சென்னை:
ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம் என்று முதல்வர் பன்னீர் செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும் என்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய பின்னர், சென்னை விமான நிலையத்தில் உறுதிபடத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை சந்திக்க தில்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை இன்று மதியம் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும் வகையில் முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள வரைவு அவசரச் சட்டத்துக்கு உள்துறை, சட்டத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் ஒப்புதல் பெறப்பட்டு அவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவர் அலுவல் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொண்டிருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தவுடன் அது ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும்” என்றார்.



