காவிரி வாரியத்துக்காக காலை வாரியவர்கள்..!

cauvery 1

காவிரி விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை தமிழக மக்களிடையே பரப்பி பதட்டத்தை உருவாக்குகின்றன சில கட்சிகளும், அமைப்புகளும்.

மத்திய பாஜக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உறுதியாக செயல்படுத்த முனைந்திருப்பது தெரிந்தும் தெரியாதது போல் நாடகமாடி தமிழகத்தை இந்த விவகாரத்தில் சூதாட்ட களமாக்க துடித்து கொண்டிருக்கின்றன. அரசியல் ஆதாயங்களுக்காக இதற்கு துணை போகின்ற அனைவரும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

உச்சநீதிமன்ற தீர்ப்பு கடந்த 16/02/2018 அன்று வழங்கப்பட்ட பின், சட்ட மற்றும் மத்திய அரசின் பிற துறைகள் சார்ந்த கருத்துக்களை கேட்டறிந்து 05/03/2018 ம் தேதியன்று மத்திய நீர்வளத்துறையின் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ‘காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை’ அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை (SCHEME) அமைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

09/03/2018 அன்று, காவிரி பங்கீடு உள்ள அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர்களின் கூட்டத்தை கூட்டியது மத்திய நீர்வள துறை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் காவிரிமேலாண்மை வாரியம் அல்லது அதேபோன்றதொரு அமைப்பை உருவாக்கும் செயல்முறையை (SCHEME) உருவாக்க வேண்டி அந்த கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, அதன் மூலம் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

தற்போது இருக்கக்கூடிய பக்ரா – பீஸ்- பீஸ் மேலாண்மை வாரியம், ஆணையங்கள் மற்றும் அமைப்புகளின் தொகுப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பக்ரா-பீஸ் மேலாண்மை வாரியத்தை பொறுத்த வரை பக்ரா அணை, பாங் அணை,நங்கல் திட்டம், பியாஸ்-சட்லெஜ் இணைப்பு, போன்றவைகளின் செயல்பாடு, பராமரிப்பு, ஒழுங்குப்பாடு, கட்டுப்பாடு மற்றும் உரிமம் போன்றவைகள் அந்த வாரியத்திடமே உள்ளது.

supreme court of india

நர்மதா கட்டுப்பாடு வாரியத்தை பொறுத்த வரை, அனைத்து அணைகள் மற்றும் சொத்துக்களின் உரிமை, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வசமே உள்ளது. நீர் சேமிப்பு, பகிர்மானம், ஒழுங்காற்று மற்றும் கட்டுப்பாடு போன்றவைகளையே கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா நதி நீர் ஆணையம், கோதாவரி நதி மேலாண்மை வாரியம், துங்கபத்ரா ஆணையம், பேத்வா நதி ஆணையம் போன்றவைகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

காவிரி தீர்ப்பாயம் அதனுடைய அறிவிப்பில் கூறியுள்ளபடி ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அந்த அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பின்பற்றபட வேண்டியதோடு, பணிபுரியும் குழு குறித்து பரிந்துரை செய்துள்ளது. வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ‘அறிவிக்கை’ கொடுக்கும் முன் மேலும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் அந்த குழுவில் சில மாற்றங்களை செய்யலாமா என்பது குறித்து மாநிலங்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

(அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உறுதி. அமைப்பதற்கு முன் அதில் இடம் பெறும் அதிகாரிகள்/ தொழில் நுட்ப வல்லுனர்களின் பட்டியலில் மாற்றம் செய்யலாமா என்பதே நோக்கம்).

cauvery issue upendra pratab singh

தமிழக மாநில தலைமை செயலாளர் அவர்கள், அந்த கூட்டத்தில் காவிரி தீர்ப்பாயம் கொடுத்த அறிக்கையில் உள்ள படி அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள், அதிகாரங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என்பதையும் கால விரயம் செய்யாமல் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி ஒழுங்காற்று குழுவையும் அமைக்க வேண்டும் என்று கோரினார்.

புதுச்சேரி மாநில தலைமை செயலாளரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என்றும் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கேரள மாநில தலைமை செயலாளர், ‘செயல்பாடுகள், அதிகாரங்கள் குறித்து தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளவை பரிந்துரை மட்டுமே’ என்றும், உருவாகிற வாரியத்திற்கு தலைவராக மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் நான்கு மாநில தலைமை செயலாளர்கள் இருக்க வேண்டும்.

