சினிமா இயக்குனர் ப.ரஞ்சித் மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றி இழிவாக பேசியது ஒரு திட்டமிட்ட நீண்டகால சதியின் வெளிப்பாடே.
இதன் துவக்கம் 1838 ல் கால்டுவெல் என்கிற அன்னிய கிறித்தவ பிஷப் மதமாற்றம் செய்யும் நோக்குடன் திருநெல்வேலியில் 1840ல் ஜி.யு. போப் என்கிற அன்னிய பாதிரியார் மயிலாப்பூரில் வந்திறங்கிய காலம் தொட்டு துவங்கியது.
ஒரு சமுதாயத்தை மதமாற்றம் செய்ய வேண்டுமானால் அச்சமுதாய மக்களிடம் அவர்களின் முன்னோர்கள் பற்றிய தவறான கருத்துக்களை பரப்ப வேண்டும். அச்சமுதாய அடையாளங்களை அழிக்க வேண்டும்.
அந்த நோக்குடன்தான் கால்டுவெல் முதலில் நாடார் சமுதாய மக்கள் இந்தியர்கள் அல்ல இவர்கள் இலங்கையிலிருந்து வந்த வந்தேறிகள் என்று தனது Sanas of Tinnaveli என்கிற புத்தகத்தின் மூலம் ஒர் தவறான கட்டுக்கைதயை அவிழ்த்து விட்டார்.
தேசபக்தி மிக்க நாடார் சமுதாய மக்கள் கிளர்ந்தெழுந்தனர். பின் அந்த புத்தகத்தை வாபஸ் பெற்றார். அதன்பின் ஆரியப் படையெடுப்பு பற்றிய புளுகு முட்டையை அவிழ்த்து விட்டார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆதாரமற்ற ஆரியப் படையெடுப்பு பொய்யுரைக்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என தெளிவாக கூறியுள்ளார்.
அதேபோல் ஜி.யு.போப்பும் திருவள்ளுவர் கிறித்தவர் என்றும். திருக்குறள் கிறித்தவ நூல் என்றும் பொய்பரப்பினார்.
ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியம் இவர்களது பணியினைத் தொடர சரியான உள்ளூர் ஏஜெண்ட் களை தேடிய போது அவர்களுக்கு கிடைத்த சரியான அமைப்புகள்தான் நீதிகட்சி மற்றும் திக ஆகும்.
இவர்கள் மூலம் ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியம் தங்கள் ஆட்சி மற்றும் மதமாற்றம் ஆகிய இரண்டு குறிக்கோள்களையும் நிறைவேற்றி வந்தனர்.
ஈ.வெ.ரா அவர்களும் அவரைத் தொடர்ந்து வீரமணி உள்ளிட்டோரும் மதமாற்றும் சக்திகளுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் பணியை இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர்.
ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். சனியன் தமிழை படிக்காதே பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு வேலைக் காரியோடு ஆங்கிலத்தில் பேசு என்றார்.
சிலப்பதிகாரம் விபச்சாரியின் கதை என்றார். தமிழ் மக்கள் கற்புக்கரசியாகப் போற்றும் கண்ணகியை கொச்சை வார்த்தைகளால் அர்ச்சித்தார். அக்காலகட்டத்தில் ஈ.வெ.ரா வின் இச்செயலை சிலம்புச் செல்வர் மா.பொ.சி அவர்கள் கடுமையாக கண்டித்தார்.
திருக்குறளை தங்கத் தட்டில் உள்ள மலம் என்றார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டி நம் முன்னோர்களின் பொறியியல் மற்றும் கட்டிடக் கலையின் பெருமையை உலகறியச் செய்தவர். நிலம் மற்றும் நீர் மேலாண்மை மூலம் தன் நாட்டை வளம் கொழிக்கச் செய்தார். அவரும் அவருக்குப்பின் ராஜேந்திர சோழன் அவர்களும் தெற்காசிய நாடுகள் முழுவதும் தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர்.
ஆனால் ஈ.வெ.ரா மாமன்னர் ராஜராஜ சோழனை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்தார். சமீபத்தில் கி.வீரமணி அவர்கள் மாமன்னர் முட்டாள் ராஜா என்றும் வெங்காயமென்றும் வசைபாடினார். அன்று வீரமணியை நான் மட்டுமே கண்டித்தேன். அன்றே இன்று ப.ரஞ்சித்தின் பேச்சுக்கு ஏற்பட்டுள்ள ஏதிர்ப்பு ஏற்பட்டிருந்தால் இன்று ரஞ்சித்திற்கு இந்த துணிவு . வந்திருக்காது.
சமீப காலமாக இந்துக்களின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் எல்லை மீறி சென்று கொண்டுள்ளன.
ப. ரஞ்சித்தின் இந்த செயலை தனி சம்பவமாக பார்க்கக்கூடாது. கவிஞர் வைரமுத்து நம் ஆண்டாள் நாச்சியார் பற்றி கூறிய இழி சொற்கள்.
திக வினரின் இந்து விரோத செயல்கள். திருமாவளவன் அவர்கள் திருச்சியில் நடத்திய இந்து சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்ற மாநாடு. அதில் வைகோ ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் அடிப்படை வாதிகள் போன்றவர்கள் கலந்து கொண்டது.
மோகன் சி லாசரஸ் என்கிற கிறித்தவ மதமாற்றும் ஏஜெண்ட் இந்துகோவில்கள் சாத்தான்கள் இருக்கும் இடம் என்று பேசியது.
தற்போது எஸ்.ரா. சற்குணம் என்கிற பாதிரியார் இந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து குத்துங்கள் ரத்தம் வரட்டும். அவன் இந்து இல்லை என்று சொல்லி விடுவான் என்று பேசியுள்ள வன்முறை பேச்சு.
இவை அனைத்தும் இந்து மதத்தை அழிக்கக் கிளம்பியுள்ள ஆக்டோபஸின் ஒவ்வொரு அங்கங்களாகும்.
இவர்கள் அனைவருக்கும் பின்னால் மதமாற்றம் சக்திகளும் நாட்டை துண்டாடத் துடிக்கும் பிரிவினை சக்திகளும் உள்ளன. எச்சரிக்கையாக இருப்பதோடு எதிர்வினையாற்றவும் தயாராவோம்.
- ஹெச்.ராஜா (தேசிய செயலர், பாஜக.,)