1937ல், ஆங்கிலேய அரசு, பாரதத்திற்கு ஒரு புது அரசியல் சட்டத்தை அறிமுகப் படுத்தியது. அதன்படி, பம்பாய் மாகாணம் என்று அறியப்பட்ட பகுதிக்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
அந்த அரசாங்கத்தின், முக்கிய முதல் உத்தரவுகளில் ஒன்று, சாவர்க்கரை எந்த வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வது. சாவர்க்கர் ஆங்கிலேய அரசு கூறுவது போல், தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டவர் அல்ல, ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட சுதந்திரப் போராளி என்று பம்பாய் மாகாண அரசு அறிவித்தது.
விடுதலைக் காற்றை சுவாசித்த படி ரத்தினகிரியிலிருந்து பம்பாய் நோக்கி புறப்பட்டார் சாவர்க்கர். வழி நெடுகிலும், பல ஊர்களில் சொற்பொழிவாற்றிக் கொண்டு சென்றார். அவற்றில் சங்கிலியும் ஒன்று. சங்கிலியில் நாதுராம், சாவர்க்கரோடு சேர்ந்து கொண்டு பயணக் குழுவில் ஒருவராகப் பங்கேற்றார்.
வழிநெடுகிலும் அவர் கண்ட மக்கள் எழுச்சியின் விளைவாகத் தன்னுடைய தேசப் பணிகளுக்கான செயல்பாடுகளுக்கு ஏற்ற ஊர் பூனா என்று முடிவு செய்து அங்கே குடி பெயர்ந்தார். அங்கே ஒரு தையல் கடை துவங்கினார்; ஆனால் அங்கேயும் ‘ ஹிந்து சங்கடன் ‘ பணிக்கு அதிக நேரம் கொடுத்தார்.
அரசியல் களத்திற்கு சாவர்க்கர் மீண்டும் வந்து விட்டப்படியால், ’ ஹிந்து சங்கடன் ‘ இயக்கம் மேலும் பலத்துடன்,உத்வேகத்துடன், தெளிவான திசையில் வேகமாக பயணிக்கத் தொடங்கியது.
ஆங்கிலேய அரசு அதிகாரிகள் வில்லன்கள் அல்ல, தேசத்தை துண்டாட எண்ணம் கொண்டு விட்ட முஸ்லீம்களே உண்மையான வில்லன்கள், முஸ்லீம்களின் இந்த பிரிவினைக் கோரிக்கையை இந்திய தேசிய காங்கிரஸின் பலவீனமான தலைவர்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால், அவர்களும் வில்லன்கள் எனும் கருத்தை சாவர்க்கர் முன்னிறுத்தினார்.
சாவர்க்கரின் தலைமையின் கீழ் ‘ ஹிந்து சங்கடன் ‘ அமைப்பு,ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அதன் புது பெயர் ‘ஹிந்து மகாசபா‘.
பாரதத்தை பிளவுப்படாது காத்து, அதன் ஹிந்துத் தன்மையையும் பேண வேண்டும் என்பது அந்த அமைப்பின் முக்கிய கொள்கையாக அறிவிக்கப்பட்டது. இதற்கு வீர் சாவர்க்கர் விளக்கம் அளித்தார்.
‘’ ஹிந்து மகாசபா என்ன எதிர்பார்க்கிறது என்றால், இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும்; எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும், கடமைகளும் சமமாக இருக்க வேண்டும்.
முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, பெரும்பான்மை ஹிந்துக்களிடம் திருடி முஸ்லீம்களுக்கு அதிகச் சலுகைகள் கொடுப்பதை ஏற்க இயலாது; இப்படி முஸ்லீம்களுக்கு சலுகைகள் கொடுக்கும் முயற்சி அவர்கள் உண்மையான குடிமக்களாக இருப்பதற்கு வழி கோலாது‘’ என்றார்.
ஹைதராபாத்தில், ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதைக் கண்டித்து, 1938ல் ஹிந்து மகாசபா அங்கு ஒரு கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு, நாதுராம் கோட்ஸேயிடம் வழங்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட நாதுராம் கோட்ஸே கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர் சிறையை விட்டு வெளியே வந்த போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டிருந்தது.
இந்தியாவில் அரசியல் களமும் திடுக்கிடச் செய்யும் மாற்றங்களை எதிர்நோக்கத் தொடங்கி இருந்தது.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்