இதை தான் காவேரி நதி நீர் ஆணையம் 1998ம் ஆண்டு பின்பற்றியது’ என்றும் குறிப்பிட்டார். இது நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் தொழில் நுட்ப அமைப்பாக இருக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநில தலைமை செயலாளர் தனது பேச்சில், “உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலையும் தரவில்லை” என்றும் ‘இந்த தீர்ப்பானது ஏற்கனவே காவிரி தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பில் மாற்றங்களை செய்திருக்கிறது’ என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவின் வாதத்தின் படி ‘உச்சநீதிமன்றம் கூறியிருக்கிற செயல்திட்டம் (Scheme) அல்லது அமைப்பு என்பது சர்ச்சைகளுக்கு / கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், இந்த அமைப்பானது, காவிரி பங்கிடும் மாநிலங்களுக்கிடையே எப்போது பிரச்சினைகள் ஏற்படுகிறதோ அல்லது ஒரு மாநிலம் அல்லது சில மாநிலங்களின் மீது புகார்கள் எழுகிறதோ அப்போது செயல்பட்டால் போதுமானது’ என்றும் குறிப்பிட்டதோடு, ‘ கர்நாடக அரசின் பார்வையில்,நதி நீர் தாவா சட்டம், சட்ட விதியின் கூறு (7) பிரிவு 6எ ன் படி, மத்திய அரசு வாரியம் அமைப்பதற்கு முன் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

cauvery issue mps anbumani

மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் பேசும் போது, ‘ மத்திய அரசு உருவாக்கும் அமைப்பு எல்லா காலங்களிலும் ஒவ்வொரு மாதமும் பங்கீடு செய்ய வேண்டிய நீர் அளவு, முறையாக செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் ‘வறட்சி காலங்களில் நீர் பகிர்மானம் குறித்து ஒரு செயல் நுட்பத்தை தோற்றுவிக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

மத்திய நீர்வள துறையின் இணை செயலாளர் அவர்கள் பேசிய போது, ‘நதி நீர் தாவா சட்டத்தின் ஒவ்வொரு கூறுகளையும் விளக்கி சொல்லி, உருவாக்கப்படும் செயல்திட்டத்தின் செயல்பாடுகள், நோக்கம், அமைப்பு, அதிகாரம், சட்ட வரை முறைகள் ஆகியவற்றை உருவாக்கப்படும் அமைப்பு குறிப்பிட வேண்டும்’ என்பதோடு, சட்ட ரீதியாக உருவாக்கப்படும் செயல்திட்டமானது (SCHEME), நதிநீர் பங்கீட்டில் சிக்கல்கள் உருவானால் அவைகளை இயல்பான, நிரந்தர தீர்வு கொடுக்கும்’ என்று குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் செயல்திட்டத்தை உருவாக்கப்படும் அமைப்பின் தலைமையகம் நான்கு மாநிலங்களின் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைநகரத்தில் அமைக்கப்படலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் படி அமைப்பை உருவாக்க, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து விவரங்களுக்கான நிலைப்பாடுகள் மற்றும் பார்வைகளை எழுத்து பூர்வமாக கூடிய விரைவில் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

இது குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளர் பல்வேறு ஊடக சந்திப்புகளில் தெளிவாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மாநிலங்களுடைய எழுத்து பூர்வமான ஒத்துழைப்புக்கு காத்திருந்தது மத்திய அரசு.

புதுவை யூனியன் பிரதேசம் 08/03/2018 தேதியிட்ட கடிதத்தை கூட்டம் நடந்த 09/03/2018 அன்றே உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் கொடுத்து விட்டது.

தமிழகம் 13/03/2018 அன்று எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்தது.எந்த விதமான எதிர்ப்புகளையும் தெரிவிக்காத போதும், அணைகளின் உரிமைகள், பராமரிப்பு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

கர்நாடக மாநிலம் 19/03/2018 அன்று எழுத்துபூர்வமாக கொடுத்த பதிலில் மத்திய அரசு குறிப்பிடும் காவேரி மேலாண்மை வாரியம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் சொல்லி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லி 09/03/2018 அன்று கூட்டத்தில் குறிப்பிட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், 23/03/2018 அன்று இணை செயலாளரிடம் நேரடியாக கொடுத்த கடிதத்தில்,மத்திய அரசு அமைக்கவிருக்கும் ‘மேலாண்மை வாரியமானது’ ஒவ்வொரு மாநிலத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் நீர் அளவு சரியாக சென்று சேர்கிறதா என்பதை மட்டுமே இந்த வாரியம் கண்காணிக்க வேண்டும் என்றும் அதற்கு மேல் அதிகாரம் அந்த வாரியத்திற்கு இல்லை என்ற பொருள்பட தெரிவித்தது.

