1656380441550 - 2026

டிச-5இல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி .

பொது தகவல்கள்
1656380441550 - 2026

வரும் டிச  5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்கும்.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிச. 2-ம் தேதி (இன்று) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச. 4-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். டிச. 5-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.