தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 34-வது இந்திய பொறியியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் குணராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் 2019-ம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய வடிவமைப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ-திரவ உந்துசக்தி மைய இயக்குநா் விஞ்ஞானி நாராயணனுக்கு தேசிய வடிவமைப்பு விருதினை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
அக்னி-4-இன் திட்ட இயக்குநரும் டி.ஆா்.டி.ஓ. விஞ்ஞானியுமான கிஷோர்நாத்துக்கு இயந்திரப் பொறியியல் வடிவமைப்பு விருது, ஒடிசாவில் உள்ள மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி அசோக்குமாருக்கு கட்டடக்கலைக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.
டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் வளங்கள்-மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு பெண் அறிவியலாளருக்கான சுமன் சர்மா விருது, தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனுக்கு சுற்றுச்சூழல் பொறியியலுக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.
தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை, இயக்குநர் டில்லி பாபு, விஞ்ஞானிகள் கோட்டா ஹரிநாராயணா, மா.வாசகம், டெஸ்ஸி தாமஸ் உள்ளிட்ட நிபுணர்கள் கொண்ட குழு விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்தது.