17/10/2019 4:11 PM
அரசியல் தமிழகத்தை தாக்க காத்திருக்கும் இரு வன்முறைப் புயல்கள்!

தமிழகத்தை தாக்க காத்திருக்கும் இரு வன்முறைப் புயல்கள்!

உண்மையில், ஓரளவுக்கு ஜனநாயகத்தை கட்டிக்காப்பாற்றும் மிகச்சில நாடுகளில் ஒன்றாக இப்போது இந்தியா இருக்கிறது. இந்த சூழலில், இருக்கும் ஜனநாயகத்தை யாவது காப்பாற்றிக்கொள்ளும் நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது.

-

- Advertisment -
- Advertisement -

திருப்புமுனையில் தமிழ்நாடு: செய்ய வேண்டியது என்ன?

இந்திய விடுதலைக்கு பின்னாலான 70 ஆண்டுகளில் ஒரு திருப்புமுனை கட்டத்தை தமிழ்நாடு அடைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தை மிகவும் எச்சரிக்கையாக அணுக வேண்டிய தேவை தமிழகத்தின் சமூக அமைப்புகளுக்கு உள்ளது. குறிப்பாக, அரசியல் இயக்கங்கள், மத அமைப்புகள், பொதுநல அமைப்புகள் என குடிமைச் சமூகம் இந்த காலக்கட்டத்தை அவதானித்து செயல்பட வேண்டும்.

விடுதலை அடைந்த காலத்தில் – சமூக சீர்திருத்தம் ஒரு நோக்கமாக இருந்தது. பலவிதமான பழமை கருத்துகளில் இருந்து விடுபட்டு, சமூகநீதியையும் சமத்துவத்தையும் நோக்கி தமிழகம் நகர்ந்தது. அதனைத் தொடர்ந்து கல்வி, உடல்நலம், அனைவருக்கும் குறைந்தபட்ச வாழ்க்கை வசதிகள் என தமிழ்நாட்டின் மேம்பாடு நோக்கமாக இருந்தது. இந்த நோக்கங்களில் வெற்றி அடைந்தோமா என்பது சந்தேகம்தான் என்றாலும் கூட, முன்பிருந்த நிலையை விட அடுத்தக் கட்டத்திற்கு தமிழ்நாடு நகர்ந்தது என்பது ஏற்கக் கூடியதே!

உலகின் மேம்பட்ட ஒரு நாட்டுடன் தமிழ்நாட்டை ஒப்பிட முடியாது. ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களை விட – ஒரு நல்ல நிலைக்கு தமிழ்நாடு உயர்ந்தது என்பது உண்மை. இத்தகைய ஒரு சூழலில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து வளங்களையும் அனைத்து உரிமைகளையும் பெற்று செழிப்பாக வாழும் ஒரு முழுமையான மேம்பாட்டை நோக்கிய மாற்றமே இப்போதை இலக்காக இருக்க முடியும்.

குறிப்பாக, அனைத்து மக்களுக்கும் பயங்களில் இருந்து விடுதலை – Freedom from fear (குடியுரிமை, அரசியல் உரிமைகள் – Civil and political rights), தேவைகளில் இருந்து விடுதலை – Freedom from want (சுமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் – Economic, social, and cultural rights) என்கிற இலக்குகளை அடைந்து, ஒரு செழிப்பான எதிர்காலத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்கிற நோக்கம் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது.

இன்றைய ‘திருப்புமுனை’ சிக்கல் என்ன?

ஒருபக்கம், ‘அனைத்து கேடுகளில் இருந்தும் விடுபட்டு, மேம்பட்ட செழிப்பான நிலையை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அடைய வேண்டும்’ என்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ள அதே நேரத்தில் – மறுபக்கம், ‘இப்போது இருப்பதை காப்பாற்றிக்கொள்ளும்’ சூழலும் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. இதுவே மிக முக்கியமான திருப்புமுனை ஆகும்.

அதாவது, கடந்த 70 ஆண்டுகால இந்திய அரசியலில், ‘நாடு ஒருபடி முன்னேற வேண்டும்” என்பதுதான் அரசியல் நோக்கமாக இருந்ததே தவிர, ‘இருக்கும் நிலையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என்கிற சூழல் இருந்தது இல்லை (1975 முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான நெருக்கடி காலம் மட்டுமே விதிவிலக்கு). ஆனால், ‘இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம்’ என்கிற சூழல் இப்போது வந்துள்ளது.

