ஜம்மு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் அமைந்துள்ள அர்னியா பகுதியில் பாகிஸ்தான் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டது. அத்துமீறல் தொடர்வதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் இந்திய எல்லையான அர்னியா பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இருப்பினும் வழக்கம்போல், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியது. இதற்காக, இந்திய தூதரை நேரில் அழைத்து, பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது.



