1946 ஆம் வருடம், மாகாணங்களுக்கும், தில்லியில் இடைக்கால அரசாங்கத் திற்குமான தேர்தல்கள் நடை பெற்றன.
இடைக்கால அரசின் பணி, இந்தியாவிற்கான சுதந்திரமான அரசியல் நிர்ணயச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி செய்வதின் மூலம், பிரிட்டன், ஒரு கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்காமல்,அதிகாரத்திலிருந்த ஒரு அரசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக அமையும் என்பதால் ஆகும்.
புதிய அரசியல் நிர்ணயச் சட்டம் உருவாகும் வரை,வைஸ்ராய் தலைமையில் ஒரு இடைக்கால அரசு நடைபெறுமென பிரிட்டன் அறிவித்தது.
பம்பாய் மாகாணத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. அரசுக் கட்டிலில் அமர்ந்தவுடனவேயே,காங்கிரஸின் பார்வை ‘ அக்ரனி ‘ தினசரி பக்கம் திரும்பியது.
சாவர்க்கரின் ஆசிப் பெற்ற பத்திரிகை,மற்றும் ஹிந்துக்களுக்கு ஆதரவானச் செய்திகளை வெளியிட்டு வந்த பத்திரிகை எனும் காரணத்தால், பம்பாய் மாகாண காங்கிரஸ் அரசு ஒரே ஒரு ஆணைப் போட்டு பத்திரிகைக்கான அனைத்து அரசு விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்தியது
அதற்கு காங்கிரஸ் அரசு கூறிய காரணம்.. ‘ அக்ரனி ‘ பத்திரிகைச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறது ’.
ஜூன் 26,1946 ஆம் வருடம்,கோட்ஸே,சாவர்க்கரிடம் பத்திரிகைக்கு விளம்பரங்கள் நிறுத்தப்பட்ட விவரத்தையும், ‘ அக்ரனி ‘ க்கு போட்டியாக நடைபெற்று வந்த ‘ லோக் சக்தி ‘ எனும் பூனா நாளிதழுக்கு அந்த விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு விட்ட விவரத்தையும் தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களை விட, மோசமான சகிப்பற்ற தன்மையோடு இந்திய மந்திரிகள் செயல்படுவதை ஆப்தேயும், கோட்ஸேயும் உணர்ந்தனர். ‘அக்ரனி‘ க்கு எதிரான செயல்பாட்டிற்கு அரசுக் கட்டிலிலிருந்த காங்கிரஸின் பொறாமைதான் காரணமென ஆப்தேயும், கோட்ஸேயும் முழுமையாக நம்பினர்.
ஆனாலும் கூட, ‘அக்ரினி‘யும் கூட அதன் பங்கிற்கு, பத்திரிகைச் சட்டத்தை மீறி, மதக் கலவரங்கள் தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஹிந்துக்களின் நலன்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் என்று தங்களை முன்னிறுத்திக் கொண்ட பிறகு, பாரதத் தேசமெங்கும், ஹிந்துக்கள் மீது முஸ்லீம்கள் கட்டவிழ்த்து விட்டிருந்த வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் எப்படி…
அரசாங்கத்தை கண்டிக்காவிட்டால் எப்படி…
தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள ‘ ஹிந்துக்களே எழுந்து நில்லுங்கள், துணிந்து நில்லுங்கள் ‘ எனத் தட்டி எழுப்பாவிட்டால் எப்படி சரியாகும் என்பதே.. ‘ அக்ரனி ‘ யின் வாதமாக இருந்தது.
‘ அக்ரனி ‘ யின் செயல்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்குடன், ’ நன்னடத்தைக்கான காப்புத் தொகையாக 6000 ரூபாயை உடனடியாகக் கட்டும்படி ‘ அக்ரனி ‘ க்கு உத்தரவிடப்பட்டது.
பணத்தை எப்படியோ சமாளித்துக் கட்டி விட்டனர் கோட்ஸேயும் ஆப்தேயும்! அதன் பின் பழையப்படி செய்திகளை வெளியிடத் துவங்கினர்.
காங்கிரஸ் அரசு, காப்புத் தொகையை பறிமுதல் செய்து, பத்திரிகை வெளியீட்டை நிறுத்தும்படியாக உத்தரவிட்டது. இதை எதிர்பார்த்திருந்த கோட்ஸேயும், ஆப்தேயும், ‘அக்ரனி ‘ யை உத்தரவுப்படி நிறுத்தி விட்டு,அடுத்த நாளே ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ என்ற பெயரில் தினசரியை வெளியிடத் துவங்கினர்.
அதே பத்திரிகை, வேறு பெயரில்…
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




