி நிரல் உருவாக்குபவர்களை மாற்றத்திற்கு வித்திடுபவர்களாக கருதி ஊக்குவிப்பது ஆகியவை அதில் அடங்கும். ஏ ஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் திட்டங்களும் கருவிகளும் காந்தியின் தவமான தீவிர சுய கட்டுப்பாடு மற்றும் மற்றவர்களுக்காக தன்னை ஒருக்கிக் கொள்ளுதலின் வடிவங்களாக இன்று உள்ளன.
21 ஆம் நூற்றாண்டில் , காந்தியின் ராட்டை ஒதுங்கி மின்மாற்றி களுக்கும் ஜி பி யூ க்களுக்கு வழிவிட்டு இருக்கலாம். ஆனால் அவரது கொள்கைகள் காலத்தை வென்று நிற்பவை. சுரண்டல் அல்ல நன்னெறி , லாபம் அல்ல சமுதாயம் , பிரம்மாண்டம் அல்ல எளிமை என்ற காந்தியின் ஆன்மீக சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது பிரதமர் நரேந்திர மோடியின் ஏ ஐ வளர்ச்சிக்கான தொலைநோக்கு.
சத்யாகிரக போராட்டத்தின் மூலம் இந்தியா தன் ஆன்மாவை மீட்டதே இருபதாம் நூற்றாண்டு கண்டது. உண்மையின் அடிப்படையில் விழிப்புணர்வுடன் எதிர்காலத்தை வடிவமைத்து வருவதை 21ம் நூற்றாண்டு காண இருக்கிறது. இந்தியாவின் ஏ ஐ எதிர்காலம் வெறும் அறிவை மட்டுமே சார்ந்தது அல்ல . அது நீதியானதும் நியாயமானதும் கூட. அது வெறும் தொழில்நுட்ப தேர்வு மட்டுமல்ல மாறாக பண்பாட்டை முன்னிறுத்துவது.
நன்றி : பிசினஸ் கார்டியன்
கட்டுரையாளர் தொழில்நுட்ப வல்லுநர் , எழுத்தாளர் , கின்னஸ் விருது பெற்றவர்.





