‘கொரோனா வைரஸ்’ பாதிப்புக்கு தில்லியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி நேற்றிரவு உயிரிழந்தார். இதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
உலகெங்கும் பரவி வரும் வைரஸ் தொற்றான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் கலபுர்கி (குல்பர்கா) பகுதியைச் சேர்ந்த 76 வயதான முகமது சித்திக் உசைன் என்பவர் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். அவர் அண்மையில் சௌதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியிருந்தார். இவர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்ததாக பதிவானது.
அடுத்து, தில்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகனுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை மத்திய சுகாதாரத் துறையும், தில்லி அரசும் உறுதி செய்துள்ளது! இதை அடுத்து, கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.