காலம் தாழ்த்தி கேரள அரசு 23/03/18 அன்று கொடுத்த பின் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின், அனைத்து எழுத்துபூர்வமான பதில்களையும் ஆய்வு செய்த பின் மேலும் இரு நாட்கள் விடுமுறைக்கு பின் மத்திய அரசு, மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில்,”உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதில், பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை மாநில அரசுகள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டால், மீண்டும் அந்த அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. கர்நாடகா மற்றும் கேரள அரசுகள், 1956 நதி நீர் தாவா சட்ட பிரிவு 6A ன் படி,வாரியம் அமைப்பதற்கு,அறிவிக்கை அளிப்பதற்கு முன் மாநிலங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளன.

மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் அதன் நோக்கம், செயல்பாடுகள் குறித்து மேலும் வழக்குகளை தவிர்க்க உச்சநீதிமன்றத்திடம் இது குறித்து விளக்கம் கேட்பது அவசியமானது என்று கருதுகிறோம்” என்று குறிப்பிட்டு, ‘தேர்தல் ஆணையமானது கடந்த 27/03/2018 அன்று கர்நாடக மாநில தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

Cauvery issue CM joins ADMK hunger strike

காவேரி விவகாரம் உணர்ச்சிகரமானது என்ற அடிப்படையிலும், கடந்த காலங்களில் இந்த விவகாரமானது பல்வேறு சட்ட ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி . பொது சொத்துக்கள் இழப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்ற உத்தரவின் படி செயல்திட்டத்தை உருவாகும் பட்சத்தில், தேர்தல் செயல்பாடுகளை பாதிக்கும் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறோம்’ என்று சொல்லி,

“மத்திய அரசு, காவேரி தீர்ப்பாயம் சொல்லியுள்ள படி சட்ட பிரிவு 6 ஏ வின் படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கலாமா அல்லது கேரளா மற்றும் கர்நாடக அரசு வலியுறுத்தும் சில மாறுபாடுகளோடு அமைக்கலாமா என்பதை தெளிவுபடுத்தவும்” என்றும்,

மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கும் நிலையில், காவிரி தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது போல் பணிபுரியும் குழுவில், தொழில் நுட்ப குழு மட்டும் என்றில்லாமல், இந்த விவகாரத்தின் நிலைமைக்கேற்ப, வாரியத்தின் செயல்பாடுகள் மேலும் சிறக்க நிர்வாக மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களை நியமிப்பது குறித்த சில மாற்றங்களை செய்து கொள்ளலாமா? என்பதை தெளிவு படுத்தவும் என்றும்,

1956 நதிநீர் தாவா சட்டத்தின் படி உருவாக்கப்படும் வாரியம், காவேரி தீர்ப்பாயத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் மாறுபடலாமா என்பதை தெளிவுபடுத்தவும் என்றும்,

‘மேலும் நதி நீர் தாவா சட்டம் 1956ன் படி, செயல்திட்டங்களை வகுக்க மாநிலங்களின் மாறுபட்ட கருத்துக்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஏதேனும் வழிகாட்டுதல்களை சொன்னால் ஏற்று கொள்கிறோம்’ என்றும் குறிப்பிட்டு,

தீர்ப்பு சொன்ன நாளான 16/02/2018 (அதாவது 16/05/2018 வரை) நாளிலிருந்து எங்களுக்கு தங்களின் உத்தரவை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டு,

இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு ஏற்று கொள்ளும் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

cauvery1

துரோகம் செய்து கொண்டிருப்பது யார்?

