
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு…! காலை 10.30 க்கு..! பரபரப்பில் பாரதம்!
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்!
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், சனிக் கிழமை நாளை காலை 10.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கொண்டாடின. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் நவ.9 சனிக்கிழமை காலை 10.30க்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பு வழங்கப் படுவதை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில், தற்காலிக சிறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உபி.,யில் கொண்டாட்டங்கள், துக்கம் அனுசரித்தல் ஆகியவை தடை செய்யப் பட்டுள்ளன. அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.
