திருச்சி:
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும்வரை பாஜக ஓயாது. இதுகுறித்து கட்சியின் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் ஆலோசித்து வருகிறோம். வரும் 20-ம் தேதி (நாளை) பாஜக தமிழக நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்குச் சென்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரையும், கட்சியின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச உள்ளோம்.
மாணவர்களின் போராட்டம் குறித்து பிரதமர் மோடியும், மத்திய அரசும் மவுனம் காப்பதாகவும், தமிழர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்றும் குற்றம் சாட்டுவது தவறு. இப்போராட்டம் தொடர்பாக டெல்லியில் இருந்து அடிக்கடி தொடர்புகொண்டு விசாரித்துக்கொண்டு உள்ளனர். விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பதை தமிழக பாஜகவும் வலியுறுத்துகிறது.
ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அதில் கையெழுத்து போடக்கூடாது என குடியரசுத் தலைவரிடம் பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் அரசைக் கலைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கூறுகின்றனர். எனவே, பீட்டா அமைப்பின் உள்நோக்கம், நடவடிக்கைகள், பின்னணி போன்றவற்றை ஆராய வேண்டும் என மத்திய அரசுக்கு, நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்