1. இந்த சூழ்நிலையில், தீர்ப்பு வந்த நாளிலிருந்தே தி மு க, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் அனைத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது அல்லது மறுக்கிறது என்ற பொய்யை சொல்லிக்கொண்டிருந்தது. மேலும், கர்நாடக மற்றும் கேரள அரசுகளின் ஆட்சேபணைகளை, முரண்பட்ட கருத்துக்களை பதிவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவைகள் செயல்படுவதை எடுத்துக்காட்டி, மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நிலையில், மேலும் வழக்குகளுக்கு மேல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அதனால் காலதாமதம் ஏற்படாமல் இருப்பதற்காக தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்திடமே விளக்கத்தை அளிக்க சொல்லி கேட்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால், தி மு க வின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களும், இதர கட்சிகளும் செயல்திட்டம் (SCHEME) என்றால் என்ன என்று விளக்கம் கேட்டதாக வதந்தியை பரப்பி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிறப்பாக செயல்படக்கூடிய, அதிகாரங்கள் நிறைந்த, நிரந்தரமாக காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு, கடந்த 11 வருடங்களாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் சதி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் தி மு க, தற்போது அந்த நடவடிக்கையை தொடர்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கே உரிமை என்று உத்தரவு உள்ள நிலையில், மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள், மாநில அரசுகளை அழைத்து ஆலோசனை கேட்பது தாமதப்படுத்துவதற்கே என்று குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தத்தக்கது. மத்திய அரசு மிக தெளிவாக காவேரி மேலாண்மை ஆணையம் அல்லது அது போன்ற ஒரு அமைப்பை உருவாக்க முடிவெடுத்துள்ள நிலையில், காவேரி தீர்ப்பாயத்தின் உத்தரவில் உட்கூறு -XX ல் குறிப்பிட்டுள்ளது படி காவேரி மேலாண்மை வாரியம் அல்லது அந்த அமைப்பின் செயல்பாடுகள் மேம்புற, மாநிலங்கள் தங்களின் பங்களிப்பை, ஆலோசனைகளை தருமாறு கேட்டுக்கொள்ள கூட்டத்தை கூட்டியது பாராட்டப்பட வேண்டியதே. மாறாக சட்ட ரீதியாக அதை தவறு என்று திசை திருப்பி தமிழகத்தை போராட்ட களமாக்கி குளிர் காய நினைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தமிழின விரோத செயலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்வார்கள்.

3. மத்திய அரசின் பொறுப்பில் பாஜக இருப்பதால் தான் பாஜகவை விமர்சிக்கிறோம் என்று சொல்பவர்கள், கர்நாடக அரசின் பொறுப்பில் காங்கிரஸ் கட்சியும், அவசியமே இல்லாமல் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேரளாவில் பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசையும் விமர்சிப்பதற்கு மறந்து போனது தற்செயலா அல்லது இது தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி மு க கட்சிகளின் சதியின் துவக்கமா? இந்த கட்சிகளின் நோக்கம் பாஜக எதிர்ப்பு மட்டுமே, மக்களின் நலன் அல்ல என்பதை இவர்கள் அரசுகளின் இரட்டை நிலை தெளிவுபடுத்துகிறது. காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது என்று தமிழகத்தில் அரசியல் அநாகரீகம் செய்யும் தி மு க – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முயற்சிக்கிறது என்று கர்நாடகத்தில் அரசியல் அராஜகத்தை அரங்கேற்றுவதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

4. காவேரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை அரசு இதழில் வெளியிட 6 வருடங்கள் எடுத்து கொண்ட தி மு க, காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றம் 2013ல் 90 நாட்களில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டதை மீறி உச்சநீதிமன்றத்தில் அமைக்க முடியாது என்று மனு செய்ததை மறந்து விட்டு, மறைத்து விட்டு, தற்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைந்து விட்டால் தங்களின் அரசியல் சூழ்ச்சிகளை அரங்கேற்ற முடியாது போய் விடும் என்ற உள்நோக்கத்தோடு, அரசியல் செய்வது எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற அநாகரீக அரசியலையே வெளிப்படுத்துகிறது.

5. தமிழக அரசை பொறுத்த வரையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருப்பது சட்டரீதியாக சரியா இருந்தாலும், நடந்த உண்மைகளை மக்கள் மத்தியில் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். அதே போல் தி மு க , காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்ட வடிவத்தை கண்டுகொள்ளாமல், எதிர்கொள்ள முடியாததோடு, சில பிரிவினைவாத சக்திகளோடு அவை இணைந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான, தேசத்திற்கு எதிரான மிக பெரிய சதி திட்டத்தை அடக்க முடியாமல் போனது அரசின் நிர்வாக முடக்கத்தையே பிரதிபலிக்கிறது.

6. 2009ல் இலங்கை போரின் போது, பொது மக்களை நம்ப வைத்து தமிழர்களின் கழுத்தை அறுத்த தி மு க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், 2018ல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று பொது மக்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்க செய்யும் முயற்சியை மத்திய பாஜக அரசு முறியடிக்கும்.

இந்நிலையில், சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக, நிரந்தரமாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட பாஜக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை காங்கிரஸ், தி மு க , கம்யூனிஸ்ட் மற்றும் சில பிரிவினை சக்திகளே தடையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இந்த அமைப்புகள் செய்து கொண்டிருக்கும் துரோகங்களை மக்கள் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இந்த தடைகளை பாஜக தகர்த்து அனைத்து மாநிலங்களும் பயன் பெறும் வகையில் மேலாண்மை வாரியத்தை அமைத்து நீதியை நிலை நாட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கட்டுரை: நாராயணன் திருப்பதி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.