அனுமதி இன்றி பாகிஸ்தான் சென்ற இந்திய அணி! உலக கோப்பை போட்டி!

இந்தியா விளையாட்டு
world cup - 2026

கபடி உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பாகிஸ்தான் சென்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை கபடி போட்டியை முதன்முதலாக பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த ஆட்டம் இன்று (திங்கள்கிழமை) லாகூரில் உள்ள பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, ஃபைசலாபாத் மற்றும் குஜ்ராத்திலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் செல்வது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில்,

“சர்வதேச போட்டிகளில் நாட்டின் சார்பாக பங்கேற்கும்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி அவசியம். ஆனால், இரண்டு அமைச்சகங்களும் எந்தவொரு அணிக்கும் அனுமதி வழங்கவில்லை” என்றனர். “

இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் தரப்பில், “எந்தவொரு அணிக்கும் இதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக இது சர்ச்சையாகி வருகிறது.

உலகக்கோப்பை கபடி போட்டிகளில் பங்கேற்பதற்காக வாகா எல்லை வழியாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர்.

அங்கு அந்நாட்டு கபடி கூட்டமைப்பு அலுவலர்கள், இந்திய வீரர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, லாகூரில் உள்ள விடுதிக்கு பாதுகாப்பு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.