
இந்திய ராணுவக் கண்காட்சியைக் குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள். ராணுவக் கண்காட்சி என்பது நமது பெருமிதம். நமது எதிர்கால சந்ததியின் நம்பிக்கை ஊற்று.
மாமல்லபுரத்தின் அருகில் உள்ள திருவிடந்தையில் ஏப்ரல் 11,12,13,14 ஆகிய நான்கு இந்திய ராணுவக் கண்காட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை இன்று திறந்து வைத்திருக்கிறார்.
ராணுவக் கண்காட்சியில் நவீன ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள், டாங்குகள், ஏவுகணைகள், பல்வேறு போர்விமானங்கள், கனரக ஹெலிக்காப்டர்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்படும். பல தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு அரங்குகளும் இடம் பெற்றிருக்கின்றன.

60 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 700க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. பெருமை மிகு இந்தியத் தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் நமது ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தரைப்படை, விமானப்படை, கப்பற்படை மூன்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
சென்னையில் மீண்டும் இப்படி ஒரு ராணுவக்கண்காட்சி எப்போது நடைபெறுமோ தெரியாது. எனவே இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்.

நமது ராணுவம் என்பது நமது கௌரவம். நமது பெருமிதம். நமது ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மதிப்பு மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும். நமது ராணுவத்துக்குக் கொடுக்கும் மரியாதை நமது தேச பக்தியின் மகோன்னதத்தை வெளிப்படுத்தும். நம் நாட்டின் பாதுகாப்பு, நமது ராணுவத்தின் கைகளில் பத்திரமாக உள்ள வரையே நாம் வளர்ச்சி அடைய முடியும். நிம்மதியாகத் தூங்க முடியும்.
ராணுவக்கண்காட்சியைக் குடும்பத்தோடு சென்று பார்வையிட வேண்டும். உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு 10 வயதுக்கு மேலிருந்தால் கண்டிப்பாக அழைத்துச் சென்று காட்டுங்கள். உணர்வுப்பூர்வமாக ராணுவத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லி, தேசபக்தியை ஊட்டுங்கள்.
– சிதம்பர. ராஜேந்திரன்



