ஊமை ஜனங்கள் – ஆர். நடராஜன்
இன்னமுமா தமிழ்நாட்டில் அஇஅதிமுக ஆட்சி தொடர்கிறது? சட்டமன்றத்தில் கட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதே ஆட்சி தொடர்வதற்கான “டெக்னிக்கல்” காரணம். நல்ல நிர்வாகம் இல்லை.
மந்திரிகள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. புகார்களுக்கு உட்படாத மற்றவர்களும் யோக்கியர்கள் என்று சொல்லி விட முடியாது. அப்படியும் இந்த ஆட்சி தொடர்கிறதே, கலைக்கப்படவில்லையே என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். கவர்னர் நேரடியாகக் கண்காணிக்கிறார், டெல்லி விரைகிறார் போன்ற தகவல்கள் வம்பின் அவல்களே, அவை நிலைமையை மாற்றி விடவில்லை.
ஆராய்ந்து பார்த்தால் பல வருடங்களாகத் தமிழ்நாட்டில் லஞ்சம்தான் நிர்வாகத்தின் ரத்தஓட்டமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு முந்தைய ஆட்சிக்காலங்களிலும் லஞ்சம் இருந்திருக்கிறது. ஆனால் லஞ்சத்துடன் நிர்வாகமும் இருந்தது. இப்போது நிர்வாகம் காணாமல் போய் விட்டது. ஜெயலலிதா காலத்தில் நடந்ததுதான் இப்போதும் தொடர்கிறது. அப்போது அச்சமும் லஞ்சமும் இருந்தது. இப்போது அச்சம் போய் விட்டது.
அப்படியானால் ஜெயலலிதாவுக்கு முன்பு ஆட்சியில் இருந்த எம்ஜியார் நேர்மையாக இருந்தாரா என்கிற கேள்வியும் எழுகிறது. வாசல்புறத்தில் விருந்து மண்டபம் மக்கள் கண்களில் பட்டது. கொல்லைப்புறத்தின் கள்ளப்பணம் நெருக்கமான சில அரசியல்வாதிகளுக்கும், வெகுசில அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அது அரிதாரம் பூசிக்கொண்ட லஞ்சம்.
சரி, அவருக்கு முன்பிருந்த கருணாநிதியின் ஊழல்கள் “விஞ்ஞான வகை” என்று நீதிபதி சர்காரியா சொல்லி விட்டார். பரவாயில்லை என்று சொல்லி விட்டார் இந்திராகாந்தி. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்பட்டன. அவர்களுக்கு தம்பட்டம் அடிக்கத் தெரியவில்லை.
இதையெல்லாம் செய்வது கடமை, அதுதான் நிர்வாகம் என்று நினைத்துப் பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபட்டார்கள் அப்போதைய காங்கிரஸ்காரர்கள். அப்போது ஊழல் புகார்கள் எழவில்லை. அவர்களிடம் இல்லாத பேச்சுத்திறமை திமுகவிடம் இருந்தது. இனம், மொழி பற்றி சொல் தோரணம் கட்டியே அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.
அந்தக் காலக் கட்டத்திலும் காங்கிரசில் அதிருப்தியாளர்கள் இருந்தார்கள். அவர்கள் வெளியேறினார்கள். சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் சேர்ந்தார்கள். திமுகவில் தலைமையுடன் மோதிய சிலர் தனிக்கட்சி ஆரம்பித்தார்கள். விரைவில் காணாமல் போனார்கள். ஆனால் தலைமைக்கு எதிர்ப்பு என்பது காங்கிரஸ் காலத்திலும், அண்ணாதுரை திமுக தலைவராக இருந்த காலத்திலும், கருணாநிதி காலத்திலும் தொடர்ந்தது. அதன்பிறகு தலைமையை எதிர்த்துப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்ட திராவிட கட்சிகளின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் சும்மா இருந்து விட்டார்கள்.
இப்படித்தான் கட்சித்தலைவர்கள் சர்வாதிகாரிகளானார்கள். விலகிச் சென்றவர்களின் தோல்வி பொய்மையான விசுவாசம் மட்டும் போதும் என்ற எண்ணத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்தியது.
ஆக, முதல் கட்டத்தில், அதாவது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திறமைசாலிகள் மௌனசாமிகள், விசுவாசிகள் என்றபடியானவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். மந்திரிசபைகளில் திறமைசாலிகள் இருந்தார்கள். ஆனாலும் அப்போதைய தலைவர்கள் இடையே தம்மை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஒரு மெத்தன உணர்வு இருந்தது.
“காங்கிரசின் பெயரைச் சொல்லி லாந்தர் கம்பத்தை நிறுத்தினாலும் அது ஜெயிக்கும்” என்று ஒரு கட்சிக்காரர் சொன்னதற்கு “இப்போது ஜெயித்ததெல்லாம் வேறு என்னவாம்?” என்று ஒரு எதிர்க்கட்சித்தலைவர் பதிலடி கொடுத்தார். பிற கட்சிகளும் லாந்தர் கம்பங்களையே விரும்பின என்பதே அடுத்தகட்ட வரலாறு.
எம்ஜியார் கட்சி தொடங்கியபோது ரசிகர்கள், தொண்டர்கள் ஆனார்கள். அதனால் விசுவாசம் இயல்பாகவே வந்தது. ஏதோ காரணங்களால் விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். ஜெயலலிதா, அடிமைகளே போதும், அடிமைகளின் விசுவாசத்திற்கு நிகரில்லை என்று தானே எல்லாமும் என்ற அகந்தையில் அடிமைகளையே ஆட்சியில் வைத்திருந்தார்.
அதிகாரிகள் உள்பட. அவர்கள் சிறந்த தரகர்களாகப் பணியாற்றி பாதாள அறைகளையும், கன்டெய்னர்களையும் நிரப்பலானார்கள். ராஜசேவகனை ராஜவாக்கினால் என்ன செய்வான்? அதைத்தான் செய்கிறார்கள் இன்றைய மந்திரிகள். இவர்களிடம் திறமைகளை எதிர்பார்க்க முடியுமோ?
மக்கள் கொதித்தெழுந்து நிலைமையை மாற்ற முடியாதா? முடியாது என்பதை அன்றே சொல்லி விட்டார் மகாகவி பாரதியார். “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி கிளியே, ஊமைச் சனங்களடி”
கருத்துரை: ஆர்.நடராஜன் (பத்திரிகையாளர்)




