
- ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்
இயற்கை அளித்துள்ள கொடைகளில் மிகவும் வியப்பை ஏற்படுத்தும் வளங்களில் ஒன்று கடல். கடல் என்ற சொல்லே உற்சாகமூட்டும் ஒன்றுதான். இன்று ஜூன்-8. உலக பெருங்கடல் நாள்.
பண்டைத் தமிழகத்தின் பெரும் பகுதி எல்லை, கடல் எல்லையாக இருந்தது. பண்டைத் தமிழரின் ஐவகை நிலப்பரப்பில், கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். இந்திய கண்டத்தில் கடல் வணிகம் இருந்ததைப் பற்றி பல்வேறு சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
பூமியானது நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது. மனிதனுக்கு 80 விழுக்காடு ஆக்சிஜனை தருகின்ற கடல்தான் பூமியின் நுரையீரலாய் இருக்கின்றது. மனிதன் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது என்பதே உண்மை.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கடல் வளத்தின் பங்கு மறுக்க முடியாது. பண்டைக் காலத்தில் இருந்தே கடலோரப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே நடக்கும் வர்த்தகமும் மக்களின் போக்குவரத்தும், அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் நாகரீகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கின்றன. இன்றைய காலக்கட்டத்திலும் கடற்கரைப் பகுதிகளை தன்னகத்தே கொண்ட நாடுகளில், கடல் சார்ந்த பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
கடலையும் அலையையும் நினைக்கும் போதே ஏற்படும் ஒரு பரவசத்தினை வார்த்தைகளால் அடக்க முடியாது. கடலில் இருக்கும் சிப்பிக்குள் இருக்கும் முத்துக்களை என் சொல்வது? ” முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா?” – என்றப் பாடலை முணுமுணுக்காதவர்கள் உண்டோ?
பொதுவாக, கடலினுள் சென்று மீன் பிடிக்கச் செல்பவரின் படகின் ஒருப்பக்க கயிறை, அந்த ஆணின் மனைவியின் சகோதரன் தான் பிடித்துக் கொண்டிருப்பான். மைத்துனனின் பிடி அவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாம்.
மனிதனின் ஒவ்வொரு உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக கடலின் தன்மை குறிப்பிடப்படுகிறது. ‘கடல்’ என்ற சொல்லை உவமையாகக் காட்டாத கவிஞர்களும், எழுத்தாளர்களும் மிகவும் குறைவே. மன அமைதியுடன், நிம்மதியாக இருப்போரின் மனநிலையை வெளிப்படுத்த சீரான அலைகளைக் கொண்ட கடலைப் போன்று இருந்த மனம் என்றும், கோபத்தினை கூறும் போது கடலின் சீற்றம் போல் என்றும் எழுதுவது வழக்கமாகவே உள்ளது.
தன்னுடைய வலிமைக்கு ஏற்றதான இடத்தை ஆராந்து செயல்பட, திருவள்ளுவர்,”
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து,” என்கிறார்.
வலியமையான பெரிய சக்கரங்களை உடைய நெடிய தேர்களே ஆனாலும், அவை கடலில் ஓட இயலாதவையே. அதுபோல் கடலில் செலுத்தப்படுகின்ற கப்பல்கள் நிலத்தில் ஓட முடியாது,என்கிறார்.
இன்றைய கொரோனா போன்ற இடையூறு காலத்தில் பிரதிபலன் பார்க்காமல் செய்யும் உதவிகளின் மதிப்பு கடலை விட பெரியதாகும் என்பதனை
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.”
கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், எண்ணெய் எடுத்தல், துறைமுகக் கட்டுமானம், கடலில் பிளாஸ்டிக் முதலிய குப்பைகளைக் கொட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கடல்களின் சீரழிவுக்கு முக்கியக் காரணங்கள்.
கடல்வாழ் விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க மனிதர்கள் உறுதிக் கொள்ள வேண்டிய நேரமிது. கடலைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரமானதும், பூமியின் நுரையீரலான கடல் தாயினை காக்கும் பொறுப்பும் நம்மிடமே உள்ளது.