வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப… பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவு!

Published:

koyambedubusstation
koyambedu bus station file picture

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருப்பதால், பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். இதேபோல் பிற மாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா சென்றவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே, சென்னை உள்ளிட்ட ஊர்களில் கட்டடப் பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். கட்டுப்பாடுகளை மீறி சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக தங்க வைத்து அவர்களைப் பராமரிப்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது மட்டுமல்ல, நிதிச்சுமையும் ஏற்படுகிறது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி அண்மியில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தைக் கையாளுவது தொடர்பாக, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில்…

ஊரடங்கின் காரணமாக வேற்று மாநிலத் தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கிறார்கள். மாநில அரசுகள், அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறியவேண்டும்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

அவர்களில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டும் பஸ்களில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பஸ்களில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அந்த பஸ்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை சென்று அடைந்ததும், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களை பரிசோதித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டும்… என்று கூறப்பட்டு உள்ளது.

Related articles

Recent articles

spot_img