கோபால் கோட்ஸேக்கு அப்போது 27 வயது. மென்மையான குணம்.இதமான பேச்சுக் கொண்டவர். தன்னை முன் நிறுத்திக் கொள்ளாத சுபாவம்.. அமைதியான குடும்பஸ்தன்.
அண்ணன் நாதுராம் கோட்ஸேயின் ஹிந்து உணர்வும், அந்த கொள்கைக்கான அர்ப்பணிப்பும், கோபால் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தது. ஆனால் அவருடைய கவனம் முழுவதும் அன்றாட குடும்ப பிரச்சனைகள், தேவைகளை கவனிப்பதிலேயே இருந்தது.
குடும்பத்தின் நலனைப் பேணுவது, நண்பர்களிடமும் அக்கம்பக்கத்தாரிடம் நல்ல பெயர் எடுப்பது என்பதிலேயே அவர் நாட்டம் இருந்தது. மெட்ரிகுலேஷன் பரிட்சையில் தேர்ச்சி பெற்றவுடன், MILITARY ORDNANCE SERVICEல் அலுவலக குமாஸ்தாவாக பணியில் சேர்ந்தார்.
இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது,வெளி நாட்டில் பணி புரிய ஒப்புக் கொண்டு, 1941ல் ஈரான் மற்றும் ஈராக்கிற்கு சென்ற PAIFORCE எனும் பிரிட்டிஷ் ராணுவ பத்தியுடன் ( MILITARY COLUMN )அனுப்பப்பட்டார்.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு PAIFORCE பணியிலேயே இருந்தார். 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா திரும்பினார். அப்போதிலிருந்து, பூனாவிலிருந்து நான்கு மைல்கள் தொலைவிலிருந்த கிர்கியில் ராணுவ தளவாடங்கள் டிப்போவில் உதவி ஸ்டோர் கீப்பராக பணியமர்த்தப்பட்டார்.
சிறந்த முறையில் பணியாற்றி வந்த அவர்,பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்தார். திருமணமான அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒன்றிற்கு வயது இரண்டு. மற்றொன்றிற்கு வயது நான்கு மாதங்கள்.
கிர்கி பஜார் பகுதியில் இரண்டு ரூம்கள் வாடகைக்கு எடுத்து மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். தன் பெற்றோர்களை காணவும் சில நாட்கள் அவர்களுடன் தங்கியிருக்கவும் மனைவி சிந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூனா சென்றிருந்தார்.
கோபால் சகோதரர் நாதுராமிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். அவருக்கு, நாதுராமும் ஆப்தேயும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதெல்லாம் தெரியும். ஆனாலும் தானும் அதில் பங்கேற்க வேண்டி வரும் என்று கிஞ்சித்தும் எண்ணியதில்லை.
ஆப்தேயையும், நாதுராமையும் பார்க்க திகம்பர் பாட்கே அடிக்கடி ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகை அலுவலகத்திற்கு வருவது உண்டு. ஆனால் அவர் கோபால் கோட்ஸேயை சந்தித்தது இல்லை.
கோபால் கோட்ஸேயிடம் தங்கள் திட்டங்களைப் பற்றி நாதுராமும்,ஆப்தேயும் பேசி வந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
கோபால் கோட்ஸே PAIFORCE ல் பணி புரிந்து வந்த போது அவருக்கு சர்வீஸ் ரிவால்வர் ஒன்று கிடைத்தது. அதை அவர் இந்தியாவிற்கு திரும்பிய போது உடன் கொண்டு வந்திருந்தார்.
சர்வீஸ் ரிவால்வர் என்பது ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்தும் ஒன்று. அதை சாதாரண குடிமக்கள் வாங்கவோ விற்கவோ உரிமையில்லை. அதைத் தவிர ஒரு சாதாரண ரிவால்வரை வைத்துக் கொள்ளவே, லைசென்ஸ் பெற கூட கோபால் கோட்ஸேக்கு சமூக அந்தஸ்தும் இல்லை வசதியும் இல்லை.
கோபால் கோட்ஸே இந்தியா திரும்பியவுடன் அந்த ரிவால்வரை கிராமத்து வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்தார். அவ்வளவு சாதுவானவர் ஒரு ரிவால்வரை கொண்டு வந்தது….. அவருடைய இரு வேறு முகங்களை காட்டுவதாக அமைந்தது.
சகோதரர் நாதுராமும், ஆப்தேயும் பேசுவதைக் கேட்டுக்கேட்டு அவரும் இரத்த தாகம் எடுத்த தீவிரவாதியாகவே மாறிப்போனாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவருடைய அடக்கம் ஒரு முகமூடியோ…. தன்னுடைய உண்மையான, தோற்றத்தைக் காட்ட இத்தனை நாள் காத்திருந்தாரோ….
அந்த ரிவால்வரை, நாதுராமிடமோ, ஆப்தேயிடமோ கொடுக்க மறுத்த கோபால் கோட்ஸே அதை, தான் பயன்படுத்த அனுமதிக்கும்படி கேட்டார். அதாவது கொலையை தான் செய்வதாகக் கூறினார்.
இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறவே இல்லை. அவரை அசைக்கவும் முடிய வில்லை. இப்படியாக சதித்திட்டத்தில் அவரும் அங்கத்தினர் ஆனார். உரிய நேரத்தில் காந்தியை கொல்ல அந்த ரிவால்வரை டெல்லிக்கு கொண்டு வருவதாக கோபால் உறுதி அளித்தார்.
நாதுராம், கோபால் கோட்ஸேயின் செலவிற்காக 250 ரூபாய் கொடுத்தார்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்





