காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 127)

தன்னுடைய .38 ரிவால்வரை , நண்பர் PANDURANG GODBOLE விடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி ஒப்படைத்துவிட்ட திருப்தியிலிருந்த கோபால் கோட்ஸே அடுத்து தன்வசமிருந்த .32 ரிவால்வரை என்ன செய்வது என்று யோசித்தார்.

இந்த .32 ரிவால்வர்,பூனாவில் வசித்துவந்த ஷர்மா என்பவரிடமிருந்து திகம்பர் பாட்கே வாங்கி வந்தது என்பது நினைவிருக்கலாம்.

நாதுராம் கோட்ஸேயின் .22 ரிவால்வருக்கு மாற்றாக வாங்கி வந்தது அது.

ஷர்மாவிடமே .32 ரிவால்வரை கொடுத்துவிட்டு அண்ணனின் .22 ரிவால்வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என கோபால் கோட்ஸே எண்ணினார்.

தன் விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்ப மூன்று நாட்கள் அவகாசமிருந்ததால்,அதற்குள் ரிவால்வரை திரும்பக்கொடுக்கும் வேலையை செய்து கொள்ளலாமென்று எண்ணினார்.

இதற்கிடையே….

கோபால் கோட்ஸேயின் ரெயில் புறப்பட்டுச் சென்றபிறகு ,கார்கரே டெல்லி ரெயில் நிலையத்தின் தேனீர் கடையின் அறையிலேயே அமர்ந்திருந்தார்.

அந்த இடத்தைவிட்டு போலீஸ்படை புறப்பட்டுச் சென்று விட்டதை உறுதிசெய்துக்கொண்டு,

கோபால் கோட்ஸேயும் தானும் தங்கியிருந்த FRONTIER HINDU HOTEL க்கு திரும்பி,ஹோட்டலுக்கு செலுத்தவேண்டிய வாடகைதொகையை செலுத்திவிட்டு ரெயில் நிலையத்தின் WAITING ROOM ற்கு தன்னுடைய லக்கேஜை கொண்டு வந்து வைத்தார்.

பிற்பகலில் ஹிந்து மஹா சபா நண்பர்கள் ஓரிருவரை சந்திக்கச்சென்றார்.

கார்கரே,தன் நண்பரான மதன்லால் பஹ்வாவிற்கு ஏதாவது விதத்தில் உதவவேண்டுமென்று தவித்தார்.

ஒரு நல்ல வழக்கறிஞரை அமர்த்தி,மதன்லால் பஹ்வாவை ஜாமீனில் எடுக்கவேண்டும் அல்லது வழக்கறிஞர் மூலமாக பஹ்வா தன் வழக்கை எவ்வாறு நடத்தவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டுமென்று எண்ணினார்.

ஆனால் அபாயகரமான இந்த விஷயத்தில் உதவ அவரது நண்பர்கள் யாரும் முன்வரவில்லை.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் ( ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் ) பகல் நேரங்களில் டெல்லியின் வீதிகளெங்கும் பித்துப்பிடித்ததுப் போல திரிந்துவிட்டு இரவில் ரெயில் நிலையத்தின் தங்கும் அறைக்கு திரும்பி படுத்துக்கொண்டார் கார்கரே.

எப்படியோ ஒரு வழியாக ,மதன்லால் பஹ்வாவின் உறவினர்களின் உதவியோடு மேத்தா புரண் சந்த் எனும் வழக்கறிஞரை ,மதன்லால் பஹ்வாவிற்காக ஏற்பாடுச் செய்தார்.

நண்பனை கைவிட்டுவிட்டுச் செல்கிறோம் எனும் குற்றவுணர்வோடு,ஜனவரி 23ந் தேதி டெல்லியை விட்டு புறப்பட்டார்.

கதைகளில் ஒரு குற்றவாளியை போலீசார் துரத்திவரும்போது அவர் எப்படியெல்லாம் தப்பிக்க நினைப்பாரோ அதுபோல டெல்லியிலிருந்து ரெயிலிலில் புறப்பட்டவர் மதுரா ரெயில் நிலையத்தில் இறங்கினார்.

அங்கிருந்து ஒரு பஸ்ஸை பிடித்து ஆக்ரா சென்றார்.

அங்கு இன்னொரு ரயிலை பிடித்து இடார்ஸி ஜங்ஷனில் இறங்கினார்.மறுபடியும் கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்கினார்.

இறுதியாக ஜனவரி மாதம் 25ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தானே ரெயில் நிலையம் சென்றடைந்தார்.

காலை 5 மணியளவில்,சாந்தா சாதன் நவ்பாதா குடியிருப்பிலிருந்த ஜோஷியின் வீட்டிற்குச் சென்றார்.

விடியற்காலை நேரமாயிருந்தாலும்,ஜோஷி குடும்பத்தினர் கார்கரேயை வரவேற்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக நாதுராமும்,ஆப்தேயும் அவரை தேடிவந்த விஷயத்தை கார்கரேயிடம் அவர்கள் தெரிவித்தனர்.

தன்னை சந்திக்க நண்பர்கள் வந்தவிஷயம் கார்கரேவிற்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால் அவர்களை எப்படி தொடர்புகொள்வது என்பது அவருக்குத் தெரியவில்லை.

அவர்கள் இன்னும் பம்பாயில்தான் இருக்கிறார்களா அல்லது வேறெங்காவது சென்று விட்டார்களா ?

பூனாவிலிருந்த ஆப்தேயின் வீட்டிற்கு ஒரு தந்தியை அனுப்ப முடிவுச்செய்தார்.

போலீஸ் ஆப்தேயின் வீட்டை கண்காணிப்பதற்கு வாய்ப்பு இருப்பது அவருக்குத்தெரியும்.

ஆகவே தானாவிலிருந்து தந்தியை அனுப்ப விரும்பவில்லை.

ஜோஷியின் 18 வயது மகன் வசந்தை தானாவிலிருந்து 20 மைல் தூரத்திலிருந்த பம்பாய் CENTRAL TELEGRAPH OFFICE ற்கு அனுப்பி தந்தியை அனுப்பச் செய்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எக்ஸ்பிரஸ் தந்தி அனுப்பப்பட்டது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

எழுத்து: யா.சு.கண்ணன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...