எரியும் நெருப்புக்கு நடுவே இந்தியா!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதுமே ஜனநாயகம் தழைக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், இப்போது உலகம் முழுவதும் ஜனநாயகம் அழிந்து, சர்வாதிகாரம் மேலோங்கி வருகிறது. மனித குலத்தின் மிகமோசமான குணமான “ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை அடக்க வேண்டும்; அழிக்க வேண்டும்” என்கிற கருத்து உலகம் எங்கும் வலிமையாகி வருகிறது.

இந்தியா எரியும் நெருப்புக்கு நடுவே இருக்கிறது. இந்தியாவை சுற்றி இருக்கும் எல்லா நாடுகளும் ஜனநாயகத்தில் இருந்து பெருமளவு விலகிச்சென்றுவிட்டன. இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆபத்தான பகுதிகளாக மாறிவிட்டன. உலகின் வலிமையான நாடுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் சர்வாதிகாரிகளால் ஆளப்படுகின்றன. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய ஐரோப்பிய நாடுகள் வலதுசாரி தீவிரவாதத்திற்கு பலியாகி வருகின்றன. வளைகுடாவும், ஆப்பிரிக்க பகுதிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு போரில் சிக்கி சீரழிந்துள்ளன. ஒருகாலத்தில் ஜனநாயகத்தின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கிழக்காசிய நாடுகள் இன்று சர்வாதிகாரத்தில் வீழ்ந்துள்ளன.

உண்மையில், ஓரளவுக்கு ஜனநாயகத்தை கட்டிக்காப்பாற்றும் மிகச்சில நாடுகளில் ஒன்றாக இப்போது இந்தியா இருக்கிறது. இந்த சூழலில், இருக்கும் ஜனநாயகத்தை யாவது காப்பாற்றிக்கொள்ளும் நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது.

தற்போதைய ஆபத்து என்ன?

தகவல் தொழில்நுட்ப புரட்சி என்பது மனித வாழ்வை மேம்படுத்திய மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதே தகவல் தொழில்நுட்ப புரட்சிதான் உலகை அழிக்கும் பேரவு ஆயுதமாக மாறியுள்ளது. குறிப்பாக, இணைய வசதிகளும் சமூக ஊடகமும் உலகெங்கும் வன்முறை பேரழிவை நிகழ்த்தி வருகின்றன. இந்த போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிக்க முடியாது!

தமிழ்நாட்டில் தற்போது இரண்டு பேராபத்துகள் உருவாகியுள்ளன. ஒன்று வெறுப்பு வன்முறை, இன்னொன்று மத வன்முறை.

1. வெறுப்பு வன்முறை (Hate Crimes): சமூகங்கள், மக்கள் குழுக்கள், சாதிகள், கட்சிகள், மொழிகள், நம்பிக்கைகளுக்கு இடையேயான மோதல், குறிப்பாக வெறுப்பு பேச்சும், அதனை பின் தொடரும் வெறுப்பு வன்முறையும் தமிழ்நாட்டை தாக்கப் போகும் மாபெரும் ஆபத்து ஆகும். இதனை முன்கூட்டியே எதிர்க்கொள்ளாவிட்டால் பேராபத்தில் முடியும்.

  1. மத வன்முறை (Violent Religious Extremism): தமிழ்நாடு பெரிய அளவிலான மத மோதல்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் இளைஞர்களை மத மோதலை நோக்கி தள்ளும் வேலையை (Push Factors) ஒரு குழுவினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னோரு பக்கம், இளைஞர்களை மத மோதலுக்கு உள்ளே இழுக்கும் பணியை (Pull Factors) இன்னொரு குழுவினர் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு, இவை ஒன்றுக்கொன்று எதிரானவை போன்று தெரிந்தாலும் – இரண்டும் ஒரே வன்முறை வண்டியின் இரண்டு குதிரைகள் ஆகும்! இந்த மத வன்முறையை முன்கூட்டியே எதிர்க்கொள்ளாவிட்டால் பேராபத்தில் முடியும்.

எனவே, இந்த சிக்கல்கள் குறித்து, அரசியல் இயக்கங்கள், மத அமைப்புகள், பொதுநல அமைப்புகள் அனைத்தும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கைவிட்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலன் கருதி விவாதிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும்.

கட்டுரை: – இர. அருள்

[email protected]

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: