10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் எப்போது?

புது தில்லி: புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு இது குறித்து தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக., தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கர், கோவா, ராஜஸ்தான், ஹரியாணா, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்தது. அண்மையில் மிஸோரம் ஆளுநர் அஜீஸ் குரோஷியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், மிஸோரம், மணிப்பூர், பீகார், திரிபுரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் ஆளுநர் பதவிகள் காலியாக உள்ளன. இதைத் தவிர யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிகளுக்குத் தனியாக எவரும் நியமிக்கப்படாததால் வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் சிலர் அங்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, பீகார், மேகாலயம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். நாகாலாந்து ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா, அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநர்களும் சில மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 9 மாநிலங்களுக்கு ஆளுநர்களையும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநரையும் மத்திய அரசு அறிவிக்கும் நாளை அரசியல் வட்டாரத்தில் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.